Published:Updated:

க்ரைம் டேப்ஸ்: `அந்த ஒற்றை வார்த்தை..!' -பெண்களிடம் கோடிகளில் பணத்தை அள்ளிய இளைஞர் | பகுதி 7

போலீஸார் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே வந்தவன், கடைசியாக போலீஸாரிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறான். `இந்த உலகத்தில் விலை மதிக்க முடியாத ஒன்று உள்ளது அது என்ன தெரியுமா?’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இணைய குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. தினமும் இணையவழிக் குற்றங்கள் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

நம் செல்போன் எண்ணுக்கு அழைத்து, நம் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்போர் கண்டிப்பாக மோசடிப் பேர்வழிகள்தான். வங்கிகளிலிருந்து அப்படியான அழைப்புகள் நிச்சயமாக நமக்கு வரவே வராது என்பதுதான் உண்மை.

முகநூலில் நம்முடைய நட்பு வட்டத்திலுள்ள நண்பர்களின் பெயரிலிருந்து நட்பு அழைப்புகள் நமக்கு வரும். அவசரத்தில் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஏமாற்றுப் பேர்வழிகள் விரித்த வலையில் நாம் வீழ்ந்துவிடுவோம். உண்மையில், அந்த நண்பர் நமக்கு நட்பு அழைப்பு விடுத்திருக்கிறாரா என்பதை கிராஸ் செக் பண்ணுவது முக்கியம்.

எனக்குத் தெரிந்த ஒருவரிடம், அவரின் நண்பரின் பெயரில் முகநூலின் உள் பெட்டியில் தொடர்புகொண்டு 40,000 ரூபாய் கடன் கேட்டு வாங்கி ஏமாற்றியிருக்கிறார்கள்.

க்ரைம் டேப்ஸ்
க்ரைம் டேப்ஸ்
pixabay

இணைய குற்றங்களில் உள்ள மிகப்பெரிய சவால், குற்றவாளிகள் எங்கேயிருந்து செயல்படுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதே பெரும் சிக்கல்! அவர்கள் எந்த நாட்டிலிருந்து வேண்டுமானாலும் இயங்கிக்கொண்டிருக்கலாம். தொழில்நுட்ப அறிவோடு நம்முடைய கம்ப்யூட்டர், செல்போன்களில் ஊடுருவி தகவல்களைத் திருடுபவர்கள் ஹேக்கர்ஸ். எந்தவிதமான தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் நம்முடைய சமூக வலைதளங்கள் மூலமாக நம்மை ஏமாற்றிப் பணம் பறிப்பவர்கள் ஸ்கேம்மர்கள்.

இந்த ஸ்கேம்மர்களின் இலக்கு நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள். அவர்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்களை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து, கண்காணித்து, ஒரு சுபபோக சுபதினத்தில் நம்மை ஏமாற்றிப் பணம் பறித்துவிடுவார்கள்.

இந்த ஸ்கேம்மர்களின் இலக்கு பெரும்பாலும் பெண்களே. ஃபேஸ்புக் மூலம் பெண்களிடம் நட்புகொள்ளும் இவர்கள், அந்தப் பெண்களை பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக்கொள்வதோடு பணத்தையும் பறித்துவிடுகிறார்கள்.

இணைய குற்றங்கள்
இணைய குற்றங்கள்
pixabay

ஃபேஸ்புக் மூலம் முகம் தெரியாத நபரிடம் பல லட்சங்களை இழந்த பெண்களைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வருவதைப் பார்க்கிறோம். இதில் பெரும்பாலும் படித்த பெண்களே ஏமாறுகிறார்கள். சமீபத்தில் இது போன்ற ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்து, தொடர்ந்து பேசி, மருத்துவம், இன்ஜினீயரிங் படித்த பெண்களையும், சமூகத்தில் செல்வாக்குடன் இருக்கும் குடும்பத்தைச் சேர்த்த பெண்களையும் ஏமாற்றி, பல லட்சங்களைப் பறித்த ஒருவரை காவல்துறையினர் பொறிவைத்துப் பிடித்தனர். இத்தனைக்கும் அந்த நபர் மீது யாரும் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கவில்லை. பலரும் இவனிடம் கோடிக்கணக்கில் பணத்தை இழந்திருந்தார்கள். போலீஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் ஒரே நபரிடம்தான் ஏமாந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

க்ரைம் டேப்ஸ் : வீடியோ கால்; மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள்! - காயத்ரிக்கு நடந்தது என்ன? | பகுதி 6

சைபர் க்ரைமில் உள்ள ஹேக்கர்கள் மூலம் பல மாத தொடர் முயற்சியின் பலனாக அந்த நபரை போலீஸார் சுற்றி வளைத்துவிட்டனர். அவனைக் கைதுசெய்து அழைத்து வந்து விசாரித்தனர். தன்மீது யாரும் எழுத்துபூர்வமாக புகார்கள் கொடுக்கவில்லை என்பதால், அந்த நபர் ரொம்பவும் கேஷுவலாகவே இருந்திருக்கிறான். விசாரணையின்போது பிடிகொடுக்காமல் பேசியிருக்கிறான்.

க்ரைம் டேப்ஸ்
க்ரைம் டேப்ஸ்
pixabay

வழக்கமான பாணியில் விசாரித்தால் அவனிடமிருந்து உண்மையைக் கறக்க முடியாது என்று உணர்ந்த காவல்துறையினர் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் பேச்சுக் கொடுத்து, அவனிடம் நட்பாகப் பழகத் தொடங்கியிருக்கிறார்கள். போலீஸாரின் இந்த வியூகம் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது. அந்த நபர், தன் திருவாய் மலர்ந்து பேசத் தொடங்கியிருக்கிறான்.

அவன் பேசப் பேச போலீஸார் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டார்கள். அவன் பேசியதை காவல்துறையிலுள்ள நண்பர்கள் என்னிடம் சொன்னபோது எனக்கும் அப்படித்தான் இருந்தது.

அந்த நபர் ஃபேஸ்புக்கில் உள்ள குறிப்பிட்ட பெண்களிடம் சாட் செய்வானாம். `சாட் செய்வதற்காகப் பெண்களை எப்படித் தேர்வு செய்கிறாய்?’ என்று போலீஸார் கேட்டபோது, `ஃபேஸ்புக் புரொஃபைல் பிக்சரில் தங்களுடைய போட்டோவுக்கு பதில் பூக்களின் படங்களையோ, நடிகைகளின் படங்களையோ வைத்திருக்கும் பெண்களே என்னுடைய இலக்கு’ என்று சொல்லியிருக்கிறான்.

க்ரைம் டேப்ஸ்
க்ரைம் டேப்ஸ்
pixabay

`இப்படிப்பட்ட பெண்களைக் கவிழ்ப்பது எளிது’ என்றும் கூறியிருக்கிறான். இந்தப் பெண்களில் யாரெல்லாம் தன்னுடைய சொந்த சுக துக்கங்களை `பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதை கவனிப்பானாம். அதில் மன வேதனையில் அல்லது கஷ்டத்திலுள்ள பெண்களைத் தேர்வு செய்து, அவர்களுடன் சாட் செய்யத் தொடங்குவானாம். அவர்கள் பதிலளிக்கத் தொடங்கிவிட்டால் இவன் வலையில் வீழ்ந்துவிட்டார்கள் என்று அர்த்தம்.

பதில் அளிக்காமல் தவிர்ப்பவர்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்ய மாட்டானாம். பதிலளிக்கத் தொடங்கியவர்களிடம் தொடர்ந்து சாட் செய்து, அவர்களிடம் அவர்களின் பிரச்னைக்கு ஆறுதல் சொல்வதுபோல பாசாங்கு செய்து, அப்படியே அவர்களின் நன்மதிப்பைப் பெற்றுவிடுவான். அப்படியே அவர்களிடம் தொடர்ந்து பேசி, அவர்களின் வசதி வாய்ப்புகளைத் தெரிந்துகொள்வான். அவர்களிடம் எந்த அளவுக்குப் பணம், நகை தேறும் என்பதை கணித்து அதற்குத் தகுந்தபடி பேசி, பணத்தைக் கறந்திருக்கிறான்.

சிலரைக் காதலிப்பததாக சொல்லியும், சிலருக்குக் கல்யாண ஆசை காட்டியும், இன்னும் சிலரிடம் சொந்த அண்ணன், தம்பிபோலப் பாசமாகப் பேசியும் கவிழ்த்திருக்கிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

க்ரைம் டேப்ஸ் : வீடியோ கால்; மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள்! - காயத்ரிக்கு நடந்தது என்ன? | பகுதி 6

ஒருகட்டத்தில் இவன்மீது நம்பிக்கைவைத்து ஏமாந்து, இவன் சொன்ன இடத்துக்குச் சென்றவர்களை, தன் இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். பின் தொழில் தொடங்குவதற்காகவும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஏதேதோ காரணம் சொல்லியும் பணம் பறித்திருக்கிறான்.

இன்னும் சிலரைத் தன்னுடன் உள்ள உறவைப் பற்றி குடும்பத்தாரிடம் தெரிவித்துவிடுவேன் என்று மிரட்டியும் பணம் பறித்திருக்கிறான். இப்படித்தான் கோடிக்கணக்கில் ஏமாற்றியிருக்கிறான்.

போலீஸாரின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே வந்தவன் கடைசியாக போலீஸாரிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறான்.

க்ரைம் டேப்ஸ்
க்ரைம் டேப்ஸ்
pixabay
``இந்த உலகத்தில் விலை மதிக்க முடியாத ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா?”

போலீஸாரும் அவரவருக்குத் தோன்றிய பதில்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் சொன்ன பதில்களையெல்லாம் அந்த நபர் மறுத்திருக்கிறான்.

இறுதியில் அவனே அந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லியிருக்கிறான். ``உலகில் விலை மதிக்க முடியாத ஒன்று என்ன தெரியுமா? ஆறுதல். ஆம்... ஆறுதல்தான். நான் கூறிய ஆறுதல் வார்த்தைகளை நம்பித்தான் நான் விரித்த வலையில் பெண்கள் வீழ்ந்தார்கள். ஏதாவது ஒரு சிக்கலிலுள்ள பெண்களிடம் ஆறுதலாகச் சில வார்த்தைகளைப் பேசினால் போதும். நம்மை மலைபோல நம்புவார்கள். நாம் என்ன சொன்னாலும் அவர்கள் செய்வார்கள், இந்த ஆறுதல் வார்த்தைகள்தான் என் மூலதனம்! என்று இவன் கூறியபோது போலீஸாரே மிரண்டுதான் போயிருக்கிறார்கள்.

(சுழலும்...)

குடும்பத்தில் ஆறுதல் கிடைக்காத பெண்களே இவனைப் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளின் இலக்காக இருக்கிறார்கள். இணையத்தைப் பயன்படுத்துவோர் நிறையவே கவனமாக இருக்கவேண்டியது அவசியம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு