Published:Updated:

சென்னை: அரசு டாக்டர், பேராசிரியர்... சைபர் க்ரைம் மோசடிக் கும்பலிடம் இவர்கள் சிக்கியது எப்படி?

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

சென்னையில் அரசு டாக்டர், பேராசிரியரிடம் நைசாகப் பேசி சைபர் க்ரைம் கும்பல் பணத்தை மோசடி செய்திருக்கிறது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சாந்தினி பிரபாகர். அரசு மருத்துவர். இவரின் செல்போனுக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் செல்போன் நெட்வொர்க் நிறுவனத்தில் உங்களின் சுய விவரங்களை (கேஒய்சி - KYC) அப்டேட் செய்யாததால் விரைவில் சிம்கார்டு காலாவதியாகிவிடும் (Expiry) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சைபர் அட்டாக்
சைபர் அட்டாக்

உடனே டாக்டர் சாந்தினி பிரபாகர், எஸ்.எம்.எஸ்-ஸில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரைத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, டாக்டர் சாந்தினி பிரபாகரின் செல்போன் நம்பருக்கு செயலி ஒன்றின் லிங்க் வந்தது. அதை ஓப்பன் செய்தபோது டாக்டர் சாந்தினியின் செல்போன் ஹேக் செய்யப்பட்டது. அதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் டாக்டரின் வங்கிக் கணக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்தது. இதையடுத்து டாக்டர் சாந்தினி, சென்னை அண்ணா நகர் காவல் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகாரளித்தார். அதன்பேரில் அண்ணாநகர் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். தற்போது இந்தப் புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை: யூடியூப் பார்த்து கற்ற ஃபார்முலா; சைபர் க்ரைம் கும்பல் சிக்கியது எப்படி?
சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்
representational image

இன்னொரு சம்பவம்:

சென்னை விருகம்பாக்கத்தில் குடியிருப்பவர் அன்பழகன். பேராசிரியர். இவரின் மனைவி மகேஸ்வரி. ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தலைமைச் செயலகத்தில் பணியாற்றிவருகிறார். அன்பழகனைத் தொடர்புகொண்ட மோசடி கும்பல், எஸ்.பி.ஐ வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறியிருக்கின்றனர். பின்னர் ஏடிஎம் கார்டைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறி கார்டு விவரங்களைக் கேட்டிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வங்கியிலிருந்துதான் பேசுவதாக நம்பிய அன்பழகனும் விவரங்களைக் கூறியிருக்கிறார். அதன் பிறகு ஓடிபி நம்பரையும் அவர் பகிர்ந்திருக்கிறார். அடுத்த சில நிமிடத்தில் அவரின் வங்கிக் கணக்கிலிருந்து 10,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்திருக்கிறது. அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அன்பழகன் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Hacking | டிஜிட்டல் தகவல்கள்
Hacking | டிஜிட்டல் தகவல்கள்

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``முன்பெல்லாம் படிக்காதவர்கள்தான் இது போன்ற மோசடிக் கும்பலிடம் சிக்கிப் பணத்தை இழப்பார்கள். தற்போது, படித்தவர்களும் மோசடிக் கும்பலின் வலையில் சிக்கிப் பணத்தை இழந்துவருகிறார்கள். செல்போனுக்கு தேவையில்லாமல் வரும் லிங்க், எஸ்.எம்.எஸ்-களை மக்கள் ஓப்பன் செய்ய வேண்டாம். ஏனெனில், அந்த லிங்க் மூலம் செல்போன் ஹேக் செய்யப்பட்டு உங்களின் செல்போனிலிருக்கும் அனைத்து விவரங்களையும் சைபர் க்ரைம் மோசடிக் கும்பல் எடுத்துவிடும். அதேபோல ஓடிபி எண்கள், ரகசிய எண்கள் ஆகியவற்றை யாரிடமும் பகிரக் கூடாது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு