Published:Updated:

அப்பாவிடமே கொள்ளையடித்த மகன்! - மாட்டிக்கொண்ட பின்னணி #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

சொகுசு வாழ்க்கைக்காக சொந்த அப்பாவிடமே கொள்ளையடித்த மகன் முதல், கரூரில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொலை வழக்கு விசாரணை வரை... அதிர வைக்கும் க்ரைம் செய்திகள் #TamilnaduCrimeDiary

மதுரை கூடல்நகர் பகுதியில் வசித்து வருகிறார் பிரபல ஒப்பந்ததாரர் குணசேகரன். இவர் பொதுப்பணித்துறையின் ஒப்பந்தப் பணிகளை அதிகமாகச் செய்துவரும் ஏ-1 ஒப்பந்ததாரர். இந்த நிலையில், இவரது வீட்டுக்கு வந்த மர்மக்கும்பல், தங்களை போலீஸ் என அடையாளப்படுத்திக்கொண்டு நகைகளைக் கொள்ளையடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு
குற்றச்செயல்களின் கூடாரமா தேனி..?! அச்சத்தில் ஓ.பி.எஸ். ஊர் மக்கள் #TamilnaduCrimeDiary

கடந்த டிச.27-ம் தேதி ஒப்பந்ததாரர் குணசேகரின் வீட்டுக்குள் புகுந்த அந்த மர்மக்கும்பல், "உங்கள் வீட்டில் சோதனை செய்ய வந்துள்ளோம்" எனக்கூறி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து 1 மணி நேரம் வீட்டைச் சோதனை செய்துள்ளனர். கடைசியாக பீரோ லாக்கரையும் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். அப்போது பீரோவில் இருந்த சுமார் 170 பவுன் நகை மற்றும் 2.80 லட்சம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு குணசேகரன் மகனிடம் கையொப்பமும் வாங்கியுள்ளனர். வீட்டில் கொள்ளையடித்தது போதாதென்று, குணசேகரனையும் அவரின் மனைவியையும் அழைத்துச் சென்று வங்கியில் உள்ள பணத்தை எடுத்துத் தரச்சொல்லி மிரட்டியுள்ளனர். ஆனால், வங்கி விடுமுறை என்பதால் பணத்தைப் பெறமுடியவில்லை.

குணசேகரன் இதுகுறித்து போலீஸில் புகார் தெரிவிக்க, விசாரணை தொடங்கியது. மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த கோகிலா என்பவரை குணசேகரன் முதலாவதாக திருமணம் செய்திருந்துள்ளார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். குணசேகரனுக்கும் கோகிலாவுக்கும் பிறந்த மூத்த மகன் சோலை ராஜா தன்னுடைய பெண் தோழி உட்பட சில நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கொள்ளையை அரங்கேற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Robbery
Robbery

"என் அப்பா குணசேகரன்கிட்ட இவ்வளவு சொத்து இருந்தும் என்னால அனுபவிக்க முடியல. அந்தப் பணமெல்லாம் நமக்கு கிடைச்சா வாழுறப்பவே சொர்க்கத்தை அனுபவிக்கலாம்" என தன்னுடைய தோழியான உமாதேவியிடம் சோலைராஜா அடிக்கடி புலம்பியுள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் குணசேகரனின் வீட்டில் கொள்ளையடிப்பது என முடிவெடுத்துள்ளனர். தங்களது திட்டத்தின்படி டி.எஸ்.பி ராஜராஜன் தலைமையிலான சிறப்பு தனிப்படை எனக்கூறி குணசேகரன் வீட்டுக்குள் புகுந்தவர்கள், சோதனை செய்வதுபோல இந்தக் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சோலை ராஜாவைக் கைது செய்த தனிப்படை காவல்துறையினர் கொள்ளைக்கு உதவியாக இருந்த சோலை ராஜாவின் தோழி உட்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.

சோலை ராஜாவிடம் இருந்து சுமார் 170 சவரன் நகை மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவருக்குத் துப்பாக்கி எங்கேயிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சொத்து கிடைக்காததால், பெற்ற அப்பாவிடம் மகன் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைக் திருட்டையே பெரிதாகக் கண்டுகொள்ளாத தேனி காவல்நிலையத்தில், சைக்கிள் திருடப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேனி பென்னிகுவிக் நகரில் வசிக்கும் சேதுராமன் என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ஒன்றைக் காணவில்லை என்பதே அந்தப் புகார்!

வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தேனி காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். பள்ளிச் சீருடையுடன் மாலை நேரத்தில், பென்னிகுவிக் நகரில் உலா வருகிறான் ஒரு சிறுவன். ஆட்கள் யாரும் இல்லா நேரம் பார்த்து, வீட்டுக் கதவை லாவகமாக திறந்து, வராண்டாவில் நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிள் அருகே சென்று பார்க்கிறான். யாராவது வந்துவிடுவார்களோ என்று அச்சம் வேறு அச்சிறுவனுக்கு! மெள்ள வீட்டு வாசலுக்குச் சென்று யாராவது வெளியே வருகிறார்களா என்று மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு மெள்ள வீட்டை விட்டு வெளியேறுகிறான். தெரு முனையில் நின்றுகொண்டிருக்கும் மற்றொரு பள்ளிச் சிறுவனின் கைகளில் அந்த சைக்கிள் ஒப்படைக்கப்படுகிறது. அச்சிறுவன் சைக்கிளை ஓட்டிக்கொண்டு பறந்துவிடுகிறான். இக்காட்சிகள் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறது சிசிடிவி!

தேனி நகரில் அடிக்கடி சைக்கிள்கள் திருடப்படுவது குறித்து பல புகார்கள் தேனி காவல்நிலையத்துக்கு தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. ஆனால், அதைப் பெரிதாக கண்டுகொள்ளாத காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் கிடைத்ததும், விசாரணையில் வேகம் காட்டுகின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸார் ஒருவர், "சிறுவர்களை வைத்து சைக்கிள் திருடுவது எளிமையாக இருக்கும். யாராவது கையும் களவுமாகப் பிடித்தாலும், சிறுவன் என்ற அடிப்படையில் அவனை விட்டுவிடுவார்கள். தப்பிப்பது எளிது. சைக்கிள் மீது ஆசை வைத்து இப்படிச் செய்கிறார்களா அல்லது சிறுவர்களின் திருட்டுப் பின்னணியில் வேறு ஏதாவது கும்பல் இருக்கிறதா என்று விசாரித்துவருகிறோம்” என்றார்.

மந்திரித்த கயிறு, சொந்த நகைக்கடை... கொள்ளையர்கள் மாட்டிய பின்னணி! #TamilnaduCrimeDiary

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது, பள்ளப்பட்டி பேரூராட்சி. பள்ளப்பட்டி நகர அ.தி.மு.க பொருளாளராக இருந்தவர், சேமியான் ஜாபர். கடந்த 2015-ம் ஆண்டு அவரை மர்மக்கும்பல் ஒன்று துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்றது. அப்போது, அந்த வழக்கை பள்ளப்பட்டி காவல்நிலைய ஆய்வாளரான அருணாசலம்தான் விசாரித்து வந்தார். `சேமியான் ஜாபரைக் கொன்றது இந்த இரண்டு நபர்கள்தாம்' என்று ஆய்வாளர் அருணாசலம், மதுரையைச் சேர்ந்த இரண்டு நபர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

ஆனால் அந்த இரண்டு நபர்களும், "எங்களுக்கும், இந்த வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 'ஒரு பெட்டி கேஸுல ஆஜர் ஆகணும். நிறைய பணம் தர்றேன்'னு ஆசைவார்த்தை கூறி எங்களை ஆய்வாளர் அழைத்து வந்தார். ஆனால், இங்க வந்ததும்தான் தெரியுது, எங்களை அவர் கொலைவழக்கில் வசமா மாட்டிவிட்டது" என்று நீதிபதியிடம் கண்ணீர்விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி, அந்த இரண்டு நபர்களையும் விடுவித்தார். அதோடு, அருணாசலத்தை சஸ்பெண்டு செய்யவும் உத்தரவிட்டார்.

பள்ளப்பட்டி
பள்ளப்பட்டி

தொடர்ந்து, இந்தக் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்தனர். சேமியான் ஜாபரைக் கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை தப்பவிடவே அருணாசலம் இரண்டு அப்பாவிகளைக் குற்றவாளிகளாக சித்திரிக்கப் பார்த்திருக்கிறார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். `உண்மையான குற்றவாளிகளிடம் அருணாசலம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு, அவர்களை தப்பவிடவே இப்படி அப்பாவிகளை மாட்டிவிட முயன்றார்' என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அருணாசலம் மறுபடியும் மதுரையில் பணிபுரிந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் சேமியான் ஜாபர் கொலை வழக்கின் விசாரணை அரவக்குறிச்சியில் சூடுபிடித்திருப்பதால், அது அருணாசலத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள், கரூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில்.

அடுத்த கட்டுரைக்கு