Published:Updated:

`மேட்ரிமோனியில் மனைவிக்கு வரன் தேடிய கணவன்!' - மாமனாரின் புகாரால் சிக்கிய நபர்

கருத்து வேறுபாட்டின் காரணமாகப் பிரிந்து வாழ்ந்துவந்த தனது மனைவிக்கு, மேட்ரிமோனியில் வரன் தேடிய நபரை சைபர் க்ரைம் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரை அடுத்த உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரரின் மகள் ஜான்சி (32) சாஃப்ட்வேர் இன்ஜினீயர். பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்த ஜான்சிக்கு, கடந்த 2016-ம் ஆண்டு அவரது பெற்றோர் திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த ஓம் குமார் (34) என்பவருக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர். திருமணமான கையுடன் ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்திருக்கிறது. அதனால், கணவன், மனைவி இருவரும் அமெரிக்கா சென்று தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஆனால், திருமணமாகி அமெரிக்காவில் தங்கிய சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதால், ஜான்சி தன் கணவர் ஓம் குமாரைப் பிரிந்து தனியாக வசித்து வந்திருக்கிறார். ஓம் குமாரும் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி, தனது சொந்த ஊரான வெள்ளியூரில் வசித்துவந்தார்.

திருவள்ளூர்
திருவள்ளூர்

இந்தத் தம்பதிக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கும் நிலையில், ஓம் குமார் இனியும் ஜான்சியுடன் சேரப்போவதில்லை என்ற முடிவில் பூவிருந்தவல்லி குடும்ப நல நீதிமன்றத்தில் ஜான்சியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். ஓம் குமாரின் வழக்கை நீதிபதிகள் தற்போது விசாரித்துவருகின்றனர். இன்னும், விவாகரத்து வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜான்சி மீது கடும் ஆத்திரத்திலிருந்த ஓம் குமார் அவரைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே ஜான்சிக்கு மேட்ரிமோனி இணையதளத்தில் `மாப்பிள்ளை தேவை’ என்று தவறான தகவல்களைப் பதிவு செய்து, அவருக்கு வரன் தேடியிருக்கிறார். அப்போது, தொடர்புக்கு ஜான்சியின் தந்தை பத்மநாபனின் தொலைபேசி எண்ணை ஓம் குமார் பதிவு செய்திருக்கிறார்.

கணவன் - மனைவி, அம்மா - மகன், அப்பா - மகள்; உள்ளாட்சித் தேர்தலில் `குடும்ப' ஆட்சி!

அதனால், இணையதளத்தில் ஓம் குமாரின் விளம்பரத்தைப் பார்த்த பலரும் பத்மநாபனைத் தொடர்புகொண்டு ஜான்சியைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால் அதிர்ச்சியடைந்த பத்மநாபன், ஜான்சி பெயரில் போலியான தகவல்களைப் பதிவிட்டு வரன் தேடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

கைது செய்து சிறையில் அடைப்பு
கைது செய்து சிறையில் அடைப்பு

அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் லில்லி, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், ஜான்சியின் கணவர் ஓம் குமார் திருமண தகவல் மையம் ஒன்றில் பொய்யான தகவல்களைப் பதிவிட்டு ஜான்சிக்கு மணமகன் வேண்டும் என்று விளம்பரம் செய்தது தெரியவந்தது. அதையடுத்து, சைபர் க்ரைம் போலீஸார் நேற்றைய தினம் இன்னும் விவாகரத்துகூட கிடைக்கப்பெறாத நிலையில், தவறான தகவல்களைப் பதிவிட்டு மனைவிக்கு வரன் தேடிய குற்றத்துக்காக ஓம் குமாரைக் கைதுசெய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு