Published:Updated:

``ஆகா, கடை தெரியாம சிக்கிட்டோமேடா”- சாப்பிடப் போன இடத்தில் சிக்கிய திருடன் #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

ஏமாற்றியவர்கள் கடைக்கே சாப்பிட போய் மாட்டிக் கொண்ட மோசடிப்பேர்வழி முதல், மர்மமான முறையில் இறந்த இளைஞர் வரை...

மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மதிச்சியம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஏஜென்சி முகவராக பணியாற்றி வந்தார். இவர் விதவிதமான பொய்களை சொல்லி பொதுமக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதில் கைதேர்ந்தவர். புதுப் புது ஏரியாக்களுக்கு சென்று, வடிவேலு `ஒரே நாளின் பணக்காரன் ஆவது எப்படி?’ என மக்களை ஏமாற்றிய காமெடி போன்று, `எளிமையாக பணம் சம்பாதிக்க என்னிடம் பல வழிகள் இருக்கின்றன' என்று பிரசாரம் செய்து அதற்கும் கட்டணம் வசூலித்து ஏமாற்றியுள்ளார்.

செல்வராஜ்
செல்வராஜ்

சில மாதங்களுக்கு முன்னர் தீபாவளி நெருங்கத் தொடங்கியதும் செல்வராஜின் உள்ளங்கை அரிப்பெடுத்துவிட்டது. `தீபாவளி ஃபண்ட்’ என்ற புது ஐடியாவை உருவாக்கி பலரையும் தன்னுடைய சீட்டில் சேர்த்துள்ளார். `புதுசா ஆட்களை சீட்டுல சேர்த்திங்கன்னா கமிஷனும் கிடைக்கும், தீபாவளிக்கு ஸ்பெஷல் கவனிப்பும் உண்டு’ என்று செல்வராஜ் ஆசை தூண்டில் போட, இதில் எக்கச்சக்கமான மீன்கள் மாட்டிவிட்டன. சில வாரங்களிலேயே 1000-க்கும் அதிகமான நபர்கள் தீபாவளிச் சீட்டில் சேர்ந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 100 முதல் 1000 ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.

வசூல் பட்டையைக் கிளப்பிய நேரத்தில், கடந்த அக்டோபர் மாதம் பெரும் தொகையுடன் செல்வராஜ் எஸ்கேப் ஆகிவிட்டார். அவரது போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்ததால், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளார்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். ஏமாந்தவர்கள் கண்ணில் சிக்காமல் சுருட்டிய பணத்தில் உல்லாசமாக பொழுதைக் கழித்த செல்வராஜ், சில நாட்களுக்கு முன்னர் கே.கே.நகர் பகுதியிலுள்ள ரோட்டுக் கடை ஒன்றில் சாப்பிட வந்துள்ளார்.

மதுரை காவல்துறை
மதுரை காவல்துறை

சாப்பிட தோசையும், வெங்காயம் போடாத ஆம்ப்லேட்டும் கேட்டுள்ளார். அப்போது கடையில் வேலை செய்த பெண் செல்வராஜை அடையாளம் தெரிந்து கொண்டு, அக்கம் பக்கத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்துள்ளார். செல்வராஜை சுற்றிவளைத்த பொதுமக்கள் அவரை கோழி அமுக்குவது போல அமுக்கி மூலையில் உட்காரவைத்துள்ளனர். அப்போதுதான் தன்னிடம் தீபாவளி ஃபண்ட் பணம் கொடுத்து ஏமாந்த நடராஜனின் கடைக்கு சாப்பிட வந்திருப்பது செல்வராஜுக்குப் புரிந்துள்ளது.

``ஆகா, கடை தெரியாம வந்து சிக்கிட்டோமேடா” என செல்வராஜ் முனகி முடிப்பதற்குள் போலீஸ் வந்துவிட்டது. நடராஜனின் மனைவி செல்வராஜை அடையாளம் தெரிந்து கொண்டதால், பலநாட்கள் தப்பித்து வந்தவர் வசமாகச் சிக்கிக் கொண்டார். பொதுமக்களிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த செல்வராஜை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.

செல்போனுக்காக நடந்த கொலையா?

நெல்லை மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த உடலை மீட்ட போலீசார், இறந்தவரை யாராவது கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்றார்களா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்டமாக உயிரிழந்தவரின் நண்பர்கள் மீது போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்திருக்கிறது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர், ராஜாசிங் (30). ஆறு மற்றும் குளங்களில் மீன் பிடித்து விற்பனை செய்து தன் குடும்பத்தை நடத்தி வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வசந்தி என்பவரைத் திருமணம் செய்த ராஜாசிங்கிற்கு ஒரு வயதுக் குழந்தையும் இருக்கிறது.

ராஜாசிங்
ராஜாசிங்
`நாங்கள் இல்லாவிட்டால் அ.தி.மு.க ஆட்சியே இல்லை!'-பொதுக்குழுவில் கொதித்த அன்புமணி

சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ராஜாசிங் தன் நண்பர்களுடன் மது அருந்தியிருக்கிறார். அதன் பின்னர் அவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் மது அருந்தும் இடத்தில் இருந்து ராஜாசிங் தனது செல்போனை எடுத்து வந்துவிட்டதாக நண்பர்களே வீட்டுக்கு வந்து தகராறு செய்திருக்கிறார்கள். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்ததுடன் கைகலப்பும் ஏற்பட்டிருக்கிறது.

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வந்து சண்டையைத் தீர்த்து வைத்ததைத் தொடர்ந்து நண்பர்கள், அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜாசிங் அதன் பின்னர் வரவில்லை. இந்நிலையில், கல்லிடைக்குறிச்சி - அம்பாசமுத்திரம் ரயில்வே பாதையில் சிங்கம்பட்டி ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் பிணமாக அவர் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கொலை நடந்த இடத்தில்
கொலை நடந்த இடத்தில்
நித்யானந்தாவிடம் கஸ்டடி... பல் மருத்துவரைத் தேடும் போலீஸ்! #TamilnaduCrimeDiary

இது குறித்து தென்காசி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜாசிங் உள்ளிட்ட நண்பர்கள் மூவரும் மது அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது செல்போன் தவறியிருக்கிறது. அதை ராஜாசிங் எடுத்துக் கொண்டதாகச் சந்தேகப்பட்டு, அதிகாலையில் ராஜாசிங் வெளியே வந்தபோது அவரது நண்பர்களே அடித்துக் கொன்றுவிட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ராஜாசிங் தலையில் மட்டுமே காயம் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக போலீசார் கூறுகிறார்கள். இது தொடர்பாக அவருடைய நண்பர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு