Published:Updated:

` உன்னை அவரிடமே ஒப்படைத்துவிடுகிறோம்!' - நம்பிச் சென்ற கர்ப்பிணி; போலீஸ் முன்பே கொல்லப்பட்ட கணவன்

சத்யா கோபாலன்

``ஊர்மிளா கடத்தப்பட்டுள்ளாரா, அவர் எங்கே உள்ளார் என்ற எந்தத் தகவலும் இதுவரை வெளிவரவில்லை.''

கொலை செய்யப்பட்ட சோலங்கி
கொலை செய்யப்பட்ட சோலங்கி

குஜராத் மாநிலம், குட்ச் மாவட்டம், காந்திதம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரேஷ் குமார் சோலங்கி (Haresh Kumar Solanki ). 25 வயதான இவர் அகமதாபாத்தில் உள்ள ஊர்மிளா ஜலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சோலங்கி, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருவரின் காதலுக்கும் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருமணம் - மாதிரி புகைப்படம்
திருமணம் - மாதிரி புகைப்படம்

இதற்கிடையில் ஊர்மிளாவின் பெற்றோர்களை மீறி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் சோலங்கியின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு ஊர்மிளாவின் உறவினர்கள் அவரை சந்தித்து சில நாள்கள் தங்கள் வீட்டில் (ஊர்மிளாவின் தாய்) வந்து தங்கும் படி அழைப்பு விடுத்துள்ளனர்.

தன் தாய் வீட்டுக்குச் செல்வதற்கு முதலில் தயக்கம் காட்டியுள்ளார் ஊர்மிளா. ஆனால் உறவினர்கள், ``சில நாள்கள் மட்டுமே அங்கு இருந்தால் போதும். மீண்டும் நாங்களே உன் கணவரிடம் உன்னை ஒப்படைத்துவிடுகிறோம்'' என உறுதி அளித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பி ஊர்மிளாவை அவரின் தாய் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார் சோலங்கி.

தாய் வீட்டுக்குச் சென்றபோது ஊர்மிளா இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்

ஊர்மிளா அவரது தாய்வீட்டுக்குச் சென்று இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் அவர் மீண்டும் கணவர் வீட்டுக்கு வரவே இல்லை. இரண்டு மாதங்களாக தன் மனைவியிடம் பேச நினைத்த சோலங்கிக்கு எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், சமீபத்தில் குஜராத் பெண்கள் பாதுகாப்பு காவலருக்கு போன் செய்து தன் மனைவி பற்றிய விவரங்களையும் அவரை வெளியில் விடாமல் பெற்றோர்கள் அடைத்து வைத்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

Vikatan

அவரின் புகாரை அடுத்துக் கடந்த திங்கள்கிழமை இரண்டு வழக்கறிஞர்கள் மற்றும் ஒரு பெண் கான்ஸ்டபிள் ஆகியோர் சோலங்கியுடன் இணைந்து ஊர்மிளா வீட்டுக்குச் சென்றுள்ளனர். சோலங்கி வீட்டுக்கு வெளியே நின்றிருக்க காவலர்கள் மட்டும் ஊர்மிளா வீட்டுக்குள் சென்று அவர் பெற்றோரிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கொலை - மாதிரி புகைப்படம்
கொலை - மாதிரி புகைப்படம்

அந்த நேரத்தில் ஊர்மிளாவின் வீட்டு வாசலில் சோலங்கி நிற்பதைக் கண்ட உறவினர்கள் வேகமாக வெளியில் வந்து கூர்மையான பொருள்களால் கடுமையாக அவரைத் தாக்கியுள்ளனர். இதைக் கண்ட காவலர்கள் வெளியில் வந்து சோலங்கியைக் காப்பாற்ற நினைத்துள்ளனர். ஆனால், அவர்களும் தாக்கப்பட காவலர்கள் கண்முன்பே சோலங்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதில் காவலர்களின் வாகனம் பலத்த சேதமடைந்ததோடு காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த அனைத்துச் சம்பவங்களும் நடந்து முடியும் வரை ஊர்மிளா அந்த இடத்தில் இல்லை எனக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். அவரை எங்கேயோ கடத்தி வைத்திருப்பதாகவும் காவலர்கள் சந்தேகித்துள்ளனர்.

சோலங்கி உடல்
சோலங்கி உடல்
ANI

சோலங்கி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஊர்மிளாவின் தந்தை தசரத்சிங் ஸாலா மற்றும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது, அதிகாரிகளை காயப்படுத்தியது போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.