Published:Updated:

`அப்பாவுக்கு பக்கத்திலேயே என்னை புதைச்சிருங்க!' - கடலூரை உலுக்கிய இளம்பெண்ணின் மரணம்

தற்கொலை செய்துகொண்ட ஷோபனா
தற்கொலை செய்துகொண்ட ஷோபனா

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தன் கணவர், மாமனார் மற்றும் மாமியார் குறித்து உருக்கமான வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தை அடுத்திருக்கும் எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (24) சென்னையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. திருமண சீர்வரிசையாக 50 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணம் 2 லட்சம் மற்றும் வீட்டு உபயோகத்திற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் ஷோபனாவின் பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் விஷாத் என்ற ஆண் குழந்தை இருக்கின்றது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக வேலையை இழந்த விஜயகுமார், மார்ச் மாதமே சொந்த ஊருக்குத் திரும்பினார். அப்போது விஜயகுமாரும், அவரின் பெற்றோர்களும் ஷோபனாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் ஷோபனா நேற்று சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

கதறி அழும் ஷோபனா
கதறி அழும் ஷோபனா

தற்கொலைக்கு முன்பு ஷோபனா மூன்று வீடியோக்களை பேசி தனது அம்மாவுக்கு அனுப்பியிருக்கிறார். அந்த வீடியோ காட்சிகளில், கட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை காட்டிவிட்டு அழுதுகொண்டே பேச ஆரம்பிக்கிறார். ``அம்மா… அம்மா… என்னால இனிமே இங்க இருக்க முடியாது. எனக்கு கேக்குறதுக்கு யாரும் இல்ல. எவ்ளோ பிரச்னை இங்க நடந்திருக்கு. ஆனால், நான் யாருகிட்டயும் சொல்லல. இங்க நடக்கற எல்லாத்தையுமே நான் எனக்குள்ளதான் வச்சிருக்கேன். இதெல்லாம் ஆலம்பாடி சங்கரப்பாவுக்கு (வேப்பூர் அடுத்திருக்கும் ஆலம்பாடி கிராமத்தின் தி.மு.க ஒன்றியச் செயலாளர்) நல்லா தெரியும். அவருகிட்ட எல்லாத்தையும் நான் சொல்லிருக்கேன்.

`என் புள்ளையை பெரிய ஆளாக்குங்க’

ஆனா என்னை பொண்ணு மாதிரி பார்த்துக்கறேன்னு சொன்ன அவரு இங்க வந்து எதையுமே கேக்கல. என்ன இருந்தாலும் இவங்க (மாமியார்) அவரு தங்கச்சி. நாம அத ஒண்ணும் பண்ண முடியாது. இங்கிருக்கறவங்களும் நல்லாதான் பேசிக்கிட்டிருந்தாங்க. ஆனா, என்ன நடந்துச்சின்னு தெரியல. என்ன நடந்தாலும், எனக்காக யாரும் வந்து எதுவும் கேக்க மாட்டாங்க. நான் மட்டும் எப்பவுமே இங்க தனியாதான் இருக்கேன். வீட்டுல நான் எதாவது சொல்லி, அவங்க வந்து கேட்கும்போது அவங்களையும் கெட்ட வார்த்தைகளால திட்டிடுவங்கனுதான் நான் யாருகிட்டையும் எதையும் சொல்லல. நேத்துக்கூட இவர் (கணவர்) என்னை அடிக்கும்போது, நீங்க எதாவது கேளுங்கனு அவங்க அம்மாகிட்ட (மாமியார்) சொன்னேன். அப்போ குழந்தையை மட்டும் தூக்கிட்டு ’உள்ள விட்டு அடிடா’னு சொல்லி ரெண்டு கதவையும் சாத்திட்டு போறாங்க.

கணவர் விஜயகுமாருடன் உயிரிழந்த ஷோபனா
கணவர் விஜயகுமாருடன் உயிரிழந்த ஷோபனா

இப்படில்லாம் அவங்க இருந்தால் எப்படி இந்த வீட்டுல இருக்க முடியும்? என்னால இதுக்குமேல இருக்க முடியாது. இவ்ளோ நாளா தம்பிக்காகத்தான் (மகன்) பாத்துக்கிட்டு இருந்தேன். ஆனால்… (அழுகிறார்) எனக்கு விஷாத்தை நினைச்சாத்தான் ரொம்ப கவலையா இருக்குது. அவனை மட்டும் எப்படியாவது நீங்க பாத்துக்கங்க. எனக்கு அது போதும். அவனை இங்க விட வேணாம். அவனை தூக்கிட்டு போயிடுங்கம்மா. அம்மா நீயாவது சைலேஷ் மாதிரி நல்லா பாத்துக்கோ. அவனை நல்லா படிக்க வை. நல்லா பெரிய ஆளா ஆக்கு. எனக்கு அது போதும். அவனை யாரையும் அடிக்கவிடாதீங்க. என்னை எப்படி பாத்துக்கிட்டீங்களோ அப்படியே அவனையும் பாசமா பாத்துக்கங்க.

சென்னை: மனைவி மீது 73 வயது கணவருக்கு சந்தேகம்! -அதிர்ச்சி கொடுத்த கொலை, தற்கொலை

`யாரையும் சும்மா விடாதீங்க’

நீங்க இருக்கற நம்பிக்கையிலதான் நான் அவனை விட்டுட்டுப் போறேன். அவனை காப்பாத்துங்க. எம்புள்ளைய மட்டும் பத்திரமா வச்சி பாத்துக்கிட்டா அது போதும் (அருகில் தூங்கிக் கொண்டிருக்கும் மகனைக் காட்டுகிறார்). வீட்டுல இருக்கற என்னோட நகைங்களை எல்லாம் இந்தப் பெட்டியிலதான் வச்சிருக்கேன். அதுக்குப் பக்கத்துல இருக்கற டிபன் பாக்ஸ்ல காசும் வச்சிருக்கேன். அதையும், என்னோட பொருளுங்களையும் எடுத்துக்கிட்டு போயிடுங்க. அது எல்லாம் தம்பிக்கு தேவைப்படும். அங்க இருக்கும் என்னோட காசுக்கு வட்டிலாம் வரும். அதையெல்லாம் வச்சி அவனுக்கு ஒரு வீடு கட்டிக் குடுத்துடுங்க. அது எனக்குப் போதும். இங்க இவருக்கு (கணவர்) வர்ற சொத்து எல்லாம் என் பையனுக்குத்தான் சேர வேண்டியது. என் வாழ்க்கையை அழிச்சிட்டாங்க. என் பையனாவது நல்லா இருக்கணும்” என்பதுடன் அந்த வீடியோ முடிகிறது.

ஷோபனா
ஷோபனா

அடுத்த வீடியோவில், ``இங்க ஒருத்தங்க வந்துட்டாங்க. அதனாலதான் அந்த வீடியோ கட் ஆயிடுச்சி. எனக்கு சேர வேண்டியது, அவருக்குச் சேர வேண்டியது எல்லாமே என் பையனுக்கு சேத்துவிட்டுருங்க. அப்பதான் அவன் லைஃப் நல்லாருக்கும். ஆனால் என் சாவுக்குக் காரணமானவங்க யாரையும் நீங்க சும்மா விடாதீங்க. எனக்காக நீங்க ஏதாவது கேக்க வந்து இவங்க உங்களை அசிங்கமா பேசிடுவாங்கனுதான் நான் எதையும் உங்ககிட்ட சொல்லல. நானே இல்லாதபோது இனி நீங்க சும்மா விட வேணாம். எங்க மாமனார் மாமியார் என்னை அடிக்க வந்ததைக் கூட நான் யாருகிட்டயும் சொன்னது கிடையாது. அன்னைக்கு சண்டையில கூட எல்லாரும் என்னைத்தான் அடிக்க வந்தாங்க.

அப்பாவுக்கு பக்கத்துலயே என்னை புதைச்சிடுங்க!

என்னோட ஜிமெயில் அக்கவுன்ட்ல இம்பார்ட்டன்னு எனக்கு நானே அனுப்பிக்கிட்ட ஒரு மெயில் இருக்கும். அதுல போட்டோஸும், ஆடியோவும் இருக்கும். அதை எடுத்துக்கங்க. அப்போ தெரியும் இவங்க எனக்கு எவ்ளோ துரோகம் பண்ணியிருக்காங்கனு. எதனால இப்படியான பிரச்னைலாம் வருதுனு. எப்படியும் அந்தப் பொண்ணுதான் (கணவரின் காதலி என்று கூறப்படும் பெண்) இங்க வரும்னு எனக்கு நல்லாத் தெரியும். அதுக்குதான் இவங்க எல்லாம் பிளான் பண்ணிட்டிருக்காங்க. இவங்க என்னை வாழ விடமாட்டாங்க. என் பையனை மட்டும் நல்லாப் பாத்துக்கோங்க. அது எனக்குப் போதும். இன்னொன்னு நான்தான் யாருக்கும் யூஸ் ஆகல அட்லீஸ்ட் என் உடலுறுப்புகளையாவது தானம் பண்ணிடுங்க. அது என் அப்பாவோட ஆசை. அது மட்டும் பண்ணிடுங்க போதும்.

Vikatan

உமா… (உடைந்து அழுகிறார்) சைலேஷை எப்படிப் பாத்துக்கறியோ என் பையனையும் நல்லபடியா பாத்துக்கோ. எம்மா... உங்களை நம்பித்தான்மா வுட்டுட்டுப் போறேன். நான் போறேன்...” என்பதுடன் அந்தக் காட்சி முடிகிறது.

அடுத்த காட்சியில் புடவையை கழுத்தில் சுற்றிக்கொண்டு அழுதபடியே பேசுகிறார், “இதுதான் என் லாஸ்ட் வீடியோனு நினைக்கிறேன். என் பையனை மட்டும் நல்லாப் பாத்துக்கோ. எனக்கு அது போதும். என்னை என் மாமியார், குடும்பத்தை அழிக்க வந்தவனு சொன்னாங்க. இவ்வளவுக்கும் நான் பவுன் போட்டுக்கிட்டு வந்தும், ஒண்ணுமில்லாத வீட்டுல போயி கட்ட வேண்டியதுதான... இங்க ஏன் வந்து கட்டுனேன்னாங்க. என் புள்ளைய பாத்துக்கோங்க. என் பிணத்தை என் அப்பாவுக்கு பக்கத்துலயே புதைச்சிடுங்க. எனக்கு அதுபோதும்” என்பதுடன் முடிவடைகிறது வீடியோ காட்சிகள்.

இதுகுறித்து ஷோபனாவின் தாய் ஜெயக்கொடி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரில் போலீஸார் விசாரணை செய்தனர் விசாரணையில் ஷோபனாவை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கிலும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கிலும் விஜயகுமார், அவருடைய அப்பா அன்பழகன் அம்மா செல்வராணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஷோபனாவுக்கு திருமணமான நடைபெற்று இரண்டு வருடம் வருவதால் இந்த வழக்கை விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் விசாரணை செய்து வருகிறார்.

திருமணத்துக்கு முன்பும் பின்பும் விஜயகுமாருக்கு இன்னொரு பெண்ணுடன் இருந்த தவறான நட்புதான் ஷோபனா தற்கொலைக்கு காரணம் என போலீஸின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு