ராணிப்பேட்டை அருகேயுள்ள காரை புதுத் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவர், அந்தப் பகுதியில் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்து, பிழைப்பு நடத்தி வந்தார். இவர் மனைவி குணசுந்தரி. மகன்கள் விக்னேஷ், ரமேஷ். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகன் விக்னேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாராம். இந்த சோகத்திலிருந்தே குடும்பம் மீளாத நிலையில், இளைய மகன் ரமேஷ் சமீபத்தில் விபத்தில் சிக்கியிருக்கிறார். தலையில் அடிபட்டதால், அவர் சுய நினைவை இழந்து அவருக்கு மனப் பிறழ்வு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக வேலூர் பாகாயத்திலுள்ள மனநல மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். ஆனாலும், ரமேஷ் அடிக்கடி ஆக்ரோஷமாக நடந்துகொள்வதால் வெறுப்படைந்த அவர் மனைவி தன் 2 வயது குழந்தையை தூக்கிக் கொண்டு கண்ணமங்கலம் பகுதியிலிருக்கும் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மேலும் வெறுப்படைந்து காணப்பட்ட ரமேஷ் நேற்று இரவு திடீரென தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மூத்த மகனைப் போன்றே இளைய மகனும் விட்டுச் சென்றதால், பெற்றோரும் விரக்தியடைந்து தூக்கில் தொங்கி தங்களது உயிரையும் மாய்த்துகொண்டனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ராணிப்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது, மூன்று பேரும் சடலமாக தூங்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இறந்தவர்களின் உடல்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
