Published:Updated:

`பெட்ரோல்; ஸ்குரு ட்ரைவர் சித்ரவதை!’- ராஜஸ்தானில் பட்டியலின இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்

ராஜஸ்தான் இளைஞர்கள்
ராஜஸ்தான் இளைஞர்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் திருட முயன்றதாக இரண்டு பட்டியலின இளைஞர்கள் மீது ஒரு கும்பல் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் இரண்டு பட்டியலின இளைஞர்களை ஷோரூம் ஊழியர்கள் கட்டிவைத்து சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக மனிதர்கள் என்றுகூட பாராமல் அந்த ஷோரூம் முதலாளியும் ஊழியர்களும் தங்களது மூர்க்கத்தனத்தை இந்த இரண்டு இளைஞர்களின் மீது காட்டியுள்ளனர்.

இளைஞர்கள்
இளைஞர்கள்

கர்ணு எனும் கிராமத்தில்தான் அந்த ஷோரூம் அமைந்துள்ளது. பிஸா ராம், பன்னா லால் என்ற இரண்டு பட்டியலின இளைஞர்கள் மீதுதான் இந்தக் கொடூர தாக்குதல் நடந்துள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தைப் பழுதுபார்க்க ஷோரூம் சென்றதாகக் கூறப்படுகிறது. கேஷ் கவுன்டரிலிருந்து பணத்தை திருட முயன்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதன்காரணமாக இளைஞர்கள் இருவரையும் ஊழியர்களும் அந்த ஷோரூம் உரிமையாளரும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாகப் படம் பிடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`சாகவேண்டும் என வருபவர்களை என்ன செய்வது?!’ - சர்ச்சையான உ.பி முதல்வரின் பேச்சு #CAA

அந்த வீடியோவில், ``தரையில் வீழ்ந்துகிடக்கும் இரண்டு இளைஞர்கள் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சுகின்றனர். அப்போது ஒருவர் இளைஞர் ஒருவரின் முகத்தில் எட்டி உதைக்கிறார். இரண்டு இளைஞர்களைக் கட்டிவைத்துக் கடுமையாகத் தாக்கும் ஊழியர்கள் அதன்பின்னர் இருவரையும் நிர்வாணப்படுத்துகின்றனர். பெட்ரோல் மற்றும் ஸ்குரூ ட்ரைவருடன் சிலர் அந்த இளைஞர்களிடம் ஏதோ கூறுகின்றனர். தரையில் வீழ்ந்து கிடக்கும் இளைஞர்கள் இருவரும் தங்களை விட்டுவிடுமாறு தொடர்ந்து மன்றாடுகின்றனர். அவர்களின் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்காத அந்தக் கும்பல் இருவரையும் நிர்வாணப்படுத்துகிறது.

Representation Image
Representation Image

அந்தரங்க உறுப்பில் ஸ்குரு டிரைவர் கொண்டு சித்ரவதை செய்கின்றனர். மேலும் அந்த ஷோரூமில் இருந்த பெட்ரோல் எடுத்து வந்து அந்தரங்க உறுப்புகளில் ஊற்றி சித்ரவதை செய்துள்ளனர். இருவரும் வலிதாங்காமல் கதறுகின்றனர்” அத்துடன் இந்த வீடியோ முடிகிறது. இந்தச் சம்பவம் பிப்ரவரி 16-ம் தேதி நடந்துள்ளது.

`சிசிடிவி காட்சிகள் பொய் சொல்லாது’ - ஜாமியா நூலகத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தும் போலீஸ் #Video

இந்தச் சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஷோரூம் உரிமையாளர் ஹனுமான் சிங், ஊழியர்களான ரகுவீர் சிங், ரெஹ்மத்துல்லா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, `ராஜஸ்தானில் இரண்டு தலித் இளைஞர்களை சித்ரவதை செய்யும் வீடியோ கொடுமையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறேன்”எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுலின் இந்தப் பதிவுக்கு பா.ஜ.க-வின் அமித் மால்வியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், ``மாநில அரசா? முதலமைச்சர்தான் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக உள்ளார் அவரது பெயர் அசோக் கேலாட். மாநிலத்தில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு யார் பொறுப்பு என உங்களுக்குத் தெரியாதா? ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் பெண்களுக்கு எதிராகவும் தலித்களுக்கு எதிராகவும் வன்முறைச் சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது” எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு