Published:Updated:

“சரக்கு போட்டா அவன் சைக்கோ!”

 ‘பனியன்’ சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
‘பனியன்’ சங்கர்

நண்பர்களையே அடித்துக்கொன்ற ‘பனியன்’ சங்கர்

‘‘சார்... பக்கத்து வீட்லருந்து குடலைப் புரட்டுற மாதிரி ஏதோ வாடை வருது. என்னமோ நடந்துருக்கு. கொஞ்சம் வந்து பாருங்க...’’ - நவம்பர் 1-ம் தேதி, திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு போன் மூலமாக இப்படியொரு தகவல் வந்ததும் பரபரப்பானார்கள். திருப்பூர் ‘சிக்கண்ணா’ கல்லூரிக்கு எதிரேயுள்ள அந்த வீட்டை நெருங்கும்போதே நாசியை நாற்றம் துளைத்தெடுக்க... உள்ளே என்ன இருக்கிறது என்பதை போலீஸாரால் யூகிக்க முடிந்தது. கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததும், அவர்கள் யூகித்தது ஊர்ஜிதமானது. வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டிக்குள், அழுகிய நிலையில் புழுக்கள் நெளிய ஒரு சடலம் மிதந்துகொண்டிருந்தது. அந்தச் சடலம் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைந்துபோயிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை போலீஸார் விசாரிக்க, ‘‘இந்த வீட்டுல பனியன் கம்பெனியில வேலை பார்க்குற சங்கர், இசக்கிமுத்துனு ரெண்டு பசங்க தங்கியிருந்தாங்க. கொஞ்ச நாளா ரெண்டு பேரையும் வீட்டுப் பக்கமே காணலை’’ என்று தகவல் கிடைத்திருக்கிறது. வேலை செய்த பனியன் கம்பெனியில் விசாரித்தபோது, ‘‘ரெண்டு பேரும் வேலைக்கு வந்து ஒரு மாசமாகுது’’ என்று சொல்லியிருக்கிறார்கள். விசாரித்த இடத்திலெல்லாம் இது போன்ற பதில் கிடைக்கவே, ‘இறந்தது சங்கரா... இசக்கிமுத்துவா?’ எனத் தெரியாமல் போலீஸார் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள்.

 “சரக்கு போட்டா அவன் சைக்கோ!”

இருவருடைய போன் கால் ஹிஸ்டரியையும் எடுத்து விசாரணையை போலீஸார் தீவிரப் படுத்தியபோதுதான் ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது. சங்கர் கடைசியாக போனில் பேசிய நபரிடம் போலீஸார் விசாரித்தபோது, ‘‘ஒரு பிரச்னையால அனுப்பர்பாளையம் ஸ்டேஷன்ல இருக்கேன், அப்புறமா பேசுறேன்னு சொன்னான். ஆனா, அதுக்கப்புறம் பேசவே இல்லை’’ என்றிருக்கிறார் அந்த நபர். உடனே அனுப்பர்பாளையம் ஸ்டேஷனுக்குச் சென்ற திருப்பூர் வடக்கு போலீஸார், சங்கரின் போட்டோவைக் காட்டி விசாரிக்க, ‘‘ஒரு மாசத்துக்கு முன்னாடி இவன் எங்க லிமிட்ல ஒரு மட்டை கேஸ்ல (மர்டர் கேஸ்) மாட்டி கோயமுத்தூர் ஜெயில்ல இருக்கான்’’ என அதிரவைத்திருக்கிறார்கள். ‘சங்கரைப் புடிச்சு நாலு தட்டு தட்டினா, தண்ணித் தொட்டிக்குள்ள பிணமாகக் கிடந்தது இசக்கிமுத்துவா இல்லை வேற யாராவதானு தெரிஞ்சுடும்’ என முடிவு செய்த போலீஸார், கடந்த வாரத்தில் சங்கரை கஸ்டடியில் எடுத்து விசாரித்திருக்கிறார்கள்.

‘பனியன்’ சங்கர்
‘பனியன்’ சங்கர்

‘‘நீங்க சொல்ற கொலையைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது’’ என முதலில் திட்டவட்டமாக மறுத்த சங்கர், ஒருகட்டத்துக்கு மேல் மிக இயல்பாகத் தன்னுடைய கொலை வரலாற்றை ஒப்புவிக்கத் தொடங்கியிருக்கிறான். ‘‘2018-ல ஒரு கொலை, போன மாசம் ரெண்டு கொலைனு ரெண்டு வருஷத்துல மட்டும் மூணு கொலை செஞ்சிருக்கேன் சார். இசக்கியும் நானும் ஆளுக்குப் பாதி காசு போட்டு ரூம் வாடகை கொடுக்கணும். சம்பவத்தன்னிக்கு சரக்கடிச்சுக்கிட்டு இருக்கும்போது, ‘காசு குடுடா’னு அவன்கிட்ட கேட்டதுக்கு, ‘ரெண்டு நாளா சரக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன்ல... அதுல கழிச்சிக்கோ. காசெல்லாம் தர முடியாது’னு நக்கலா பேசுனான். ரெண்டு பேருக்கும் செமையான ஃபைட்டாகிடுச்சு. என் அம்மாவையெல்லாம் வார்த்தையில இழுத்தான். மண்டையில `சுர்’ருன்னு கோவம் ஏறிடுச்சு. கையில கிடைச்ச ஒரு கல்லால அவன் மண்டைய அடிச்சுப் பொளந்துட்டேன். பாடியைத் தூக்கி வீட்லருந்த தண்ணித் தொட்டியில போட்டுட்டு வழக்கம்போல வேலைக்குப் போயிட்டு வந்தேன். இடையில, இன்னொரு மர்டர் பண்ணிட்டு ஜெயிலுக்குப் போக வேண்டியதாப் போச்சு’’ என சங்கர் சொல்ல... போலீஸார் திகைத்துப்போயிருக்கிறார்கள்.

சங்கர் பற்றி அனுப்பர்பாளையம் போலீஸாரிடம் விசாரித்தபோது, ‘‘மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்தவன் இந்த சங்கர். கல்யாணமாகாத அவன், திருப்பூர்ல தங்கி பல பனியன் கம்பெனிகள்ல வேலை பார்த்திருக்கான். 2018-ல போயம்பாளையத்துல ஒரு கம்பெனியில வேலை செஞ்சப்ப, போதையில ஏற்பட்ட வாக்குவாதத்துல ரூம் மேட்டான கணேசனைத் தலையில அடிச்சு கொன்னு, கம்பெனி பின்னாடி இருந்த வாய்க்கால்ல புதைச்சிட்டான். அந்த கேஸ்ல 90 நாள் கோயமுத்தூர் ஜெயில்ல இருந்துட்டு பெயில்ல வந்திருக்கான். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அக்டோபர் 11-ம் தேதி, வெங்கமேடு பக்கத்துல பாக்கிய அன்பரசு என்பவரைக் கல்லால முகத்துல அடி அடினு அடிச்சே கொலை பண்ணியிருக்கான். இதுல அவனோட கூட்டாளி இளம்பரிதியும் உடந்தை. இந்தக் கொலைக்கும் பெரிய காரணமெல்லாம் இல்லை. எல்லாம் சரக்குல நடந்த சண்டைதான். சங்கர் கொலை செஞ்ச மூணு பேருமே அவனோட நண்பர்கள்தான்’’ என்றார்கள்.

இசக்கிமுத்து - பாக்கிய அன்பரசு
இசக்கிமுத்து - பாக்கிய அன்பரசு

திருப்பூர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கணேசனிடம் பேசினோம். “இசக்கிமுத்துவைக் கொலை செஞ்ச சங்கர், அவனைத் தண்ணித்தொட்டியில போட்டு வெச்சிருந்திருக்கான். அக்கம்பக்கத்துல இருக்கறவங்க, ‘என்னப்பா ஏதோ வாடை அடிக்குது’னு கேக்கவும், ‘எலி செத்துக் கெடக்கு’னு சொல்லி சமாளிச்சிருக்கான். வாடை தெரியாம இருக்க, பெனாயிலை வாங்கி வீடு முழுக்க ஊத்திட்டு, வேலைக்குப் போயிட்டு வந்துட்டு இருந்திருக்கான். அந்தச் சமயத்துலதான், வெங்கமேடு கொலையில அரெஸ்ட்டாகி ஜெயிலுக்குப் போயிருக்கான். மத்த நேரத்துல சாதாரணமா இருக்குற சங்கர், சரக்குப் போட்டா சைக்கோ மாதிரி மாறிடுவான். செத்தவங்க யாருனு அடையாளம் தெரியக் கூடாதுனு முகத்தைக் கல்லால அடிச்சு சிதைக்கிறது இவனோட தனி உத்தி. எல்லாம் போதையோட விளைவுகள்’’ என்றார்.

மிதமிஞ்சிய போதை, மனிதனைக் குற்றத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது என்பதற்கு ஆதாரமாக லட்சக்கணக்கான சம்பவங்களையும் மனிதர்களையும் சொல்ல முடியும். சங்கர், அதன் சமீபத்திய, மோசமான அடையாளம்!