சென்னை பல்லவன் சாலை, எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் மனைவி சுதா (25). சுதாவிடம் வரதட்சணைக் கேட்டு ராஜா, அவரின் சகோதரி ஆனந்தி ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்தனர். அதனால் மனமுடைந்த சுதா, கடந்த 16.5.2016-ம் ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சுதாவின் அம்மா சரஸ்வதி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து ராஜா, ஆனந்தி ஆகியோரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிகுளம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தினர். மேலும் வழக்கை முறையாக கவனித்து நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து 31.5.2022-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுதாவின் கணவர் ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ராஜாவின் சகோதரி ஆனந்திக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்தத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுத்த திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர், நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.