Published:Updated:

காவல் நிலையத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்! - ஏட்டு சஸ்பெண்டு; காத்திருப்பில் இன்ஸ்பெக்டர்

ஜி.சதாசிவம்

காட்டுமன்னார்கோவிலில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபர் காவல் நிலையத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்கொலை செய்துக்கொண்ட வாலிபர் வினோத்
தற்கொலை செய்துக்கொண்ட வாலிபர் வினோத்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள உருத்திரசோலை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் வினோத் (25). இவர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் உதவி செய்வதுபோல் நடித்து நூதன முறையில் மோசடியில் ஈடுபடுவதாகத் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் ஒருவரிடம் இதேபோல் மோசடி செய்துள்ளார். இதையடுத்து வினோத்தை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கிராம  மக்கள், உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
கிராம மக்கள், உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
எஸ். தேவராஜன்

பின்னர் நேற்று அதிகாலை அவரது சொந்த ஊரான உருத்திரசோலைக்கு அழைத்து சென்று அவரது வீட்டில் இருந்து 6 ஏடிஎம் கார்டுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பணம் எடுத்ததற்கான குறிப்புகள் அடங்கிய சீட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், காவல் நிலையத்தில் உள்ள லாக்கப் அறையில் அடைத்தனர். இந்நிலையில், காவல் நிலைய லாக்கப் அறையில் மர்மமான முறையில் வினோத் இறந்துள்ளார். அவரின் உடல் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது

இது குறித்து தகவலறிந்த அவரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். அப்போது, வினோத்தை போலீஸார் அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும் இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார், கடலூர் மாவட்டக் கண்காணிப்பாளர் அபினவ் ஆகியோர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vikatan

இது குறித்து டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் கூறுகையில், ``வினோத் நூதன முறையில் ஏடிஎம்மில் பண மோசடி செய்வது வழக்கம். இவர் மீது காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளன. மேலும் கரூரில் ஒரு வழக்கு உள்ளது. நேற்று முன்தினம் மாலை ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் ஜெகதீசனிடம் ஏடிஎம்மில் ரூ.1,200 மோசடி செய்துள்ளார். இதையடுத்து வினோத்தைக் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் வீட்டில் இருந்து 6 ஏடிஎம் கார்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் மோசடி செய்த குறிப்புகள், ரூ.12,500 பணம் பறிமுதல் செய்தனர்.

தான் திருடன் எனத் தனது கிராமத்தினருக்குத் தெரிந்ததால், அவமானத்தால் வினோத் காவல் நிலையத்தில் உள்ள லாக்கப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடல் பிரேத பிரசோதனைக்காக கடலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். கடலூர் மாஜிஸ்திரேட் மற்றும் சார் ஆட்சியர் முன்னிலையில் இரண்டு மருத்துவர்கள் அவரது உடலை பிரேத பிரசோனை செய்ய உள்ளனர். இது வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.

இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் தகவல் கொடுக்கப்படும். அதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்டபோது பணியில் இருந்து தலைமைக் காவலர் பாவாடைசாமி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரராஜ் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது'' என்று கூறினார்.