Published:Updated:

புதுக்கோட்டை பஞ்சாப் வங்கி விவகாரம்; ஜி.எஸ்.டி-யுடன் நகைக்கு ஈடான பணம்! - அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

புதுக்கோட்டையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6 மாதங்களுக்கு முன்பு தங்க நகைகள் மாயமான சம்பவத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, திடீரென வங்கி நிர்வாகம் சார்பில் நகைக்கு ஈடான பணம் வழங்கப்பட்டு வருகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் மாரிமுத்து. கடந்த ஏப்ரல் 28 -ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. மாரிமுத்துவைக் காணவில்லை என அவரின் மனைவி ராணி, கணேஷ் நகர் போலீஸில் புகார் கொடுத்தார். மறு நாளே புதுக்கோட்டை அருகே வல்லத்திராக்கோட்டை பகுதியில் மாரிமுத்துவின் கார் எரிந்த நிலையில் நின்றது. காருக்குள் எரிந்த நிலையில் சில கவரிங் வளையல்கள், ஹார்டு டிஸ்க் கைப்பற்றப்பட்டன. மாரிமுத்துவைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே, வங்கியில் அடகு வைத்திருந்த நகைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன என்ற தகவல் பரவியதால், வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு குவிந்தனர்.

மாயமான வங்கி ஊழியர் மாரிமுத்து
மாயமான வங்கி ஊழியர் மாரிமுத்து

அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று கூறி வாடிக்கையாளர்களை, வங்கி அதிகாரிகள் சரிக்கட்டி அனுப்பி விட்டனர். இந்த நிலையில்தான், மே மாதம் 3-ம் தேதி மணமேல்குடி கடற்கரைப் பகுதியில் மாரிமுத்துவின் உடல் சடலமாகக் கிடந்தது. மாரிமுத்துவின் சட்டையை வைத்து அவரது மனைவி ராணி உறுதி செய்தார். இதையடுத்து, பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 4.84 கோடி ரூபாய் மதிப்பிலான 13.45 கிலோ தங்க நகைகளை மாரிமுத்து திருடிச் சென்றுவிட்டார் என்று புதுக்கோட்டை டவுன் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதற்கிடையே, மாரிமுத்துவின் மனைவி ராணி, ``வங்கி உயர் அதிகாரிகள்தான் தவறு செய்துவிட்டு தன் கணவர் மீது பழிபோட்டிருப்பதாகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த வழக்கை விசாரித்த போலீஸார், புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் மாரிமுத்து மற்றும் அவரது உறவினர்களின் பெயர்களில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் குறிப்பிட்ட சில நகைகள் அடகு வைத்திருப்பதாகவும், அவற்றை அடையாளம் கண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, வங்கி நிர்வாகம், ``விரைவில் தங்கள் நகைக்கு ஈடான, பணமோ, நகையோ திருப்பித் தரப்படும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

இந்த நிலையில் தான் தற்போது, 140 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கணக்கிட்டு, அனைவருக்கும் நகைக்கு ஈடான பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை ரகசியமாக வரவழைத்து அவர்களுக்குப் பணம் வழங்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையையே பதறவைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி நகை மாயம், வங்கி ஊழியரின் மர்ம மரணத்தின் முடிச்சுகள் ஏதும் அவிழாத நிலையில் வங்கி நிர்வாகம் தரப்பில் தற்போது வாடிக்கையாளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ. 3,600 மற்றும் சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.

இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``அறிவித்தபடி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நகைக்கு ஈடான பணத்தைக் கொடுக்கிறோம். மற்ற எந்த விஷயங்களையும் நாங்கள் சொல்லத் தயாராக இல்லை ” என்று முடித்துக்கொண்டனர்.

இதுபற்றி வாடிக்கையாளர்களிடம் கேட்டபோது, ``எங்க நகைக்கு ஈடான முழுமையான நஷ்டஈடு என்று சொல்ல முடியாது. ஆனாலும், கிடைத்தவரையிலும் சந்தோஷம்" என்கின்றனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

போலீஸாரிடம் பேசினோம், ``தொடர் விசாரணையில், மாயமான மாரிமுத்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நகைகள் சுமார் 4 கிலோ வரையிலும் அடகு வைத்துள்ளார். அவற்றை அடையாளம் கண்டிருக்கிறோம். மேலும், நகைகள் திருடு போனது தொடர்பான விசாரணை நடக்கிறது. மாரிமுத்துவின் உடற்கூறு பகுப்பாய்வு ஆய்வு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. இறந்தது மாரிமுத்துதான் என்பதற்கான ஆய்வு அறிக்கையும் இன்னும் வரவில்லை. ஆய்வு அறிக்கை வந்தவுடன்தான் உண்மை தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடக்கிறது" என்று முடித்துக்கொண்டனர்.