Published:Updated:

காருக்குள் மிளகாய்த்தூள்... இரண்டு நாள் மாயம்!- பத்திரிக்கை கொடுக்க வந்த தங்கையைக் கொலைசெய்த அக்கா

கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே அனாதையாக நின்ற காரில் வந்த கணவன்-மனைவி மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது.

கார்
கார் ( நா.ராஜமுருகன் )

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் உள்ள சுக்காலியூர் அருகே, நேற்று முன்தினம் காலை முதல் சர்வீஸ் ரோடு ஓரமாக, டாடா இண்டிகா கார் ஒன்று நின்றிருக்கிறது. காலை முதல் இரவு வரை அந்த கார் அங்கே நின்றிருப்பதைக் கண்டு சந்தேகித்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ரோந்து ஊழியர்கள், தாந்தோணிமலை காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில், அந்த காரை கைப்பற்றிய போலீஸார், தாந்தோணிமலை காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்றனர்.

கார் நின்ற இடம்
கார் நின்ற இடம்
நா.ராஜமுருகன்
Vikatan

அங்கு வைத்து அந்தக் காரை சோதனையிட்டனர். அப்போது, அங்கு காரினுள் திருமணப் பத்திரிக்கைகள் நிறைய இருந்தன. அந்தப் பத்திரிக்கைகளை வைத்து, அதில் உள்ள செல்போன் நம்பரைத் தொடர்புகொண்டு போலீஸார் விசாரணைசெய்தனர்.

அப்போது, அந்த காரில் வந்தவர்கள் மதுரையைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் வசந்தாமணி என்றும், தங்களது மகன் திருமணத்திற்காகப் பத்திரிகை வைக்க, வெள்ளக்கோவில் சென்றுவிட்டு திரும்பியுள்ளனர் என்றும் தெரியவந்தது. கரூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நிமிர்த்தமாக மதுரை சென்று அங்கேயே குடியிருந்து வருகிறார்.

வசந்தாமணி (செல்வராஜ் மனைவி)
வசந்தாமணி (செல்வராஜ் மனைவி)
நா.ராஜமுருகன்

மதுரையில், நிதி நிறுவனம் நடத்திய செல்வராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், அந்த இண்டிகா கார் டிக்கியில், அரிசி மற்றும் மளிகை சாமான்கள் ஏற்றிக்கொண்டு, தங்கை வீட்டுக்குக் கொண்டு சென்றதும் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்கள் வீடு திரும்பவில்லை என்று அவர்கள் உறவினர் தெரிவித்துள்ளனர்.

10-ம் தேதி, வெள்ளக்கோவிலில் உள்ள அக்கா வீட்டுக்கு திருமணப் பத்திரிக்கை வைத்துவிட்டு, இரவு 8.30 மணி அளவில் திரும்பிய செல்வராஜ் மற்றும் அவரது மனைவி வசந்தாமணி ஆகியோர், மதுரையில் உள்ள வீட்டுக்கு வரவில்லை. வேறு எங்கும் சென்றதாகவும் தெரியவில்லை. இதுகுறித்து, அவர்களது உறவினர்கள், கரூர் தாந்தோணிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், டாட்டா இண்டிகா காரில் டிரைவர் சீட் மற்றும் பின்புற இருக்கைகளில் பல இடங்களில் மிளகாய்த்தூள் தூவப்பட்டு இருப்பதைக் கண்டறிந்தனர்.

காரில் மிளகாய்பொடி
காரில் மிளகாய்பொடி
நா.ராஜமுருகன்

இதனால், இவர்களை யாராவது கடத்திச் சென்றார்களா... அப்படி கடத்தியிருந்தால், எதற்காகக் கடத்தினார்கள் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணைசெய்தனர். போலீஸாரின் மோப்ப நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க, மிளகாய்ப்பொடி தூவியிருக்கிறார்களா... அல்லது அவர்கள் இருவரது கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி கடத்திச் சென்றார்களா... என்ற கோணங்களில் தாந்தோணிமலை போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், வெள்ளகோவிலில் உள்ள அக்கா வீட்டிலேயே அவர்கள் கொலைசெய்து புதைக்கப்பட்டது காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கா கண்ணம்மாவை வெள்ளகோவில் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். அக்காவே கொலை செய்தாரா அல்லது கூலிப்படையை வைத்துக் கொலை செய்தாரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.