Published:Updated:

`கொலை, கல்வீச்சு, குப்புறக் கவிழ்ந்த கார்!' - ரூ.34 கோடி மது விற்பனையால் களேபரமான கோவை

கோவை
கோவை

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் நேற்று ஒரேநாளில் கொலை, கல்வீச்சு, விபத்து என்று பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.

தமிழகத்தில் கடந்த 40 நாள்களுக்கு மேலாக ஊரடங்கு நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அதில் சில தளர்வுகள் செய்யப்பட்டன. இதனிடையே, சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கோவையில் பல இடங்களிலும் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இதையடுத்து, முதல் நாளான நேற்று மட்டும் கோவை மண்டலத்தில் ரூ.34 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

கோவை டாஸ்மாக்
கோவை டாஸ்மாக்

ஊரடங்கு காலகட்டத்தில், கொலை, கொள்ளை, விபத்து என்று பெரிதாக எந்தக் குற்றமும் நடக்காமல் கோவை அமைதியாக இருந்தது. ஆனால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே கொலை, பள்ளிவாசல் மீது கல்வீச்சு, செயின் பறிப்பு, விபத்துகள் என்று பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன.

தொண்டாமுத்தூர் அருகே மதுபோதையில் இளைஞர்கள் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் கார் தலைகீழாகக் கவிழ்ந்துவிட்டது. அதேபோல, தடாகம் அருகே மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் அப்படியே விழுந்துவிட்டார். அவருடன் மதுபோதையில் வந்த நண்பர்கள் இது தெரியாமல் சென்றுவிட்டனர். ஆனால், மதுபாட்டில்கள் எல்லாம் கீழேவிழுந்த அந்த இளைஞரின் வண்டியில் இருந்துள்ளது. இதனால், நண்பனைக் காணோம் என அவர்கள் திரும்பி வந்துள்ளனர்.

விபத்து
விபத்து

அதற்குள் கிராம மக்கள் தண்ணீர் தெளித்து இளைஞரை எழுப்பியுள்ளனர். எழுந்த அந்த இளைஞர், கீழே விழுந்த மதுபாட்டில்களை எல்லாம் சரியாக எடுத்து வண்டியில் வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். நேற்று மட்டும் பல்வேறு மது விபத்துகளால் நடந்த சம்பவத்தில் 5 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை தடபுடல் ஏற்பாடு.. மாலை சீல்.. கோவை வைரல் டாஸ்மாக் கடைக்கு நேர்ந்த சோகம்!

பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. நேற்றிரவு அந்தப் பள்ளிவாசலின் கண்ணாடி உடைந்திருப்பதும், அங்கு கல் ஒன்று இருந்ததும் தெரியவந்தது. தகவலறிந்த போலீஸார் சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்ததில் சந்தேகத்துக்குரிய வகையில் அங்கு சில இளைஞர்கள் நடமாடியது தெரியவந்தது.

கல் வீச்சு
கல் வீச்சு

இதையடுத்து, போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர், மதுபோதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட சண்டையில் கல்வீசும்போது அது பள்ளிவாசல் மீது விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து, மனோஜை போலீஸார் கைது செய்தனர். அவர் எந்தக் கட்சியையோ மற்றும் அமைப்புகளையோ சேர்ந்தவர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், கோவை கணபதி பகுதியில் தங்கியிருந்து டிரைவராகப் பணியாற்றி வருகிறார். அவரின் நண்பர் மணிகண்டன் மெக்கானிக்காகப் பணி செய்து வருகிறார். இந்த நிலையில், இருவரும் நேற்று மது குடித்துள்ளனர். அப்போது, தன் காதலியின் நினைவால் சிவக்குமார் தனது கையை பிளேடால் கிழித்துள்ளார். மணிகண்டன் அதைக் கிண்டல் செய்யவே, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இதில், ஆத்திரமடைந்த மணிகண்டன், உடற்பயிற்சி செய்யும் தம்பிள்ஸ் மூலம் சிவக்குமாரைத் தாக்கியுள்ளார். இதில், சிவக்குமார் உயிரிழந்துவிட்டார். மதுபோதையில் நண்பனைக் கொலை செய்த மணிகண்டனை போலீஸார் கைது செய்துள்ளனர். பீளமேடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் செயினைப் பறித்துச் சென்றுள்ளார். டாஸ்மாக் திறந்த முதல்நாளே அரங்கேறிய குற்றச்சம்பவங்களால் கோவை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு