Published:Updated:

பன்றி வியாபாரப் போட்டி... அடுத்தடுத்த கொலைகள்... நடுங்கும் மலைக்கோயில் மாநகரம்! #க்ரைம்ஸ்டோரி

க்ரைம் ஸ்டோரி
க்ரைம் ஸ்டோரி

திருச்சியை உறைய வைக்கும் கொலைகள் முதல் கவர்னர் பெயரைச் சொல்லி மாட்டிக்கொண்ட போலி ஐ.ஏ.எஸ். வரை... சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய க்ரைம் ஸ்டோரிகளின் தொகுப்பு.

கடந்த ஆறுமாதங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகளால் திருச்சி மாவட்டம் திகிலடைந்து கிடக்கிறது. இதுவரை நடந்த கொலைகளின் பட்டியல் இருபதைத் தாண்டுகிறது. கடந்த டிச.3-ம் தேதி மாலை, திருச்சி மேல அம்பிகாபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அப்துல்வாஜித் காணாமல் போனான். பல்வேறு இடங்களில் அச்சிறுவனைத் தேடி அலைந்த அவனது பெற்றோர், இறுதியாகக் கடந்த 6-ம்தேதி அரியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அப்துல் வாஜித்
அப்துல் வாஜித்

இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், சில வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட ரவுடி பன்றி சேகர் என்பவரின் ஆதரவாளர்கள், சிறுவன் அப்துல்வாஜித்தைக் கொலை செய்து, உடலைக் கல்லைக் கட்டி திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கிலுள்ள தண்ணீர்த்தொட்டியில் போட்டிருப்பதாகக் கூறியவுடன் காக்கிகளுக்கே வியர்த்துவிட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 20 வயதுக்குள்ளான இளைஞர்கள் என்பது அடுத்த அதிர்ச்சிக்கரத் தகவல்.

உடனடியாக களமிறங்கிய போலீஸார், தண்ணீர்த் தொட்டியிலிருந்து அழுகிய நிலையில் அப்துல்வாஜித் உடலை போராடி மீட்டனர். இச்சிறுவனின் கொலைக்கு ஓரினச்சேர்க்கை பிரச்னை, பன்றி வளர்ப்பு விரோதம் எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. இறுதியில், ரவுடி பன்றி சேகரின் குடும்பத்தாருக்கும் பன்றி பெரியசாமி என்பவருக்கும் இடையேயான பன்றி வளர்ப்புப் போட்டியில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

குப்பைக்கிடங்கு
குப்பைக்கிடங்கு
பன்றி வியாபாரப் போட்டி... அடுத்தடுத்த கொலைகள்... நடுங்கும் மலைக்கோயில் மாநகரம்! #க்ரைம்ஸ்டோரி

பன்றி சேகர் குடும்பத்தாரின் பன்றிகள் மேயும் இடங்களையும் அவற்றின் எண்ணிக்கையையும் அப்துல்வாஜித் வேவு பார்த்து பன்றி பெரியசாமி குடும்பத்துக்கு கூறியதாக சேகரின் அடியாட்கள் சந்தேகித்துள்ளனர். டிச.3-ம் தேதி மாலை அப்துல்வாஜித் தனியாகச் சிக்கியவுடன் அச்சிறுவனை தூக்கிக் கொண்டுபோன பன்றி சேகரின் மகன் மாரிமுத்துவும் அவரது கூட்டாளிகளும் சிறுவனைக் கொலை செய்து குப்பைக் கிடங்கின் கிணற்றில் போட்டது திருச்சி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. கடந்த வருடம் பன்றி பெரியசாமியின் மகன் சிலம்பரசன் செய்த கொலைக்குப் பழிக்குப் பழியாகவும் இக்கொலை நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் சிலரை போலீஸார் தப்பவிட்டதாகவும் நேர்மையான காக்கிகள் புலம்புகிறார்கள்.

கடந்த நவ.12-ம் தேதி, தொழில் விரோதம் காரணமாக அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் திருச்சி மாவட்டம், சிறுகனூர் அடுத்த தச்சங்குறிச்சி காட்டுப்பகுதியில் எரித்துக் கொல்லப்பட்டார். நீண்ட இழுபறிக்குப்பிறகு, ஜாகிர்உசேன் செல்போன் மூலம் கொலையாளிகளான சரவணன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, கடந்த செப்.2-ம் தேதி நள்ளிரவு, திருச்சி மாவட்டம் லால்குடி சின்னச்செட்டியைச் சேர்ந்த பார்த்தசாரதி நள்ளிரவு ஒரு மணியளவில் தினேஷ் என்பவரால் குத்திக் கொல்லப்பட்டார். சமீபத்தில் திரைப்படம் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், அஜித் ரசிகர் தமிழழகனை கொலை செய்த அவரின் நண்பர்கள், அந்த உடலை எரித்தது 20 நாள்களுக்குப் பிறகு அம்பலமானது. தமிழழகனின் எரிக்கப்பட்ட உடலின் பாகங்கள் இப்போதுவரை கிடைக்காததால் போலீஸார் தவித்து வருகிறார்கள்.

தமிழழகன்
தமிழழகன்

பழிக்குப்பழியாகக் கொல்லப்பட்ட திருச்சி உறையூர் காசிரெட்டித் தெருவைச் சேர்ந்த சபரிகிரிவாசன், நாயை அடித்தற்காகக் கொல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் வீரமுத்து, தொழிற் தகராறில் ரவுடி ரஜினி, காதலை கைவிட மறுத்த பாலக்கரை பசுமடம் பகுதியைச் சேர்ந்த சத்தியநாராயணன், மதுபானங்களைத் திருடத் தடையாக இருந்ததற்காகக் கொல்லப்பட்ட பூவாளூர் டாஸ்மாக் கடை வாட்ச்மேன் பாலையா என சமீபகாலமாக நிகழ்ந்த கொலைகள் அத்தனையும் திகில் ரகம். மொத்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பெரும்பாலும் 25 வயதுக்குக் கீழானவர்கள் என்பதுதான் அதிர வைக்கிறது.

நம்மிடம் பேசிய காவல்துறை உயரதிகாரிகள், ``திருச்சி மாவட்டத்தில் அதிகரித்துவரும் `மோட்டீவ்’ கொலைகளைத் தடுக்க தீவிரக் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரவுடிகளைக் கைது செய்து வருகிறோம். ரவுடிகளுக்கு உதவுகிற நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சமூக விரோதச் செயல்கள் மற்றும் ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் பற்றி பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், தகவல் கொடுப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்” என்றார்கள். நிலைமை முற்றுவதற்குள் காக்கிகள் நடவடிக்கை எடுத்தால்தான் காவிரி பாயும் திருச்சி மாநகரத்தில் அமைதி தவழும்.

எச்சரிக்கை

கூலிக்காக கொலை செய்வது மதுரை மாவட்ட கிராமப்புறங்களில் குடிசைத் தொழிலாக மாறி வருகிறது. குறிப்பாக மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதியில் கூலிப்படைக் கலாசாரம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அ.வல்லாளபட்டி கிராமத்தில் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் அசோகன் பட்டப் பகலிலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். மாநகர காவல்துறைக்கும் மாவட்ட காவல்துறைக்கும் தொடர்பு இல்லாததே இது போன்ற அசம்பாவிதங்கள் அரங்கேற முக்கியக் காரணம். பல காவல்நிலையங்களில் சொந்த ஊரைச் சேர்ந்தவர்களே பணியாற்றுவதால் சில வழக்குகள் உறவுகள் அடிப்படையில் பேசித் தீர்க்கப்படுகின்றன. மதுரை மாவட்டம் கூலிப்படை உற்பத்தி நிலையமாக மாறுவதற்கு முன்னர் காவல்துறை விழித்துக்கொள்வது நல்லது.

அச்சுறுத்தும் ஆன்லைன் ரம்மி... தற்கொலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி, பணத்தை இழந்து தற்கொலைக்குத் தள்ளப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. டி.வியில் ஒளிபரப்பப்படும் ரம்மி விளம்பரங்களைப் பார்த்து ஒரே நாளில் `ஓஹோ’ என வசதியாகலாம் எனப் பேராசையுடன் ரம்மி விளையாட்டில் குதிப்பவர்கள், இருப்பதையும் இழந்துவிட்டு தெருவில் நிற்பதுதான் மிச்சம்.

சில நாள்களுக்கு முன்னர் சாத்தான்குளம் அருகில் உள்ள பிரண்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர், தன் மகள்களான லாவண்யா, பிரியதர்ஷினி ஆகியோருக்கு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்து கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுவிட்டார். தற்போது ஆபத்தான நிலையில் மூவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மனைவியின் நகைகளை விற்றும் கடன் வாங்கியும் ரம்மியில் தோற்றதால் வெற்றிவேலின் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சரவணன்
சரவணன்

ஆன்லைன் ரம்மி காரணமாக ஏற்படும் விபரீதங்கள் குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்கிறார். அவர் கூறுகையில், ``இந்தியாவில் இணைய வசதி மிகக்குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்த பின்னர் வலைதளங்களில் செயல்படும் நேரம் அதிகரித்துவிட்டது. சிலர் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கும் நிலையும் உருவாகிவிட்டது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இந்த விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் என்பது வருத்தப்படக் கூடிய உண்மை.

சாதாரண கூலித் தொழிலாளர்கள் முதல் அதிகாரிகள் வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். தொடக்கத்தில் வெற்றி பெற்று பணம் கிடைக்கத் தொடங்குவதாகவும் பின்னர் அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்படுவதாகவும் இதை விளையாடுபவர்கள் தெரிவிக்கிறார்கள். குடும்பப் பெண்கள் கூட இந்த விளையாட்டுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். இது சூதாட்டம் அல்ல என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் சட்ட ரீதியாக இது போன்ற விளையாட்டுகளைத் தடை செய்ய முடியாது. அதனால்தான் பொதுமக்களுக்கு இத்தகைய சூதாட்டங்களின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார் அக்கறையுடன்.

``கவர்னரே நான் சொன்னா தான் கேட்பாரு…!” புருடாவிட்டு சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்

துணை ஜனாதிபதி, ஆளுநர் மற்றும் அரசியல் முக்கியப் பிரமுகர்களின் பெயர்களைச் சொல்லி வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த கூட்டத்தை கூண்டோடு கைது செய்துள்ளது சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு.

சில வாரங்களுக்கு முன்னர் சரோஜாதேவி என்பவர், தன் தம்பிக்கு துறைமுகத்தில் இன்ஜினீயர் வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்து விஜயகுமார் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி 13 லட்ச ரூபாய் ஏமாற்றிவிட்டதாக மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளார். திடுக்கிட்ட போலீஸார் விசாரணையை முடுக்கிவிட, விஜயகுமார் என்கிற பெயரில் டேனியல்ராஜ் என்பவர் மோசடியில் ஈடுபடுவதைக் கண்டுபிடித்தனர்.

டேனியல்ராஜ்
டேனியல்ராஜ்

வேலை வாங்கித் தரவேண்டி யார் அணுகினாலும் ஏதாவது ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அவர்களை வரவழைக்கும் டேனியல்ராஜ், ஏமாறப் போகும் பார்ட்டிகள் முன்னிலையிலேயே மத்திய அமைச்சர்களுடனும் கவர்னருடனும் பேசுவதுபோல நடிப்பாராம். கவர்னரின் நேர்முக உதவியாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் டேனியல்ராஜ், ``கவர்னரே நான் சொன்னா தான் கேட்பாரு. துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவுக்கு நான்னா உயிரு. டெல்லி போனா அவர் வீட்டுல டீ குடிக்காம வரவே மாட்டேன்” என்று அளந்துவிடுவாராம். இவரது மாய்மாலங்களை உண்மை என நம்பும் அப்பாவிகள், டேனியல்ராஜ் கேட்கும் தொகையைக் கொட்டியுள்ளனர். பணத்தை பார்ட்டிகளிடம் இருந்து பெறுவதற்கு என்றே நெல்லூரைச் சேர்ந்த சேஷையா, பாளையங்கோட்டையைச் சேர்ந்த தியாகராஜ் என ஒரு கூட்டத்தையே டேனியல்ராஜ் உடன் வைத்திருந்துள்ளார்.

‘என்.ஆர்.சியை அமல்படுத்தும் திட்டம் இப்போது இல்லை!’ - அமித் ஷா #NowAtVikatan

இக்கூட்டத்தை மொத்தமாகக் கைது செய்த காவல்துறை, டேனியல்ராஜ் மீது ஏற்கெனவே பல புகார்கள் மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளது. இதுவரையில் டேனியல்ராஜிடம் ஏமாந்தவர்களின் பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது. இப்புகாரை தீர விசாரித்து விரைந்து குற்றவாளிகளைக் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் தலைமையிலான காவலர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

சபாஷ்!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இந்தி நடிகர் அமீர்கான் நடிக்கும் `லால் சிங் சத்தா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தனுஷ்கோடி பகுதியில் ஆய்வுக்குச் சென்றிருந்த அம்மாவட்ட எஸ்.பி வருண்குமார், சினிமா படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் அமீர் கானைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ராமநாதபுரத்தில் இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்து வருவதையும் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் அமீர் கானிடம் வருண்குமார் கோரிக்கை வைக்க, ``அதுக்கென்ன, இங்கேயே சொல்லிட்டா போச்சு” என்று அமீர் கான் உற்சாகமாகிவிட்டாராம். உடனடியாக மொபைல் மூலம் வீடியோ எடுக்கச் சொன்ன அமீர்கான், ``ஒருமுறை இருக்கும் இந்த வாழ்க்கையைப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி யாரும் கெடுத்துக்காதீங்க” என்று அட்வைஸ் வழங்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கணநேரத்தில் வைரலானது.

அமீர்கானுடன் வருண்குமார் ஐ.பி.எஸ்
அமீர்கானுடன் வருண்குமார் ஐ.பி.எஸ்

மாவட்டத்தில் நடக்கும் குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய தனி கைப்பேசி எண், கள்ளத்தனமாக மது விற்போர் மீது நடவடிக்கை, மாறு வேடங்களில் சென்று திடீர் சோதனை நடத்துவது என தீவிரமாகப் பணியாற்றும் வருண்குமார் ஐ.பி.எஸ்., தனக்கு கிடைத்த சிறிய வாய்ப்பிலும் நடிகர் அமீர் கான் மூலமாக போதைத் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டது டி.ஜி.பி. திரிபாதி வரையில் பாராட்டைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு