திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் சென்னையில் தங்கியிருந்து, கடந்த 2016-ம் ஆண்டு வேலை பார்த்துவந்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தகுமார் என்ற இளைஞர் வேலை பார்த்தார். அவர் உமாவை ஒருதலையாகக் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. உமாவிடம் காதலை ஏற்றுக்கொள்ளும்படி அரவிந்தகுமார் பலதடவை கூறியும் அவர் சம்மதிக்கவில்லை. அரவிந்தகுமாரின் காதல் டார்ச்சர் காரணமாக உமா வேலையைவிட்டு நின்றுவிட்டார்.
இதையடுத்து கடந்த 27.10.2016-ம் தேதி சொந்த ஊருக்குச் செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு உமா வந்தார். அப்போது அங்கு வந்த அரவிந்தகுமார், தன்னைக் காதலிக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார். அதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்தகுமார், மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து உமாவைக் குத்தினார். அதில் உமாவின் முகம், கைகளில் காயம் ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த உமா மயக்கமடைந்தார். அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிர்பிழைத்துக்கொண்ட உமா, கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் அரவிந்தகுமார்மீது கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வழக்கு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கோயம்பேடு போலீஸார் கண்காணித்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அரவிந்தகுமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.