Published:Updated:

ஆன்லைன் வியாபாரம்; 2 ஆயிரம் கோடி வசூல்!- ஈரோட்டில் பிட்காயின் பெயரில் மோசடி

‘பணமா!... நான் எதுக்கு கொடுக்கணும். உன்னால என்ன செய்ய முடியுமோ செய். எங்களுக்கு சகல இடங்களிலும் செல்வாக்கு இருக்கு. ரொம்ப ஆடுன, அறுத்துப் போட்றுவேன்’ எனக் கூறி கங்காதரனை அதிர வைத்திருக்கின்றனர்.

பிட் காயின்!
பிட் காயின்!

ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, மொடச்சூர் கிராமம் திரு.வி.க 4-வது வீதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (42). இவருக்கு கடந்த மார்ச் மாதம் திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த ராஜதுரை - ஸ்வேதா என்னும் தம்பதியினர் ஆன்லைன் மூலம் அறிமுகம் ஆகியிருக்கின்றனர். ‘நாங்கள் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நொய்டாவில் ‘ஸ்டாக்கிஸ்ட் மார்ட்’ என்ற நிறுவனம் மூலம் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும்’ என வலை விரித்திருக்கின்றனர்.

ராஜதுரை - ஸ்வேதா
ராஜதுரை - ஸ்வேதா

இந்த ஆசை வார்த்தைகளைக் கேட்டு வசியப்பட்டுப் போன கங்காதரன், தன்னிடமிருந்த 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அவர்களுடைய நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டியை, முதல் நான்கு மாதங்களுக்கு கொடுத்திருக்கின்றனர். அதன்பிறகு வங்கிக் கணக்கில் பணம் ஏறவில்லை. கடுப்பாகிப் போன கங்காதரன், ஃபோன் மூலமாக ராஜதுரை - ஸ்வேதா தம்பதியினரை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார். ‘பணமா!... நான் எதுக்கு கொடுக்கணும். உன்னால என்ன செய்ய முடியுமோ செய். எங்களுக்கு சகல இடங்களிலும் செல்வாக்கு இருக்கு. ரொம்ப ஆடுன, அறுத்துப் போட்றுவேன்’ எனக் கூறி கங்காதரனை அதிர வைத்திருக்கின்றனர்.

அதன்பிறகு களத்தில் இறங்கி விசாரித்த கங்காதரனுக்கு, நிறுவனம் போலியானது என்பது மட்டுமல்ல, நம்மைப் போல பலரிடமும் இப்படி ஆசை வார்த்தைகளைக் கூறி, கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்திருக்கிறார்கள் என தெரியவந்திருக்கிறது. மேலும், ‘பிட் 2 பிடிசி.காம்’ என்ற பெயரில் பிட்காயின் மோசடியில் 2 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரிந்து அதிர்ந்து போயிருக்கிறார். இதனையடுத்து, தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களை ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டுமென புகார் மனு அளித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட கங்காதரனிடம் பேசினோம், ``ஈரோடு பேருந்து நிலையம் அருகே வைத்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை ராஜதுரை - ஸ்வேதா தம்பதியினரிடம் கொடுத்தேன். அப்போது அவர்களுடைய டிரைவர் வேலுச்சாமி, மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார், திருச்சியைச் சேர்ந்த குட்டிமணி ஆகியோர் உடனிருந்தனர். முதல் 4 மாதங்களுக்கு முறையாக 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வந்தனர். அதன்பிறகு அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள் கோபிச்செட்டிபாளையம் காவல் நிலையத்தில் மனு அளித்தபோது
பாதிக்கப்பட்டவர்கள் கோபிச்செட்டிபாளையம் காவல் நிலையத்தில் மனு அளித்தபோது

பணத்தை திரும்பக் கேட்டால், ‘உங்க பணத்தை பிட்காயினாக மாத்தி வச்சிருக்கோம். அத்தனையும் வெளிநாட்டு டாலராக இருக்கு. கொஞ்ச நாள் வெயிட் பண்ணா அதிக வட்டியுடன் திரும்பக் கிடைக்கும்’ன்னு சொன்னாங்க. அதெல்லாம் முடியாது எங்க பணத்தைக் கொடுங்கன்னு சொன்னா `செல்வாக்கு இருக்கு, கொன்னுடுவேன்னு' மிரட்டுறாங்க.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இவர்களின் ஆயிரக்கணக்கான முகவர்கள் மூலம் பல ஆயிரம் கோடிகளை சுருட்டியிருக்கின்றனர். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை மூலமாகவும் பெரும் பணம் குவித்திருக்கின்றனர். இதுசம்பந்தமாக கோபிச்செட்டிபாளையம் ஸ்டேஷன்ல எங்க புகாரை எடுக்க மாட்டேங்குறாங்க.

பண மோசடி விவகாரம்ங்கிறதால மாவட்ட குற்றப்பிரிவுல போய் புகார் கொடுங்கன்னு சொல்றாங்க. மோசடி செஞ்சவங்க எனக்கு கொலை மிரட்டல் விடுராங்க, அதுக்கு நடவடிக்கை எடுங்கன்னு சொன்னா முடியாதுங்கிறாங்க. திங்கட்கிழமை பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவிற்கு திரளாகச் சென்று புகார் அளிக்கவிருக்கிறோம். மீதியெல்லாம் காவல்துறையின் கையில் தான் இருக்கிறது” என்றார்.

இது தொடர்பாக போலீஸாரிடம் பேசினோம், ``இது பண மோசடி விவகாரம்ங்கிறதால மாவட்ட குற்றப்பிரிவுல போய் புகார் கொடுக்க சொன்னோம். அவ்ளோ தான்” என்றனர்.