Published:Updated:

க்ரைம் டேப்ஸ்: பாலியல் தொழிலாளிகளின் வறுமை; இளைஞர்களின் இரக்கம்! -புரோக்கரால் நடந்த விபரீதம் பகுதி 5

வழக்கமாக பேச்சுலர் பார்ட்டியில் ஆல்கஹால் விருந்து இருக்கும். ஆனால் அவர்கள் குறிப்பிட்டது பெண்களையே விருந்து படைக்கும் பார்ட்டி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`கண்களா பார்ப்பதும் பொய், காதுகளால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்’ என்ற வாக்கியம் எந்த அளவுக்கு உண்மை என்பதை எனக்கு உணர்த்திய சம்பவம் இது.

சென்னையில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை கடத்திச் சென்று வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் இளைஞர்கள் சிலரை காவல்துறையினர் கைதுசெய்திருந்தனர்.

அவர்கள் விசாரணைக் கைதிகளாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த இளைஞர்களுடன் சேர்ந்து வன்கொடுமைப் புகாரில் சிக்கித் தலைமறைவான மற்றோர் இளைஞரை போலீஸார் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தனர்.

பெள்ளாச்சிக்கு முன்பு

பொள்ளாச்சி சம்பவம் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். இது அதற்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன் நடந்து, அந்தக் காலகட்டத்தில் சென்னையில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

க்ரைம் டேப்ஸ்: பாலியல் தொழிலாளிகளின் வறுமை; இளைஞர்களின் இரக்கம்! -புரோக்கரால் நடந்த விபரீதம் பகுதி 5

அரசியல், புலனாய்வுப் பத்திரிகையில் நிருபராக இருந்த என்னுடைய நண்பரிடம் இந்தச் சம்பவம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒரு சந்தேகத்தை எழுப்பினார். வழக்கமாக, கும்பலாகச் சேர்ந்து பெண்களைக் கடத்துவார்கள். ஆனால், அந்தச் சம்பவத்தில் ஒரே நேரத்தில் நான்கைந்து பெண்களைக் கடத்தியிருக்கிறார்கள் என்பது எங்கோ இடிக்கிறது என்று தன் சந்தேகத்தை எழுப்பினார். அப்படியென்றால் அந்தப் பெண்களைச் சந்தித்து இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று கேட்டால், இந்தச் சந்தேகத்துக்கு விடை கிடைக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அந்த நண்பர் பேச்சோடு நிற்காமல் மறுநாள் அந்தப் பெண்களைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டார். அந்தப் பெண்களின் முகவரி காவல்துறையின் எஃப்.ஐ.ஆரில் இருந்தது. அந்த முகவரியைத் தேடிச் சென்றபோது அது போலியான முகவரி என்பது தெரியவந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் போலியான முகவரியைக் கொடுக்கலாம். ஆனால் புகார் கொடுத்தவர்களே எப்படி போலி முகவரி கொடுக்க முடியும்? நண்பரின் சந்தேகம் மேலும் வலுக்க, அவர் காவல்துறையிலுள்ள நண்பர்களிடம் அந்தப் பெண்களைப் பற்றிக் கேட்டதற்கு அந்தப் பெண்கள் அவர்களின் சொந்த ஊருக்குச் (வடகிழக்கு மாநிலம்) சென்றுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்.

வழக்கு விசாரணையில் இருக்கும்போது அவர்களை வெளியூர் செல்ல எப்படி அனுமதித்திருக்க முடியும் என்ற சந்தேகமும் நண்பருக்கு வந்திருக்கிறது.

உடனடியாக அவர் ஒரு முடிவெடுத்தார். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போலீஸில் சிக்காமல் தலைமறைவாக உள்ள அந்த இளைஞரை சந்தித்து உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய விரும்பினார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞர்களின் சார்பில் ஆஜராகவிருந்த வழக்கறிஞரைப் பிடித்து தலைமறைவான அந்த இளைஞரைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். முதலில் வழக்கறிஞர் இதற்குச் சம்மதிக்கவில்லை. போலீஸில் மாட்டிவிட்டுவிடுவார் என்று பயந்ததே அதற்குக் காரணம். நண்பரின் தொடர் முயற்சியால் அந்த வழக்கறிஞர் அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடைந்த உண்மை

அந்த இளைஞர் சிறு தயக்கத்துக்குப் பிறகு பத்திரிகை நண்பரிடம் நடந்த உண்மையைச் சொல்லத் தொடங்கினார்.

சென்னையைச் சேர்ந்த அந்த நண்பர்களில் ஒருவருக்கு திருமணம் முடிவாகியிருக்கிறது. நண்பர்கள் அவரிடம் பேச்சுலர் பார்ட்டி கேட்டிருக்கிறார்கள். நண்பரும் சம்மதித்திருக்கிறார். வழக்கமாக பேச்சுலர் பார்ட்டியில் ஆல்கஹால் விருந்து இருக்கும். ஆனால் அவர்கள் குறிப்பிட்டது பெண்களையே விருந்து படைக்கும் பார்ட்டி!!

முன்பின் இது போன்ற முயற்சிகளில் இறங்காத அந்த இளைஞர்கள் ஆன்லைனில் தேடித் தேடி ஒரு தொடர்பு எண்ணைப் பிடித்திருக்கிறார்கள். அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு பெண்கள் வேண்டும், அதுவும் டீசர்ட், ஜீன்ஸ் அணிந்து கல்லூரி மாணவிகள் தோற்றத்திலிருக்கும் பெண்கள்தான் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

வன்கொடுமை.
வன்கொடுமை.

எதிர்முனையில் பேசிய புரோக்கர், சிலபல சம்பிரதாய விசாரணைக்குப் பிறகு, பெண்களை அனுப்பிவைக்கச் சம்மதித்திருக்கிறார். அந்தப் பெண்களே இவர்களை பிக்கப் செய்து, காரில் அழைத்துப்போவார்கள். சிவன் கோயிலுக்குப் பிரசித்தி பெற்ற அந்த ஊரில் குறிப்பிட்ட லாட்ஜில் தங்க வேண்டும். மறுநாள் பேசிய தொகையைப் பெண்களிடம் கொடுத்துவிட வேண்டும் என்பது டீல்.

சென்னையில் குறிப்பிட்ட இடத்தில் அந்த இளைஞர்கள் காத்திருக்க, காரில் டிரைவருடன் வந்த அந்தப் பெண்கள் இவர்களை பிக்கப் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்கள் அனைவரும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களைப் பார்த்ததும் நண்பர்கள் புரிந்துகொண்டார்கள். இவர்கள் கேட்டபடியே ஜீன்ஸ், டீசர்ட்டில் கல்லூரி மாணவிகள்போல இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் பேச நண்பர்களுக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது.

பசி… வறுமை… பாலியல் தொழில்!

சென்னையிலிருந்து அந்த ஊருக்குப் போகும் வழியில் அந்தப் பெண்கள் பசிக்கிறது சாப்பிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். நான்வெஜ் ரெஸ்ட்ரான்ட்டில் காரை நிறுத்திச் சொல்லி அனைவரும் உள்ளே சென்றிருக்கிறார்கள். அங்கே அந்தப் பெண்களுக்கும் தங்களுக்கும் தேவையான உணவுகளை நண்பர்கள் ஆர்டர் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்கள் சாப்பிடத் தொடங்கியதும் நண்பர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கல்லூரி மாணவிகள் போன்ற தோற்றம், ஆங்கில உரையாடல் என்று படு ஸ்டைலாக இருந்த அந்தப் பெண்கள் உணவைக் கண்டதும் அள்ளி அள்ளி வாயில் போட்டிருக்கிறார்கள்.

சுற்றுப்புறத்தை மறந்து அவர்கள் சாப்பிட்ட அந்தக் காட்சியைப் பார்த்த நண்பர்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. எவ்வளவு சொல்லியும் அவர்களால் பொறுமையாகச் சாப்பிட முடியவில்லை. அப்போது நண்பர்கள் அவர்களிடம் ஏன் இப்படி சாப்பிடுகிறீர்கள் என்று கேட்க, அதற்கு அந்தப் பெண்கள் சொன்ன பதிலை கேட்டு நண்பர்கள் ஆடிப்போய்விட்டார்கள். அந்தப் பெண்கள் நான்கு நாள்களாகச் சாப்பிடவே இல்லை. உங்களைப் போன்ற கஸ்டமர்கள் கிடைத்தால்தான் எங்களுக்கு சாப்பாடும் பணமும் கிடைக்கும். கையிலுள்ள காசு கரைந்துவிட்டால் அடுத்து கஸ்டமர்கள் வரும்வரை பட்டினிதான் என்று சொல்ல இவர்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.

Representational Image
Representational Image
Pixabay

அதற்கு மேல் நண்பர்களால் அவர்களைப் பாலியல் தொழிலாளிகளாகப் பார்க்க முடியவில்லை. அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த லாட்ஜுக்குப் போனதும் எதற்காக அவர்களை அழைத்துப் போனார்களோ அதைச் செய்யாமல் அவர்கள்மீது பரிதாபப்பட்டு சாப்பிடுவதற்கு நிறைய வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் கையிலுள்ள பணம் முழுவதும் அதிலேயே கரைந்துபோய்விட அடுத்த நாள் காலையில் உடன்வந்த டிரைவர் அந்தப் பெண்களை அழைத்துப் போக வந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வந்தவர் ஏற்கெனவே பேசியபடி பணத்தைக் கேட்டிருக்கிறார். நண்பர்களிடம் பணம் இல்லை. டென்ஷனான டிரைவர் அவர்களிடம் கண்டபடி பேசியிருக்கிறார்.

இதில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிவிட்டது. இந்தப் பெண்களை அனுப்பிவைத்த புரோக்கருக்கு தகவல் போக அவர் பணம் தராமல் அந்த இளைஞர்களை அங்கிருந்து அனுப்பக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். உடனே, அந்த இளைஞர்கள் துப்பாக்கிமுனையில், சிறைவைக்கப்படுகிறார்கள்.

இளைஞர்கள் சென்னையிலுள்ள தன் நண்பரிடம் பேசி பணம் எடுத்துவரச் சொல்லியிருக்கிறார்கள். பணம் வரத் தாமதமானதால் இளைஞர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அப்போது அந்த இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

கைது
கைது

வேடிக்கை பார்த்த அந்த ஏரியாவாசிகள் தலையிட்டு என்ன ஏதேன்று கேட்டிருக்கிறார்கள். தங்கள் ஏரியாவில் பாலியல் தொழில் நடப்பது அவர்களுக்குத் தெரிந்தால் பெரும் பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்த அந்த டிரைவர் புரோக்கருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். புரோக்கர் சென்னை காவல்துறையிலுள்ள தன் நண்பர்களைத் தொடர்புகொண்டு பிரச்னையைச் சொல்லியிருக்கிறார்.

என்ன நடந்தாலும், தன்னுடைய சொத்துகளான அந்தப் பெண்களுக்கு மட்டும் பிரச்சனை வரக் கூடாது என்ற புரோக்கர் காவல்துறை நண்பர்களிடம் வருத்தப்பட்டு உதவி கேட்டிருக்கிறார். உடனே போலீஸார் அந்த இடத்துக்குச் சென்று அங்கு கூடியிருந்த மக்களிடம் இளைஞர்கள் அந்தப் பெண்களை கடத்திவந்தததாகச் சொல்லி நம்பவைத்திருக்கிறார்கள்.

அதற்கு மேல் அந்த இளைஞர்களை வெளியேவிட்டால் தங்கள் தொழிலுக்குப் பெரும் பாதகமாகிவிடும் என்று புரோக்கர் கேட்டுக்கொண்டார். அதற்காகவே அந்த இளைஞர்கள் மீது அந்தப் பெண்களைக் கடத்திவந்ததாகவும், அவர்களை வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பிவிட்டார்கள்.

தப்பி ஓடிய அந்த இளைஞரை வலைவீசித் தேடிக்கொண்டிருக்க அந்த இளைஞர்தான் மேற்கண்ட விவரங்களை பத்திரிகை நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். `பேச்சுலர் பார்ட்டியில் பெண்கள் வேண்டும் என்று கேட்டது தப்புதான் ஆனால், அந்தப் பெண்கள் மீது இரக்கப் பட்டு உதவி செய்யப் போய்த்தான் நாங்கள் மாட்டிக்கொண்டோம்’ என்று அந்த இளைஞர் கண்கலங்கியிருக்கிறார்.

பகுதி 4 -க்கு செல்ல...

கர்நாடகா: பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தப்பித்த கொலையாளியின் கதை |க்ரைம் டேப்ஸ் - பகுதி 4
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு