Published:Updated:

க்ரைம் ஸ்பெஷல்: கேங்ஸ்டர் அங்கொட லொக்காவின் க்ரைம் ஹிஸ்டரி

க்ரைம் ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
News
க்ரைம் ஸ்பெஷல்

இலங்கை டு கோவை மர்ம முடிச்சுகள் அவிழுமா?

கத்தி, துப்பாக்கி, ரத்தத்துடன் நிறைய மர்மங்களும் பிணைந்திருப்பதுதானே தாதாக்களின் வாழ்க்கை! இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா மரணம் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன... கோவையில் அவர் மரணமடைந்ததாகச் சொல்லப்படும் வழக்கும் ஏராளமான மர்ம முடிச்சுகளால் கட்டப்பட்டதுதான்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அங்கொட லொக்கா... இந்தப் பெயர் தமிழகத்துக்கு மிகவும் புதிது. ஆனால், இலங்கையில் அது `மோஸ்ட் வான்டடு’ தாதாவின் பெயர். அங்கொட லொக்கா யார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, இந்த வழக்கு எப்படி ஆரம்பித்தது என்பதைத் தெரிந்துகொள்வோம். மதுரை வழக்கறிஞர் சிவகாமசுந்தரி, ‘கோவை சேரன்மாநகர் பகுதியில் வசித்த என் சித்தப்பா மகன் பிரதீப் சிங் மாரடைப்பால் இறந்துவிட்டார். உறவினர் களெல்லாம் மதுரையில் இருக்கிறார்கள். எனவே, அவரது உடலை மதுரைக்கு எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும்’ என பீளமேடு போலீஸில் மனு கொடுக்கிறார். கூடவே, பிரதீப் சிங்கின் ஆதார் அட்டை நகலையும் கொடுக்கிறார். கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, பிரதீப் சிங் உடல், மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டும்விட்டது.

கோவை வீடு
கோவை வீடு

சிக்கவைத்த போலி ஆதார்!

இதற்கிடையே, இலங்கையைச் சேர்ந்த அங்கொட லொக்கா என்ற தாதா, தமிழகத்தில் ஒரு பெண் மூலம் விஷம்வைத்து கொல்லப் பட்டதாகத் தகவல்கள் கசிந்தன. தூதரகம் மூலம் நம் போலீஸின் உதவியை நாடியது இலங்கை. இறந்துபோனதாகச் சொல்லப்படும் பிரதீப் சிங் உடனிருந்த அமானி தான்ஜி என்ற பெண் இலங்கையைச் சேர்ந்தவர். எனவே, இதில் சந்தேகமடைந்த போலீஸார் விசாரித்தனர். இதில் சிவகாமசுந்தரி கொடுத்த ஆதார் கார்டு போலியானது என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்ததில், அடுத்த `பகீர்’ வெளியானது.

அது, ‘உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது பிரதீப் சிங் இல்லை; அது அங்கொட லொக்கா’ என்பதுதான். உடனடியாக சிவகாமசுந்தரி, லொக்காவுடன் தங்கியிருந்த அமானி தான்ஜி, அவர்களுக்கு உதவிய தியானேஸ்வரன் ஆகிய மூன்று பேரைக் கைது செய்தது போலீஸ். லோக்கல் போலீஸாரால் அடுத்தகட்ட நகர்வுகளை எடுக்க முடியவில்லை. காரணம், லொக்கா நிழல் உலக தாதா. இதனால், ‘வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும்’ என லோக்கல் போலீஸ் கோரிக்கை விடுக்க, உடனடியாக அதற்கு டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டார். இப்போது, அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்துவருகிறது.

அங்கொட லொக்கா
அங்கொட லொக்கா

யார் இந்த அங்கொட லொக்கா?

துப்பாக்கிகளுடன் வலம்வரும் கேங்ஸ்டர்கள் இலங்கையில் அதிகம். இவர்களுக்கு ‘பிளாக் ஆம்புலன்ஸ்’ என்ற பெயருண்டு. இந்த கேங்ஸ்டர்களுக்கு அங்கு ஆட்சியாளர்களின் ஆசி உண்டு என்றும் கூறப்படுகிறது. அப்படித்தான் அங்கொட லொக்கா என்கிற மதுமா சந்தன லசந்தா பெரேராவும் (இயற்பெயர்) வலம்வந்தான். 2011-ம் ஆண்டிலிருந்து எட்டுப் பேரை பிஸ்டலால் சுட்டுக் கொன்றிருக்கிறான். அவனின் போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க்கும் மிகப்பெரியது. மற்றவர்களைப்போல இல்லாமல், கழுகுகள் மூலம் போதைப் பொருள்களை கடத்துவான். இதற்காகவே, கழுகுகளுக்குச் சிறப்புப் பயிற்சி கொடுத்து வளர்த்து வந்தான். நாளடைவில் மிகப்பெரிய கேங்ஸ்டராக உருவானான். ராஜபக்சே அதிபராக இருந்தபோது, லொக்கா பெரிய அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளான்.

கேங்ஸ்டர்களுக்குள் கடுமையான போட்டியும் நிலவியது. இதில், 2017-ம் ஆண்டு மற்றொரு கேங்ஸ்டர் கும்பலை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனம்மீது லொக்கா துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அவனது கொலைப்பட்டியல் 15 ஆக உயர்ந்தது. அதில், போலீஸார் சிலரும் காயமடைந்தனர். அதன் பிறகு, லொக்காவை இலங்கை போலீஸார் விரட்டத் தொடங்கினார்கள். அவனைக் கைது செய்ய இன்டர்போல் ரெட் நோட்டீஸ் விநியோகித்தது. வேறு வழியில்லாமல், உயிர் பயத்தில் சட்ட விரோதமாக இந்தியா வந்துள்ளான் லொக்கா.

பெங்களூரு, சென்னை, கோவை, மதுரை என்று பல இடங்களில் சுற்றியுள்ளான். 2017-ம் ஆண்டு, சென்னையில் ஒருமுறை போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப் பட்டான். பிறகு ஜாமீனில் வெளிவந்து, தலைமறைவாகி விட்டான். லொக்காவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்தவர்தான் மதுரை வழக்கறிஞர் சிவகாமசுந்தரி. சுந்தரியின் தந்தைக்கு, இலங்கையில் சில கும்பல்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர் மூலம், அந்த கும்பல்களுக்கு சட்ட உதவிகள் செய்துள்ளார் சுந்தரி. லொக்கா சில நாள்கள் சிவகாமசுந்தரியின் வீட்டிலும் தங்கியிருந்திருக்கிறான்.

அமானி தான்ஜி
அமானி தான்ஜி

கொலையா... நாடகமா?

லொக்கா ஆரம்பத்தில் கோவை சரவணம்பட்டியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்துள்ளான். தான் வலைவீசித் தேடப்படுவதை அறிந்ததும், தன் இருப்பிடத்தை மாற்ற முடிவு செய்தான் லொக்கா. அப்போதுதான், தன்னுடன் பெங்களூருவில் சட்டம் படித்த தியானேஸ்வரனின் உதவியை நாடியுள்ளார் சிவகாமசுந்தரி. தியானேஸ்வரன் தனக்கு வீடு வேண்டும் என அமெரிக்காவில் இருக்கும் கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட நண்பரிடம் பேசியுள்ளார்.சேரன்மாநகரிலுள்ள அவரது வீடு கிடைத்தவுடன், ‘லொக்காவும் அமானி தான்ஜியும் துபாயைச் சேர்ந்தவர்கள். ஊரடங்கு காரணமாக, விமானமில்லாமல் இங்கு சிக்கிக்கொண்டனர். அதனால், ஊரடங்கு முடியும் வரை இங்கு தங்குவார்கள்’ என நண்பரிடம் பேசி அவர்களைத் தங்கவைத்துள்ளார்.

லொக்காவுக்குத் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். அதேபோல, அமானி தான்ஜிக்கும் திருமணமாகி குழந்தை இருக்கிறது. தான்ஜியின் கணவரும் கேங்ஸ்டர்தான். அவரை லொக்காதான் கொன்றான் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் தான்ஜிக்கும் லொக்காவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தலைமறைவாக இருந்த லொக்காவைப் பார்க்க தான்ஜி ஏற்கெனவே மூன்று முறை இங்கு வந்திருக்கிறார். கடைசியாக அவர் மார்ச் மாதம் வந்திருக்கிறார். பிறகு ஊரடங்கு காரணமாக நாடு திரும்ப முடியாமல் இங்கேயே தங்கிவிட்டார். ஜூலை 3-ம் தேதி லொக்கா வுக்கு நெஞ்சுவலி என சிவகாமசுந்தரிக்கு போனில் தகவல் வந்தது.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு லொக்காவை எடுத்துச் சென்றபோது, அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர். இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் சிவகாமசுந்தரி மருத்துவ நடைமுறைகளுக்காக போலீஸிடம் சென்றுள்ளார்.

இதனிடையே, இலங்கையில் பிடிபட்ட லொக்காவின் கூட்டாளிகள், ‘‘இந்தியாவில் அழகுக்கலை பெண் ஒருவர் மூலம் லொக்கா விஷம்வைத்து கொல்லப்பட்டுவிட்டார்’’ என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். அதாவது, தன் கணவரைக் கொன்றதற்காக அமானி தான்ஜி, திட்டமிட்டு லொக்காவுடன் பழகி பழி தீர்த்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகாமசுந்தரி - தியானேஸ்வரன்
சிவகாமசுந்தரி - தியானேஸ்வரன்

தான்ஜி இரண்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு, கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. அவர் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விவகாரத்தில், ‘கோவையில் இறந்த லொக்காவின் உடலை எதற்காக மதுரை சென்று எரிக்க வேண்டும்?’ என்ற கேள்வியும் எழுகிறது. இதன் பின்னணியை விசாரித்தால் இறந்தது லொக்காதானா என்பதும் உறுதியாகவில்லை. காரணம், தன்னைத் தேடி வருவதால், ‘‘இப்படியொரு இறப்பு நாடகத்தை லொக்காவே நடத்திவிட்டு, இன்னும் சுதந்திரமாக நடமாட திட்டமிட்டிருக் கலாம்’’ என்று சொல்கிறார்கள். எனவே, லொக்காவின் மரணத்தை இலங்கையில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ‘இது இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் காலகட்டம். இந்த நேரத்தில், இந்த வழக்கைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள்’ எனவும் லொக்கா திட்ட மிட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கோட்டைவிட்டதா போலீஸ்?

இந்த வழக்கில் லோக்கல் போலீஸ் முறையாக விசாரித்திருந்தால், அவர்களை ஆரம்பத்திலேயே பிடித்திருக்க முடியும். ஆனால், போலீஸார் அப்போது கோட்டைவிட்டதாகவும் சொல்கிறார்கள். இது குறித்து போலீஸார் மற்றும் சி.பி.சி.ஐ.டி வட்டாரங்களில் விசாரித்தோம். ‘‘தங்க ஆபரணங்கள்மீது அதிக ஆர்வம் கொண்டவன் லொக்கா. இலங்கையில், நடமாடும் நகைக்கடையாகவே வலம்வந்தான். ஜிம் பாடியுடன் பயங்கர ஸ்டைலாக இருந்தான். ஆனால், இந்தியாவுக்கு வந்தவுடன் சந்தனப்பொட்டு, குறுந்தாடி என நம் ஊர் ஸ்டைலுக்கு மாறிவிட்டான். இங்கும் தங்க செயின், பிரேஸ்லெட்டை அவன் விடவில்லை.

அதேநேரத்தில், அவன் தன்னை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க மூக்குப் பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறான். இலங்கையில் எடுக்கப்பட்ட அவனது புகைப்படத்துக்கும், இங்குள்ள படத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மதுரை, கொல்கத்தா என்று இரண்டு முகவரியில் போலி ஆதார் கார்டுகளை எடுத்திருக்கிறான். இங்கு லோக்கலிலுள்ள ஜிம்களில் புரோட்டீன் பவுடர்களை சப்ளை செய்துவந்தான். ஆனால், அவனிடம் போதுமான அளவுக்குப் பணம் இருந்தது. அதைவைத்து, அவன் சினிமாவில் நடிப்பதற்கும் திட்டம் வைத்திருந்தான். தனக்கு ஒரு புல்லட்டும், தான்ஜிக்கு இருசக்கர வாகனமும் வாங்கியுள்ளான். இங்கிருந்தபடியே தனது போதைப் பொருள் நெட்வொர்க்கையும் அவன் இயக்கிவந்திருக்கிறான்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிருந்தபடியே, தன் கூட்டாளிகளை வாட்ஸ்அப் காலில் வழிநடத்தி, ஒரு கொலையும் செய்திருக்கிறான். சிங்களவனாக இருந்தாலும் தமிழ், இந்தி பேசுவான். அவனிடமிருந்த வெளிநாட்டு கரன்ஸிகள், மொபைல், லேப்டாப், சிம் கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்’’ என்றனர்.

சேரன்மாநகர் பகுதி மக்களிடம் பேசிய போது, ‘‘அவங்க தங்கியிருந்தது தனி வீடு. வெளியாட்கள் பெருசா வந்த மாதிரி தெரியலை. இவங்களும் யார்கிட்டேயும் பேச மாட்டாங்க. அந்த ஆள் ஒரு செயின் ஸ்மோக்கர். சிகரெட் வாங்க அடிக்கடி கடைக்கு வருவார். காலை, மாலை வாக்கிங் வருவார். சில சமயம் இங்கே ஹோட்டல்ல சப்பாத்தி வாங்குவார். பெரும் பாலும், ஆன்லைன்ல ஆர்டர் செஞ்சுதான் சாப்பிடுவாங்க. துபாய்ல வியாபாரம் செய்யறதா சொன்னார்். அவர் போட்டிருக்கற நகைகளைவெச்சு பெரிய ஆளுன்னு நினைச்சோம். அந்தப் பெண் யாரிடமும் பேச மாட்டார்’’ என்றனர்.

சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி-யான சங்கர், ‘‘இந்த வழக்கு தொடர்பாக இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஏழு தனிப்படைகள் அமைத் துள்ளோம். மதுரை, ஈரோடு, திருப்பூரில் விசாரணை நடத்திவருகிறோம். கைது செய்யப்பட்டவர்களை விரைவில் கஸ்டடி எடுத்து விசாரிக்கவுள்ளோம். இவர்களுக்கு இன்டர்நேஷனல் நெட்வொர்க் இருப்பதால் இந்திய உளவு அமைப்பான ‘ரா’, இலங்கை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை நடத்திவருகிறோம். பிரேத பரிசோதனை முடிவு களுக்காகக் காத்திருக்கிறோம். அதேபோல, டி.என்.ஏ சோதனை செய்து, இறந்தது அங்கொட லொக்காதானா என்பதையும் கண்டறியவிருக் கிறோம். எல்லா மாதிரிகளும் எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்’’ என்றனர்.

மர்ம முடிச்சுகள் அவிழ்வது எப்போது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள்!

வழக்கறிஞர் என்றாலும் சிவகாமசுந்தரி மதுரை நீதிமன்ற வட்டாரத்தில் அதிகம் அறியப்படாத நபராகவே இருக்கிறார். அவரின் பெற்றோர் ஆரம்பத்தில் கூடல்புதூர் இலங்கை அகதிகள் முகாம் அருகில் தேநீர் கடை நடத்திவந்துள்ளனர். அதன் மூலம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் பழக்கம் என்று கூறப்படுகிறது. மதுரை, ரயிலார் நகரில் தங்கள் வீட்டினருகில் ஒரு வீடு பிடித்து, அங்கொட லொக்காவைத் தங்கவைத்துள்ளார். ‘சிலிண்டர் பதிய வேண்டும்’ என்று அந்த வீட்டு உரிமையாளரிடம் குடும்ப அட்டையைப் பெற்று அதன் மூலம் லொக்காவுக்கு போலி ஆதார் அட்டையைப் பெற்றுள்ளனர்.

சிவகாமசுந்தரியின் பெற்றோர் தினகரன்- பாண்டியம்மாளிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ‘‘துபாயிலிருக்கும் நபர் மூலமாக சிவகாமசுந்தரிக்கு அங்கொட லொக்கா அறிமுகமானார்’’ என்று கூறியுள்ளனர். கோவையிலிருந்து லொக்காவின் உடல் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டு மயானத்தில் உடல் எரிக்கப்பட்டது குறித்த சி.சி.டி.வி பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.