Published:Updated:

சினிமா ஆசை... வளைக்கப்பட்ட இளம்பெண்கள்!- யார் இந்த மாடலிங் ஆண்டனி?

சென்னையில் சினிமா கனவோடு போட்டோ ஷூட்டுக்குச் சென்ற இளம்பெண்களின் எதிர்காலம் மாடலிங் ஆண்டனி என்பவரால் கேள்விக்குறி ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டனி
ஆண்டனி

சென்னையைச் சேர்ந்த 52 வயதாகும் பெண் ஒருவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், ``நான் கிருகம்பாக்கத்தில் குடியிருந்துவருகிறேன். எனக்கு திருமணமாகவில்லை. நான் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக தனியார் கம்பெனியில் வேலை பார்த்தேன். குடும்பச் சூழ்நிலை காரணமாக அந்த வேலையை விட்டுவிட்டேன். புதிய வேலை தேடிக் கொண்டிருந்த சமயத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் செப்டம்பர் மாதம் வெளியான விளம்பரம் பார்த்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்தேன்.

CHEAT
CHEAT

அப்போது என்னுடைய பயோடேட்டாவையும், செல்நம்பரையும் இ-மெயில் முகவரியையும் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய செல்போனுக்கு ரேச்சல் என்பவர் பேசினார். அவர், அசோக்நகரில் உள்ள ஹோட்டலுக்கு இன்டர்வியூவுக்கு வரும்படி கூறினார். அப்போது ஆண்டனி என்பவரை ரேச்சல் அறிமுகப்படுத்திவைத்தார். ஆண்டனி என்பவர் என்னிடம் தன்னை பிரபலமான ஐ.டி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறேன். எங்கள் நிறுவனம் சார்பில் அமெரிக்கா சார்ந்த பல புராஜெக்ட் நடந்துவருகின்றன என்று கூறினார். அதை முழுமையாக நம்பினேன். பிறகு என்னுடைய சம்பளத்துக்காக பூந்தமல்லியில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை ஆண்டனி கேட்டார். அதையும் அவரிடம் கூறினேன்.

பிறகு என்னை அவருடைய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். பயிற்சிக் காலம் என்பதால் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறினார். அந்தச் சம்பளத்துக்கு கடந்த ஒரு மாதமாக அங்கு வேலை பார்த்துவந்தேன். வேலைக்குச் சென்றபோது என்னுடைய செல்போன் மற்றும் வங்கியின் கிரெடிட் கார்டு ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டார். ஏன் என்று ஆண்டனியிடம் கேட்டதற்கு பணி நேரத்தில் செல்போன்கள், வங்கிப் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக் கூடாது என்று கூறினார். அதையும் நம்பினேன்.

தேனாம்பேட்டை காவல் நிலையம்
தேனாம்பேட்டை காவல் நிலையம்

இந்தச் சமயத்தில் என்னுடைய கிரெடிட் கார்டிலிருந்து இரண்டு நாள்களில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. அந்த மெசேஜைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். வங்கியில் சென்று விசாரித்தபோது அது ஆண்டனியின் வங்கி அக்கவுன்ட்டுக்குச் சென்றது தெரியவந்தது. இதை நான் ஆண்டனியிடம் கேட்டதற்கு அவர் என்னை மிரட்டுகிறார். வேலைக்குச் சென்ற இடத்தில் என்னை 10 லட்சம் ரூபாய்க்குக் கடனாளியாக்கிய ஆண்டனி மற்றும் ரேச்சல் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சென்ற பெண்ணை சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஆண்டனி என்பவர் புத்திசாலித்தனமாக ஏமாற்றியுள்ளார். ஆண்டனி தி.நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதை அலுவலகமாக நடத்திவருகிறார். இந்த அலுவலகம் கடந்த ஒரு மாதத்துக்குமுன்புதான் செயல்பட்டுவந்துள்ளது. அலுவலகத்தை நடத்தும் ஆண்டனியும் அவருக்கு உதவியாக இருக்கும் ரேச்சலும் சேர்ந்து ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

புகார் மனு
புகார் மனு

புகார் கொடுத்த பெண்ணின் குடும்பச் சூழல்களை இன்டர்வியூவின்போது தெரிந்து கொள்ளும் ஆண்டனி அதன்பிறகு அவரை ஏமாற்றுவது குறித்து திட்டம் போட்டுள்ளார். பணிக்கு வந்த அந்தப் பெண்ணின் செல்போன், கிரெடிட் கார்டை வாங்கி வைத்துக் கொண்ட ஆண்டனி, அதன் மூலம் தன்னுடைய ஏமாற்று வேலையை நடத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் கிரெடிட் கார்டு மூலம் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை தன்னுடைய அக்கவுன்ட் நம்பருக்கு மாற்றியுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணின் செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

இப்படிதான் அந்தப் பெண்ணின் கிரெடிட் கார்டு மூலம் 10 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். ஆண்டனி மீது பல மோசடி வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுதொடர்பான தகவல்களையும் சேகரித்துவருகிறோம். ஆண்டனி, மாடலிங் பெண்களை போட்டோ, வீடியோ எடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டுவந்துள்ளார். நுனி நாக்கு ஆங்கிலம், டிப்டாப் டிரஸ் என பந்தாவாக வலம் வரும் ஆண்டனி, தன்னுடைய காரில் பிரஸ் ஸ்டிக்கரையும் ஒட்டி வைத்துள்ளார். சினிமா ஆசையில் போட்டோ ஷூட்டுக்கு வந்த இளம்பெண்களின் எதிர்காலத்தையும் ஆண்டனி கேள்விக்குறி ஆக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது" என்றனர்.

`இரண்டு வாரத்தில் 23 திருமணங்கள், 23 விவாகரத்துகள்! - இலவச வீட்டுக்காக மோசடி செய்த சீன குடும்பம்

ஆண்டனியின் மோசடி பின்னணி குறித்து விவரித்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சினிமா கனவில் இருக்கும் பெண்களின் பின்னணிகளை முதலில் ஆண்டனி தெரிந்துகொள்வார். இதற்காக அவர், சில பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இன்டர்வியூ மற்றும் வேலைக்குச் சேர்ந்த பிறகு அந்தப் பெண்கள் வேலைக்குச் சேர்பவர்களிடமும் சினிமா ஆசையில் வரும் இளம்பெண்களிடமும் நெருங்கிப் பழகுவார். பிறகு சினிமா ஆசையில் வரும் பெண்களை பல மாடல்களில் போட்டோ, வீடியோ எடுப்பார். அந்த வீடியோவை வைத்து சில பெண்களிடமும் பணம் பறிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி பணத்தை இழந்த பெண்கள் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதற்கிடையில், தனக்குப் பாதுகாப்பாக 3 பவுன்ஸர்களை ஆண்டனி நியமித்துள்ளார். அவர்களைத் தாண்டி ஆண்டனியின் அறைக்கு யாரும் செல்ல முடியாது. மேலும் அவரின் அலுவலகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. `தனக்கு தமிழே தெரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள்' என்று சொல்லும் ஆண்டனிக்கு இன்னமும் திருமணமாகவில்லை" என்றார்.