ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் பஹதா முர்மு (45), தானி (35) என்ற தம்பதியர் வாழ்ந்துவந்திருக்கின்றனர். இவர்களுக்கு சிங்கோ என்ற மகளும் இருக்கிறார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் கணவனும் மனைவியும் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக அவர்களின் மகள் சிங்கோ கூறுகையில், "என் அம்மாவும் அப்பாவும் சனிக்கிழமை இரவு அறைக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தனர். நான் வேறோர் அறைக்குள் தூங்கிக்கொண்டிருந்தேன். நள்ளிரவு திடீரென அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, என் பெற்றோர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்தேன். உடனே என் மாமா கிசான் மராண்டிவுக்கு தொலைபேசியில் அழைத்து தகவலளித்தேன். இரவு 12:30 மணியளவில் அவருடைய மூத்த மகனுடன் மோட்டார் சைக்கிளில் எங்கள் கிராமத்துக்கு வந்தார். அதன் பிறகே காவல்துறைக்குத் தகவலளித்தோம்" எனத் தெரிவித்தார்.

காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டவுடன், காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறது. மேலும், அவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறை தரப்பு, "முதற்கட்ட விசாரணையில், தம்பதியர் சூனியம் வைத்ததாகச் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்படிருக்கின்றனர். கொலைசெய்யப்பட்டது தொடர்பாக ஒருவரைக் கைதுசெய்திருக்கிறோம். மேலும், விசாரணை நடத்திவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.