Published:Updated:

தேனியில் தொடரும் கொடூர கொலைகள்… விழித்துக் கொள்ளுமா காவல்துறை? #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

தொடர் குற்றம் இழைப்பவர்களைக் கண்காணிப்பில் வைக்காததே, தேனியில் தொடர் கொலைகள் நிகழ்வதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. #TamilnaduCrimeDiary

சமீபத்தில் சுருளி அருவி செல்லும் தொண்டைமாந்துறை முல்லைப்பெரியாறு ஆற்றின் கரையில், தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்டு சாக்குப் பையில் உடல் மட்டும் கட்டி வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தேனி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸாரின் விசாரணையில், மதுபோதையில் தாயிடமே தவறாக நடக்க முயன்ற கம்பத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரனை, அவரின் தாய் மற்றும் தம்பி இருவரும் சேர்ந்து வீட்டிலேயே கொலை செய்ததும், கறிக்கடைகளில் பயன்படுத்தப்படும் பெரிய கத்தியை வாங்கிவந்து, வீட்டில் வைத்து, விக்னேஷ்வரனின் கைகள், கால்கள், தலை ஆகியவற்றைத் தனித்தனியாக வெட்டி, ஒவ்வொன்றையும் சாக்கில் கட்டி கம்பத்தின் வெவ்வேறு பகுதிகளில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்கறிஞர் ரஞ்சித்
வழக்கறிஞர் ரஞ்சித்

இந்தக் கொடூர கொலை நடந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், சில தினங்களுக்கு முன்னர், உத்தமபாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித், இருசக்கர வாகனத்தில், மதுரை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, கூலிப்படையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பலால், கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் அறிந்த தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, கூலிப்படையைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்தார். இச்சம்பவத்தில் 12 பேர் வரை தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்து கொலையாளிகளைத் தேடிவந்தனர். விசாரணையில், நிலப் பிரச்னை காரணமாக, வழக்கறிஞர் ரஞ்சித்துக்கும் வழக்கறிஞர் ஜெயபிரபுவுக்கும் முன்விரோதம் இருந்ததையும், அதனால் ஜெயபிரபு கூலிப்படை உதவியுடன் ரஞ்சித்தைக் கொலை செய்ததும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ஜெயபிரபு மற்றும் கூலிப்படையினர் 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இன்னும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.

செல்வம்
செல்வம்

நடு ரோட்டில், வாகனங்கள் அதிகமாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தேனி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடரும் கொடூர கொலைகளால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். வழக்கறிஞர் ரஞ்சித் கொலை வழக்கில், கூலிப்படையை அழைத்து வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் செல்வம் என்பவர், ஏற்கெனவே குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டவர்.

தொடர்ச்சியாகக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பது போலீஸாரின் வழக்கம். ஆனால், தொடர் கொள்ளை, கொலை வழக்குகளில் தொடர்புடைய செல்வம், சிறையில் இருந்து வந்த பின்னர் என்ன செய்கிறார் என்பதை போலீஸார் கண்காணிக்காமல் விட்டதே இக்கொலை சர்வ சாதாரணமாக அரங்கேறியதற்குக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் கொதிக்கின்றனர். இனிமேலாவது விழித்துக் கொள்ளுமா தேனி காவல்துறை?

அடுத்த கட்டுரைக்கு