Published:Updated:

விழுப்புரம் அருகே பட்டியலின இளைஞரை அடித்துக்கொன்ற கும்பல்.. காவல்துறை சொல்வது என்ன?!

இளைஞர் சக்திவேல்
இளைஞர் சக்திவேல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டியலின இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பெண்கள் உட்பட ஏழுபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் கடந்த 12-ஆம் தேதி மதியம் விழுப்புரத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார். சே.புதூர் கிராமத்தின் மலைப்பகுதிக்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது, அங்கு இயற்கை உபாதையைக் கழித்துள்ளார். இதை அருகிலுள்ள நிலத்தில் களை எடுத்துக்கொண்டிருந்த கெளரி என்ற பெண் தவறாகப் புரிந்துகொண்டு சத்தம்போட்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் ஓடிவந்து சக்திவேலைப் பிடித்து கை, கால்களை கட்டி சரமாரியாகத் தாக்கினர்.

சக்திவேல்
சக்திவேல்

மேலும் கௌரியின் கணவர் உட்பட உறவினர்கள் சக்திவேலை கடுமையாகத் தாக்கினர். இதில் சக்திவேல் பலத்த காயமடைந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பெரியதச்சூர் காவல்நிலைய உதவி ஆய்வாளார் வினோத் சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். வீட்டுக்குச் சென்ற சக்திவேல் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரியதச்சூர் காவல்துறையினர் கெளரி அவரது கணவர் ராஜா ஆகியோரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சக்திவேலைத் தாக்கிய நகர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை அவரது மனைவி இந்திரா, மச்சகாந்தன் இவரது மனைவி உமா, மதியழகன், செந்தில் உள்ளிட்ட ஐந்து நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டியலின இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் செஞ்சிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைசெய்யப்பட்ட சக்திவேலின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், சக்திவேலின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

சக்திவேல்
சக்திவேல்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சக்திவேலின் மீது தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், சக்திவேலில் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் மேலும் ``காவல்நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்ற சக்திவேலின் அப்பா தாக்கப்பட்டுள்ளார். சாதி உணர்வோடு செயல்பட்ட காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார், “உயிரிழந்த சக்திவேல் மீது ஏற்கெனெவே பாலியல் வன்முறை வழக்கு ஒன்று இருக்கிறது. சம்பவம் நடைப்பெற்ற அன்று சக்திவேல் தனது உடைகளைக் கழற்றிவிட்டு உள்ளாடையுடன் வயலில் வேலை செய்துகொண்டிருந்த தன்னிடம் தவறாகப் பேசியதாக கௌரி தரப்பில் கூறுகிறார்கள். தொடர்ந்து கௌரி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்ற சக்திவேலை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்து கட்டிவைத்து தாக்கியதுடன் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே சக்திவேலை தாக்கியதாகக் கூறப்படுவது தவறான தகவல்.

சக்திவேல்
சக்திவேல்

அதில் அனைத்து சமுதாயத்தினரும் இருந்திருக்கிறார்கள். தவிர சக்திவேல் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது அங்கிருந்த யாருக்கும் அப்போது தெரியாது. சக்திவேல் தாக்கப்பட்டதாலும், அவர் மது போதையில் இருந்ததாலும் அவரால் அப்போது பேச முடியவில்லை. அதனால் அவரது மொபைலை எடுத்து அதில் கடைசியாக பேசிய எண்ணுக்கு போன் செய்திருக்கிறார்கள். அப்போதுதான் நேமூரில் இருந்து அவரது தங்கை வருகிறார். அப்போதுதான் சக்திவேல் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. தொடர்ந்து அங்கு சென்ற போலீஸ், புகாரை அப்புறம் வாங்கிக் கொள்கிறோம். முதலில் சக்திவேலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அவரது தந்தையிடம் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் அவரது தந்தை சக்திவேலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போது சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக சக்திவேல் சொன்னதால் அவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் அங்கு செல்வதற்குள் சக்திவேல் உயிரிழந்துவிட்டார். அதையடுத்து அவரது உறவினர்கள் சக்திவேல் அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினார்கள். ஆனால் அவரது கழுத்தில் அதற்கான அடையாளங்கள் இல்லாத நிலையில், நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

சக்திவேல்
சக்திவேல்

கௌரி அவரது கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது 302 பிரிவில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். அத்துடன் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதற்கான முதல்கட்ட நிவாரணத் தொகையான 4.5 லட்சம் ரூபாய் நேற்றே கொடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல சக்திவேலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவரது தந்தையுடன் அனுப்பியதற்காக பெரிய தச்சூர் காவல் நிலைய எஸ்.ஐயை ஆயுதப் படைக்கு மாற்றிவிட்டேன். விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றத்தின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு