Published:Updated:

`கொலையில் முடிந்த முன்விரோதம்..தம்பியை வெட்டிய அண்ணன்!’ - மதுவால் சிவகங்கையில் அதிகரித்த குற்றங்கள்

கொலை
கொலை ( Representational Image )

சிவகங்கையில், டாஸ்மாக் திறந்த முதல்நாளே பல்வேறு குற்றசம்பவங்கள் நடந்துள்ளன.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 24ம் தேதி முதலே மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. 40 நாள்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பலர் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளனர். மதுவிலக்கு கொண்டு வர இதுதான் சரியான நேரம் என்று பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், டாஸ்மாக் கடைகளை நேற்று திறந்தது தமிழக அரசு. இதனால் தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்கள் நடந்தன.

சிவகங்கை
சிவகங்கை

ஒரு மாத இடைவெளிக்குப் பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், மதுப் பிரியர்கள் கூட்டமாகக் கடைகளில் குவிந்தனர். கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில் தனிமனித இடைவெளியில்லாமல் டாஸ்மாக் கடைகள் நிரம்பி வழிந்தன. அவர்களை ஒழுங்குபடுத்த போலீஸார் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அதேபோல், மதுபானம் அருந்திய பின்னர், பல்வேறு குற்றச்சம்பவங்களும் நடந்தன.

சிவகங்கை மாவட்டத்திலும் சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, காளையார்கோயில் எனப் பல இடங்களில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவாகியுள்ளன. பல கிராமங்களில் சண்டையில் மண்டை உடைப்பு முதல் மதுபோதை விபத்துகள் வரை சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அப்படி மதுபோதை தகராறில் நடந்த சண்டையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். காரைக்குடி பாராவயலைச் சேர்ந்த ராக்கப்பனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கும் ஏற்கெனவே இடம் தொடர்பாக தகராறு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராக்கப்பன் வேலை செய்யும் காட்டுப் பகுதியில் கள்ளச்சாரய ஊரல் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸாருக்கு அதுகுறித்து தகவல் தெரியவந்திருக்கிறது.

கருப்பையா
கருப்பையா

இதையடுத்து, கள்ளச்சாராயம் காய்ச்சும் முன்பே அதைப் பறிமுதல் செய்து அழித்தனர். இதனால், காவல்துறையினருக்குக் கருப்பையாதான் இதுகுறித்து தகவல் சொல்லி இருப்பார் என ராக்கப்பன் சந்தேகம் கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, மது போதையில் கருப்பையாவிடம் ராக்கப்பன் இதுகுறித்து கேட்டு சண்டைபோட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா மற்றும் அவரது மகன் காசியும் ரக்கப்பனைக் கட்டையால் திருப்பித் தாக்கியுள்ளனர். இதில் ராக்கப்பன் உயிரிழந்தார். இதையடுத்து, கருப்பையாவையும், 10ம் வகுப்பு படிக்கும் அவரது மகனையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அதேபோல் போதையில் தம்பியை அண்ணன் அரிவாளால் வெட்டிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. காரைக்குடி அருகே இலுப்பக்குடியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவருக்கும் இவரது அண்ணன் வைரவசுந்தரக்கும் இடையே ஏற்கெனவே கடுமையான பிரச்னைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

crime
crime

இந்நிலையில் நேற்று குடிபோதையில் வந்த வைரவசுந்தரம், முருகானந்தத்திடம் தங்கள் குடும்பச் சொத்து தொடர்பாகக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் வைரவசுந்தரம் அரிவாளால் முருகானந்தத்தின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதைத் தடுக்க வந்த முருகானந்தம் மனைவி ஜெயலட்சுமிக்கும் வெட்டு விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக முருகானந்தத்தின் மகள் கவிதா, போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் அழகப்பபுரம் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்கு பதிந்து, வைரவ சுந்தரத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு