Published:Updated:

கணவனைக் கொன்ற மனைவி... மனைவியைக் கொன்ற கணவன்... போலீஸை தாக்கிய இளைஞர்!- `குடி'யால் திணறும் கோவை

கோவை
கோவை

டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கோவையில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

கொரோனா வைரஸாலும், ஊரடங்கு உத்தரவாலும் உலகமே நிலைகுலைந்து கிடக்கிறது. தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. இதனிடையே, கடந்த 7-ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா மற்றும் ஊரடங்கால் டாஸ்மாக் பூட்டப்பட்டிருந்தபோது, கோவையில் பெரிதாக எந்த குற்றச் சம்பவமும் நடக்கவில்லை.

கோவை
கோவை

அதேநேரத்தில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட முதல் நாளே கொலை, விபத்து, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. இதன்பிறகு, டாஸ்மாக் கடைகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

டாஸ்மாக் கடைகள் செயல்பாட்டுக்கு வந்தவுடனே, குற்றச் சம்பவங்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. கோவை திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். கூலி வேலை செய்துவருகிறார். இவர், தனது நண்பர்களுடன் மது குடித்த நிலையில், தகராறு ஏற்பட்டது. இதில், சக நண்பர்கள் கத்தியால் குத்தியதில் அய்யப்பன் பலத்த காயமடைந்தார். அவரை குத்திய நண்பர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர், சித்திரைவேல். கூலி வேலை செய்துவந்தார்.

கைது
கைது

இவருக்கும் இவரது நண்பர் ராஜன் என்பவருக்கும் கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மதுபோதையில் இருந்த ராஜன், தனது நண்பர்களுடன் இணைந்து சித்திரைவேலை கொலை செய்துவிட்டார். ராஜன் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போத்தனூர் அருகே ஒரு தோட்டத்தில், மதன்குமார் என்பவரும் அவரது நண்பரும் மது குடித்துக்கொண்டிருந்தனர். தகவலறிந்த போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்துள்ளார். ஆனால், மதுபோதையில் இருந்த மதன்குமார், உதயகுமாரைத் தாக்கியுள்ளார். இதையடுத்து, மதன்குமாரை போலீஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட மதன்குமார், பெண் போலீஸ் ஒருவரின் கணவர் ஆவார்.

மதன்குமார்
மதன்குமார்

அதேபோல, ராமநாதபுரத்தில் பெண் போலீஸ் ஒருவரை பணி செய்யவிடாமல், மதுபோதையில் பிரச்னை செய்த தினேஷ்குமார் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். மேலும், குனியமுத்தூரில் போலீஸ் ஏட்டு வடிவேலு என்பவரைத் தாக்கிய கோகுல் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது சொந்த சகோதரியின் மகனை சிகரெட் பற்றவைக்கச் சொல்லியுள்ளார். ஆனால், அந்தச் சிறுவன் மறுத்தவுடன் மணிகண்டனை திட்டவும் செய்துள்ளார். ஆத்திரமடைந்த மணிகண்டன், அந்தச் சிறுவனைத் தாக்கியுள்ளார். இதுகுறித்து போலீஸில் புகாரளிக்கப்பட்டு, மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி அண்ணாமலை-ப்ரியா இருவருக்கும் மதுப் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், 17-ம் தேதி இரவு இருவரும் மது குடிக்கும்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ப்ரியா
ப்ரியா

அப்போது ப்ரியா, அண்ணாமலையை கீழே தள்ளி கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டார். பிறகு, சகோதரியின் கணவர் உதவியுடன் சடலத்தை சேலத்துக்குக் கொண்டுசென்றுள்ளார். அங்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, கொலை என்று தெரியவரவே, ப்ரியா மற்றும் அவரது சகோதரியின் கணவர் செல்வராஜ் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.

அதேபோல, பொள்ளாச்சி ஆனைமலை பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்-பழனாள் தம்பதிக்கும் மதுபழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று மாணிக்கத்துக்கும் பழனாளுக்கும் மது பாட்டில்களைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாணிக்கம், மனைவி பழனாளை கட்டையால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த பழனாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, மாணிக்கத்தை போலீஸார் கைது செய்தனர்.

கொலை
கொலை

மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டர் மில்ஸ் அருகே லாட்டரி அதிபர் மார்ட்டின் சகோதரர் வேதமுத்து என்பவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், 30 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதுதொடர்பாக துடியலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு