Published:Updated:

கவுந்தப்பாடியில் தம்பதி தற்கொலை - கடனை கட்ட முடியாததால் விபரீத முடிவு?!

திருமூர்த்தி - சித்ரா

வங்கிக் கடனையும் செலுத்த முடியாமல், வெளியில் வாங்கிய கடனையும் செலுத்த முடியாமல் இருப்பதை நினைத்து மனம் உடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் அருந்தியதாக சொல்லப்படுகிறது.

கவுந்தப்பாடியில் தம்பதி தற்கொலை - கடனை கட்ட முடியாததால் விபரீத முடிவு?!

வங்கிக் கடனையும் செலுத்த முடியாமல், வெளியில் வாங்கிய கடனையும் செலுத்த முடியாமல் இருப்பதை நினைத்து மனம் உடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் அருந்தியதாக சொல்லப்படுகிறது.

Published:Updated:
திருமூர்த்தி - சித்ரா

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (48). இவருக்கு சித்ரா (42) என்ற மனைவியும், கார்த்திக்ராஜா (21) என்ற மகனும் உள்ளனர். கார்த்திக்ராஜா டிப்ளமோ படித்து விட்டு சுகாதார ஆய்வாளருக்கான கோர்ஸை முடித்து வீட்டில் இருந்தார். திருமூர்த்தி கவுந்தப்பாடியில் உரக்கடை நடத்தி வந்தார். இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் கடன் வாங்கி அய்யம்பாளையத்தில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வந்தார்.

அண்மைக் காலமாக இவரின் உரக்கடையில் போதுமான வியாபாரம் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வங்கிக்கு மாதந்தோறும் செலுத்த வேண்டிய வீட்டுக் கடனை செலுத்த முடியாமல் திருமூர்த்தி சிரமப்பட்டு வந்துள்ளார். வங்கிக் கடனை திருப்பி கட்டுவதற்காக கடந்த சில மாதங்களாக நண்பர்களிடம் இருந்தும் உறவினர்களிடமிருந்தும் கடன் வாங்கி செலுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் வெளியில் இருந்து வாங்கிய கடன் தொகையையும் அடைக்க முடியாமல் திருமூர்த்தி மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.

இந்நிலையில் திருமூர்த்தி தம்பதியினரின் ஒரே மகனான கார்த்திக் ராஜா, நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் கோவையிலிருந்து வந்திருப்பதாகக் கூறி அவருடைய வீட்டில் தங்குவதற்காக சென்று விட்டார்.

சித்ரா
சித்ரா

நேற்று இரவு திருமூர்த்தியும் சித்ராவும்  வீட்டில் இருந்தபோது கடன் தொல்லையால் அவதிப்படுவதை நினைத்து கடும் வேதனை அடைத்தனர். வங்கிக் கடனையும் செலுத்த முடியாமல், வெளியில்  வாங்கிய கடனையும் செலுத்த முடியாமல் இருப்பதை நினைத்து மனம் உடைந்த நிலையில், இருவரும்  தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் அருந்தியதாகத் தெரிகிறது.
இவர்கள் இருவரும் அவர்களது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் விஷம் அருந்தி இறந்த நிலையில் கிடந்தனர்.

இன்று காலை வீட்டுக்கு வந்த கார்த்திக்ராஜா, மேல் மாடியில் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தாய், தந்தை இருவரும் விஷம் அருந்தி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு கதறி அழுதார். இதையடுத்து கவுந்தப்பாடி போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருமூர்த்தி வங்கியில் செலுத்த வேண்டிய கடன் எவ்வளவு என்பதும், வெளியில் அவருக்கு எவ்வளவு கடன் உள்ளது என்பது குறித்தும் அவரின்  ஒரே மகனான கார்த்திக்ராஜாவுக்கு கூட தெரியவில்லை. அதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.