Published:Updated:

“நானும் என் தம்பியும் எந்நேரமும் கொலை செய்யப்படலாம்!” - ஜூ.வி-யிடம் கதறிய மாசிலாமணி

பற்றி எரியும் கடலூர் மீனவ கிராமம்!

பிரீமியம் ஸ்டோரி

உள்ளாட்சித் தேர்தலால் ஏற்பட்ட முன்பகை ஒரு மீனவ கிராமத்தையே சூறையாடியிருக்கிறது. 25 மீன்பிடி படகுகள் உட்பட ஏராளமான வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வன்முறையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இரு தரப்பிலும் 43 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பதற்றம் தணியவில்லை. கிராமம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

கடலூர், குண்டு உப்பளவாடி ஊராட்சியில் அமைந்துள்ளது தாழங்குடா மீனவ கிராமம். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்த ஊராட்சியின் முன்னாள் தலைவர்களான மதியழகனும் மாசிலாமணியும் தலைவர் பதவிக்குத் தங்கள் மனைவிகளை வேட்பாளர்களாக நிறுத்தினார்கள். அதில் மதியழகனின் மனைவி சாந்தி வெற்றிபெற்றார். மாசிலாமணியின் மனைவி பிரவீனா தோல்வி அடைந்தார்.

மாசிலாமணி - மதியழகன்
மாசிலாமணி - மதியழகன்

அதன் பிறகு ஊருக்குள் இரு தரப்பினருக்கும் அவ்வப்போது உரசல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றுக்கு கிருமிநாசினி தெளிப்பது தொடர்பான விவகாரத்தில் மீண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் கும்பலாக மோதிக்கொண்டனர். இந்த விவகாரத்தில் மதியழகன், மாசிலாமணி உட்பட இரு தரப்பிலும் 30 பேர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததுடன், சமாதானப் பேச்சுவார்த்தையையும் நடத்தியது காவல்துறை.

இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 1-ம் தேதி தன் ஐந்து வயது மகனுடன் அதே ஊரில் உள்ள உடற்பயிற்சிக்கூடத்துக்குச் சென்றார் மாசிலாமணியின் தம்பி மதிவாணன். அப்போது ஈட்டி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரைச் சுற்றிவளைத்தது மதியழகனின் தரப்பு. குழந்தையை இருசக்கர வாகனத்திலேயே அமர வைத்துவிட்டு தப்பி ஓடினார் மதிவாணன். ஆனால், சிறிது தூரத்திலேயே அவரை வளைத்த மற்றொரு கும்பல், துள்ளத் துடிக்க வெட்டிப் படுகொலை செய்தது.

“தேர்தல் முன்விரோதம்தான் கொலைக்குக் காரணம். எங்கமேல எந்தத் தப்பும் இல்லை”
மதியழன் அண்ணன் மகன் சிவபாலன்

இதையடுத்து அந்தக் கிராமத்தில் கலவரம் பற்றிக்கொண்டது. 25-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள், சுருக்கு வலைகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதில், மாசிலாமணி தரப்பில் 25 பேர்மீதும், மதியழகனின் தரப்பில் 18 பேர்மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸ், மதிவாணனைக் கொலை செய்த வழக்கில் மதியழகன் உள்ளிட்ட 14 பேரைக் கைது செய்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் அவரின் மனைவி சாந்தியை போலீஸ் தேடிவருகிறது.

“நானும் என் தம்பியும் எந்நேரமும் கொலை செய்யப்படலாம்!” - ஜூ.வி-யிடம் கதறிய மாசிலாமணி

தாழங்குடா கிராமத்துக்கு நேரில் சென்றோம். கிராமத்தின் முகப்பிலேயே ஏராளமான போலீஸார் நின்றிருந்தார்கள். விசாரித்தபோது, `மொத்தம் 600 போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்றார்கள். பலத்த விசாரணைக்குப் பிறகே நம்மை ஊருக்குள் செல்ல அனுமதித்தனர். ஊருக்குள்ளிருந்த ஆண்கள் பெரும்பாலும் தலைமறைவாகிவிட... ஊரே வெறிச்சோடிக் கிடந்தது. மதிவாணன் இறந்த துக்கத்தில் அந்த வீடு சோகத்தில் மூழ்கியிருந்தது. முதலில் நம்மைச் சந்திக்க மறுத்த மதிவாணனின் அண்ணன் மாசிலாமணி, ‘ஜூனியர் விகடன்’ என்றதும் பேசத் தொடங்கினார்.

“நானும் என் தம்பியும் எந்நேரமும் கொலை செய்யப்படலாம்!” - ஜூ.வி-யிடம் கதறிய மாசிலாமணி

‘‘கொரோனா ஆரம்பிச்ச நேரம்... மதியழகன் தனக்கு வேண்டப்பட்டவங்க இருக்குற பகுதியில மட்டும் கிருமிநாசினி தெளிச்சாரு. அதனால 10-வது வார்டு உறுப்பினர் ஷேக் மதர் சாஹிப்பின் மனைவி தனது பகுதியில சொந்தமா செலவு செஞ்சு கிருமிநாசினி தெளிச்சாங்க. அதுக்காக அவங்ககிட்ட மதியழகன் தகராறு செஞ்சார். அப்போ அங்கே போன நான், ‘அவங்க சொந்தச் செலவுல செய்யறதை ஏன் தடுக்குறீங்க?’னு கேட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

“அனைவரின்மீதும் குண்டாஸ் போடுவோம்!”
கடலூர் டி.எஸ்.பி சாந்தி.

உடனே 40 பேரோட என் வீட்டுக்கு வந்த மதியழகன், என்னை ஈட்டியால குத்தி, கத்தியால வெட்டிட்டாரு. ஒன்பது இடத்துல வெட்டுக்காயம். ஆஸ்பத்திரியில மூணு ஆபரேஷன் பண்ணி 25 நாளுக்கு முன்னாடிதான் வீட்டுக்கு வந்தேன். உசுரு பொழைச்சதே பெரிய விஷயம். அப்போ நாங்க திருப்பி அடிச்சதுல மதியழகனுக்கும் தலையில் காயம் ஏற்பட்டுச்சு. வக்கீலா இருக்கும் அவரோட அண்ணன் மகன் சிவபாலன்தான் இவங்களை இயக்குறாரு.

உயிரிழந்த மதிவாணன்
உயிரிழந்த மதிவாணன்

இப்போ, என் தம்பியை கை வேற, கால் வேறயா சிதைச்சு, கொன்னு போட்டுட்டாங்க. அன்னிக்கு நடந்த வன்முறையை நாங்க செய்யலைன்னாலும் அந்த வழக்குல எங்க பேரை முதல்ல எஃப்.ஐ.ஆர்ல சேர்த்திருக்காங்க. அதேசமயம் `கொலைக்குத் தூண்டிய முக்கிய குற்றவாளிகள்’னு நாங்க புகார் கொடுத்த மதியழகன், சிவபாலன் பேரெல்லாம் கடைசியில இருக்கு. உங்க பத்திரிகை வழியா ஒண்ணு சொல்லிக்கிறேன். நானும் என் இன்னொரு தம்பியும் எந்நேரமும் கொலை செய்யப்படலாம். ரெண்டு நாளைக்கு முன்னாடி மூர்த்திக்குப்பம் கிராமத்துல அது தொடர்பா பேச்சுவார்த்தை நடத்தியிருக்காங்க. எல்லாத்தையும் அந்தக் கடவுள் பார்த்துக்கட்டும்’’ என்றார்.

“என் தம்பியை சிதைச்சு, கொன்னுட்டாங்க. நானும் என் இன்னொரு தம்பியும் எந்நேரமும் கொல்லப்படலாம்!”
மாசிலாமணி

மதியழகன் தரப்பு விளக்கத்தைப் பெற அவரின் அண்ணன் மகன் வழக்கறிஞர் சிவபாலனைத் தொடர்புகொண்டோம். ‘‘ஊராட்சித் தலைவர் சாந்தியிடம் இப்போ பேச முடியாது. தேர்தல் முன்விரோதம்தான் கொலைக்குக் காரணம். அன்னைக்கு மதிவாணன் குடிச்சிட்டு வந்து கொலை மிரட்டல் விடுத்ததாலதான் இந்தக் கொலை நடந்திருக்கு. என்மேல அவங்க சொல்ற புகாருல உண்மை இல்லை” என்றார்.

“நானும் என் தம்பியும் எந்நேரமும் கொலை செய்யப்படலாம்!” - ஜூ.வி-யிடம் கதறிய மாசிலாமணி

டி.எஸ்.பி சாந்தியிடம் பேசினோம். “மாசிலாமணி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்தான் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. முக்கியக் குற்றவாளிகளைத்தான் கைது செய்துள்ளோம். மற்ற குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்பட்டு, அனைவர் மீதும் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்படும்” என்றார்.

இரு குடும்பத்தின் பகையில் ஊரே பற்றி எரிவது நியாயம் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு