ராமநாதபுரம் மாவட்டம், வாணி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் அப்துல்கபூர். கோழிக்கறிக்கடை நடத்திவரும் இவரின் மனைவி பெயர் சபிதாபானு (52). இவர் வட்டிக்குப் பணம் கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது.
ராமநாதபுரம், சிவஞானபுரம், புதுப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவரான முகமது அரபுதீன் என்ற ரபீக் (33), கடந்த 2013, ஜூன் மாதம் தன் பெரியம்மா உறவு முறையுள்ள சபிதாபானுவிடம் தொழில் தொடங்கப் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு சபிதாபானு மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ரபீக், இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சபிதாபானுவைச் சரமாரியாகக் குத்திக் கொலைசெய்தார்.

சபிதாவின் அலறல் சத்தம் கேட்டு, அவரின் மருமகள் ஜெஸிமாபானு (23) மாடியிலிருந்து கீழே வந்திருக்கிறார். அப்போது ரபீக் அவரையும் கத்தியைக் கொண்டு தாக்கியிருக்கிறார். அதில் அவர் பலத்த காயமடைந்தார். அதையடுத்து, ரபீக் அங்கிருந்து தப்பியோடினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கேணிக்கரை போலீஸார் சபிதாபானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு முகமது அரபுதீன் என்ற ரபீக்கைக் கைதுசெய்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது.

தற்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரபீக்குக்கு மூன்று ஆயுள் தண்டனையும், ரூ.2.5 லட்சம் அபராதமும், அதைக் கட்டத்தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.சுபத்ரா உத்தரவிட்டிருக்கிறார்.