Published:Updated:

நெல்லை: காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு! - பைக்கில் வந்த இருவரைத் தேடும் போலீஸ்

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட காவல் நிலையம்
நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட காவல் நிலையம்

குற்ற வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட கண்ணபிரான் வந்தபோது, பைக்கில் வந்த இருவர் ஸ்டேஷன் வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினார்கள்.

தென்மாவட்டங்களில் நாட்டு வெடுகுண்டு வீசும் கலாசாரம் அதிகரித்துவருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் வல்லநாடு மலைப் பகுதியில் பதுங்கியிருந்த ரௌடியைப் பிடிக்கச் சென்ற காவலர்மீது நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்த சம்பவம் நடந்தது.

கண்ணபிரானிடம் காவல்துறை விசாரணை
கண்ணபிரானிடம் காவல்துறை விசாரணை

அதனால், வெடிகுண்டு கலாசாரம் பரவிவருவதாகச் சர்ச்சைகள் கிளம்பின. இந்தநிலையில், நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட தச்சநல்லூர் காவல் நிலைய வாசலில் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது பற்றி போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சத்திரம், புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர், கண்ணபிரான். தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவரான அவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஸ்டேஷனில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்
ஸ்டேஷனில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்

சில மாதங்களுக்கு முன்னர் தளவாய் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் கண்ணபிரான் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஜாமீன் பெற்றிருக்கும் கண்ணபிரானும் அவரது கூட்டாளிகளும் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டுவருகிறார்கள்.

கண்ணபிரான் வழக்கம்போல தச்சநல்லூர் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடுவதற்காக இன்று காலை 10:30 மணிக்குச் சென்றிருக்கிறார். அவர் ஸ்டேஷன் உள்ளே இருந்தபோது பைக்கில் வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டேஷனுக்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

காவல் நிலைய வாசலில் விழுந்த நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியிருக்கிறது. சத்தம் கேட்டு போலீஸார் வெளியே வந்தபோது மர்ம நபர்கள் இருவரும் பைக்கில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் கண்ணபிரான் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். அதற்குள்ளாக அந்த மர்ம நபர்கள் இருவரும் கண்ணபிரான் வீட்டின் அருகே ஒரு நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றிருக்கிறார்கள்.

காவல் நிலைய வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு செய்தார்கள்.

தச்சநல்லூர் காவல் நிலையம்
தச்சநல்லூர் காவல் நிலையம்

நாட்டு வெடிகுண்டு வீசிய இருவரும் இளைஞர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் பைக்கில் செல்லும் காட்சி சிசிடிவி மூலம் காவல்துறையினருக்குக் கிடைத்திருக்கிறது. அதைவைத்து குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டிவருகிறார்கள்.

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், கண்ணபிரானை மிரட்டுவதற்காக நடந்திருக்கக்கூடுமா என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், வேறு ஏதாவது உள்நோக்கத்துடன் இந்தச் சம்பவத்தைத் திட்டமிட்டு யாராவது அரங்கேற்றியிருப்பார்களோ என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு