Published:Updated:

கடலூர்: `அக்னி ஹோமம்; எட்டடி சவக்குழி!’ - கோயிலுக்குள் ஜோதிடர் அரங்கேற்றிய கொடூரம்

கொலை செய்யப்பட்ட கண்ணதாசன்
கொலை செய்யப்பட்ட கண்ணதாசன்

பெண்ணுடன் ஏற்பட்ட தவறான நட்பின் காரணமாக ஒருவரைக் கொலை செய்ததுடன், அந்தச் சடலத்தை கோயில் வளாகத்திலேயே புதைத்த அர்ச்சகரையும், அவரின் தோழியையும் அதிரடியாகக் கைது செய்திருக்கிறது கடலூர் மாவட்ட காவல்துறை.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா, வயது 29. இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனியாக வசித்துவரும் இவர், அதேபகுதியிலுள்ள வேணுகோபாலசாமி கோயிலின் அர்ச்சகரும், தமிழக அளவில் அறிமுகமான ஜோதிடருமான கோபிநாத் (வயது 52) என்பவரிடம் ஜோதிடம் பார்க்க வரும் மக்களுக்கு டோக்கன் கொடுக்கும் வேலையைச் செய்துவந்தார். அதேபோல திருமணமாகி தனியாக வசிக்கும் பணிக்கன்குப்பத்தைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர், பண்ருட்டியிலிருக்கும் மளிகைக் கடை ஒன்றில் வேலை செய்துவந்தார்.

ஜோதிடர் கோபிநாத்தின் வீடு
ஜோதிடர் கோபிநாத்தின் வீடு

அப்போது மஞ்சுளாவுக்கும் கண்ணதாசனுக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதால், இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வீடு எடுத்து வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் `கடந்த 12-ம் தேதி கடைக்குச் சென்ற கண்ணதான் வீடு திரும்பவில்லை’ என்று பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மஞ்சுளா. அதன் அடிப்படையில் கண்ணதாசனின் செல்போன் எண்ணைவைத்து, கால் ஹிஸ்டரி’யை ஆய்வு செய்தது காவல்துறை. அதில் கண்ணதாசனுடன் கடைசியாகப் பேசியிருந்த அரச்சகர் கோபிநாத்தை விசாரணைக்கு அழைத்தது காவல்துறை.

அப்போது தனது செல்போன் தொலைந்துவிட்டது என்றும், அந்த எண் தன்னிடம் இல்லை என்றும் போலீஸிடம் கூறினார் கோபிநாத். அதேபோல மஞ்சுளாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், `சாமியார் ரொம்ப நல்லவரு. கண்ணதாசன்தான் சாமியாரு பொண்ணுங்களைப் பத்தித் தப்பா பேசசினாரு. அதனால அவங்களுக்குள்ள அடிக்கடி தகராறு வரும்’ என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் தன்னை விசாரணைக்கு அழைத்ததால் விஷம் சாப்பிட்டுவிட்டதாகக் கூறி புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார் கோபிநாத்.

கோயிலுக்குள் கண்ணதாசன் புதைக்கப்பட்ட இடம்
கோயிலுக்குள் கண்ணதாசன் புதைக்கப்பட்ட இடம்

விசாரணையிலிருந்து தப்பிப்பதற்கான நாடகமாக இருக்கலாம் என்று கணித்த காவல்துறை, அவரது மனைவி மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு பெண் காவலர்கள் மூலம் நெருக்கடி கொடுத்தது. அதன் பிறகு, வேறு வழியின்றி தானாகவே காவல்துறையில் சரணடைந்த அர்ச்சகர் கோபிநாத், மஞ்சுளாவின் வேண்டுகோளின்படி கண்ணதாசனைக் கொலை செய்து, கோயிலுக்குள்ளேயே குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். கோயிலில் கொலை நடைபெற்றிருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடாமலிருக்க இரவோடு இரவாக உடலைத் தோண்டியெடுத்த காவல்துறை, அதை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது.

ஜோதிடர் கோபிநாத் வாக்குமூலமாக காவல்துறை தரப்பில் கூறப்படுவது இதுதான். ``ஜோதிடம் பார்க்க வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கும் வேலை செய்துவந்த மஞ்சுளாவுக்கும் அர்ச்சகர் கோபிநாத்துக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கணவன் மனைவியாகவே வாழ்ந்திருக்கின்றனர். தினமும் மணிக்கணக்கில் கோபிநாத்திடம் பேசிவந்திருக்கிரார் மஞ்சுளா. இந்த விவகாரம் தெரிந்து மஞ்சுளாவைக் கண்டித்திருக்கிறார் கண்ணதாசன். அப்போது கண்ணதாசன் தொல்லை கொடுப்பதாகவும், அவரை எதாவது செய்துவிடும்படியும் கோபிநாத்துடன் தனிமையில் இருக்கும்போது தெரிவித்திருக்கிறார் மஞ்சுளா.

கைது செய்யப்பட்ட ஜோதிடர் கோபிநாத்
கைது செய்யப்பட்ட ஜோதிடர் கோபிநாத்

அதையடுத்து கண்ணதாசனைக் கொலை செய்து கோயிலுக்குள்ளேயே புதைத்துவிட முடிவெடுத்த கோபிநாத், தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த கட்டட மேஸ்திரி ஒருவரிடம் உதவி கேட்டிருக்கிறார். அவரும் ஒப்புக்கொள்ள, கோயிலுக்குள் பூஜை சாமான்கள் போட்டுவைக்கும் அறைக்குள் 10 நாள்களுக்கு முன்பே எட்டடியில் குழியைத் தோண்டித் தயாராக வைத்திருக்கிறார்கள்.

திருவள்ளூர்: `பூட்டிய வீட்டுக்குள் மகன்!' - நீச்சல்குளத்தில் தள்ளிக் கொலை செய்யப்பட்ட தாய்

12-ம் தேதி காலையில் கோபிநாத் செல்போனில் அழைத்ததன் பேரில் கோயிலுக்குச் சென்றிருக்கிறார் கண்ணதாசன். அங்கு தயாராக இருந்த கட்டட மேஸ்திரியும் கோபிநாத்தும் கோயிலின் கதவைச் சாத்திவிட்டு, இரும்புக்கம்பியால் அவரைத் தாக்கியிருக்கிறார்கள்.

ஜோதிடர் கோபிநாத்
ஜோதிடர் கோபிநாத்

அதில் மயங்கி விழுந்த கண்ணதாசனைக் குழிக்குள் தள்ளிவிட்டு, துர்நாற்றம் ஏற்பட்டுவிடாமலிருக்க, பன்னீர் உள்ளிட்ட வாசனை பூஜைப் பொருள்களை தூவியிருக்கிறார்கள். அதன் பிறகு மூட்டைகளில் தயாராகவைக்கப்பட்டிருந்த மண்ணைப் போட்டு மூடி, புதிய சிமென்ட் சிலாப்பைக்கொண்டு மூடியிருக்கிறார்கள்.

உயிரிழந்த கண்ணதாசன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி., எஸ்.டி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கின் ஆரம்பநிலை விசாரணை அதிகாரியான பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கரிடம் பேசினோம். ``கண்ணதாசனின் கால் ஹிஸ்டரி அடிப்படையில் அர்ச்சகர் கோபிநாத்திடம் விசாரணை செய்தோம். ஆனால், `அந்த எண் தொலைந்துவிட்டது’ என்று தெரிவித்த அவர், அன்றைய தினமே புது எண்ணையும் செல்போனையும் வாங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. கண்ணதாசன் போனில் பேசிய நேரமும், அவர் கோயிலுக்குள் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியிருக்கும் நேரமும் சரியாக இருந்தன.

இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்
இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்

வழக்கமாக காலை 10 மணிக்கு கோயிலை மூடும் கோபிநாத், அன்றைய தினம் 9:30 மணிக்கெல்லாம் கோயிலுக்கு வந்த பக்தர்களை அவசர அவசரமாக வெளியேற்றி, கதவை மூடியிருக்கிறார். இதுதான் எங்களுக்குச் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அதன் பிறகு எங்கே கொலை நிகழ்ந்திருக்கும் என்று நாங்கள் சந்தேகித்தோமோ, அதே இடத்தில் அக்னி ஹோமம் நடத்தப்பட்டிருந்தது. கெட்ட சக்திகளை விரட்டியடிப்பதற்காக நடத்தப்பட்ட அந்த ஹோமம்தான் இந்தக் கொலைக்கு சாட்சியாக நின்றது. கோபிநாத், மஞ்சுளா இருவரும் கைது செய்யப்பட்டுவிட்டனர். தலைமறைவாக இருக்கும் மற்றொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு