Published:Updated:

செயின் பறித்த பள்ளிச் சிறுவன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆன்லைன் சூதாட்டத்தின் அடுத்த விபரீதம்
ஆன்லைன் சூதாட்டத்தின் அடுத்த விபரீதம் ( Representational Image )

ஆன்லைன் சூதாட்டத்தின் அடுத்த விபரீதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

உண்ணாமல் உறங்காமல் நாள் முழுவதும் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கிக்கிடப்பது, பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் உரையாட மறுப்பது என்று இன்றைய சிறுவர்கள் பலரின் செயல்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆன்லைன் விளையாட்டு களுக்காகத் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது ஒருபுறமிருக்க... சட்டவிரோத விபரீதங்களைச் செய்வதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. அப்படி, சென்னையில் நடந்த ஓர் அதிர்ச்சிச் சம்பவம்...

சென்னை கொடுங்கையூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இரவில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றார். வாசுகி நகர், 7-வது தெருவில் அவர் சென்றபோது பின்னால் வந்த சிறுவன், பெண்ணின் கழுத்தில் கிடந்த மூன்று சவரன் தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான். அதிர்ச்சியில் செய்வதறியாது நின்ற அந்தப் பெண், கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தார்கள். அதில், மாஸ்க் அணிந்திருந்த சிறுவன் ஒருவன் செயின் பறித்துக்கொண்டு தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. விசாரணையில், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதும், அதை வாங்க சிறுவர்கள், இளைஞர்கள் இரவில் வருவதும் தெரியவந்தது. அதனால் கஞ்சா போதையிலிருந்தவர்களில் யாராவது செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்தனர்.

செயின் பறித்த பள்ளிச் சிறுவன்!

இந்தச் சமயத்தில் இரவு 9 மணியளவில் சிறுவன் ஒருவன் தனியாக அவ்வழியாக நடந்து வந்தான். அவனது நடை பாவனையும், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த சிறுவனின் நடை பாவனையும் ஒரே மாதிரியாக இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். எனவே, அந்தச் சிறுவனை போலீஸார் பின்தொடர்ந்தனர். சில தெருக்கள் கடந்து அந்தச் சிறுவன், தனது வீட்டுக்குச் சென்றான். சில நிமிடங்கள் கழித்து போலீஸாரும் அந்த வீட்டின் கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்த சிறுவனின் அம்மாவிடம், ‘‘ஒரு சின்ன விஷயம்மா... பயப்படாதீங்க’’ என்று சொல்லிவிட்டு, போலீஸ் வாகனத்துக்குச் சிறுவனை அழைத்துச் சென்றார்கள். அங்கு வைத்து சிசிடிவி பதிவுகளை சிறுவனிடம் காண்பித்தபோது நடுங்கிய அவன், ‘‘இது நான்தான் அங்கிள்’’ என்று அழுதபடி சொல்லியிருக்கிறான்.

வீட்டுக்குள் சென்று சிறுவனின் அம்மாவிடம் விஷயத்தை போலீஸார் தெரிவித்தார்கள். அதிர்ச்சியில் சிறுவனின் அம்மா மயங்கி விழவே, முதலுதவி அளித்துவிட்டு, அடுத்த நாள் காலை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். மறுநாள் காலையில் மகனை அழைத்துக்கொண்டு அவனின் அம்மா கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது விசாரித்த விவரங்களை நம்மிடம் விவரித்தார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

‘‘அந்த மாணவன், வீட்டின் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவருகிறான். அவனின் அம்மா வங்கி ஒன்றில் கிளர்க்காகப் பணிபுரிகிறார். அப்பா டி.வி மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். ஒரே மகன் என்பதால், வீட்டில் செல்லம் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். ஆன்லைன் வகுப்புக்காக மாணவனுக்கு ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த செல்போன் மூலம் பாடங்களைப் படித்துக்கொண்டிருந்த மாணவன், ஒருகட்டத்தில் ஆன்லைன் சூதாட்டச் செயலியை டௌன்லோடு செய்து விளையாடத் தொடங்கியிருக்கிறான். ஆரம்பத்தில் 1,500 ரூபாயை வீட்டில் திருடி விளையாடியிருக்கிறான்.

இந்த விளையாட்டில் பூஜ்ஜியத்திலிருந்து ஒன்பது வரை நம்பர்கள், ஒவ்வொரு கலரிலும் இருக்கும். அந்த நம்பர்களில் ஒன்றில் பணத்தைச் செலுத்தினால் அது இரட்டிப்பாகும் என்ற ஆசைவலையை நம்பி விளையாடியிருக்கிறான். சில நிமிடங்களிலேயே பணம் முழுவதையும் இழந்திருக்கிறான்.

ஒருகட்டத்தில் இந்த விளையாட்டுக்கு அடிமையான மாணவன், பணத்துக்காக வீட்டின் பீரோவிலிருந்து அம்மாவின் தங்க வளையலைத் திருடி அருகிலுள்ள அடகுக்கடையில் 18,000 ரூபாய்க்கு வைத்திருக்கிறான். அந்தப் பணத்தையும் விளையாட்டில் தோற்றிருக்கிறான். பிறகு இன்னொரு வளையல், தங்க செயின் ஆகியவற்றை அடகு வைத்து 60,000 ரூபாய் வரை சூதாட்டத்தில் இழந்திருக்கிறான்.

செயின் பறித்த பள்ளிச் சிறுவன்!

மாணவனின் அம்மா நகைகளைத் தேடத் தொடங்கியதும், செயின் பறிக்கும் விபரீத யோசனை வந்திருக்கிறது. முதல் தடவையாக மாணவன் செயின் பறிப்பில் ஈடுபட்டதால், பயத்துடனேயே செயினைப் பறித்து, அதை 250 ரூபாய் கொடுத்து நகைப்பட்டறையில் ஒட்ட வைத்திருக்கிறான். பின்னர், அந்த செயினை அடகுவைத்து அம்மாவின் நகைகளை மீட்டு வீட்டில் வைத்திருக்கிறான். செயின் பறிப்பு குற்றத்தில் ஈடுபட்டு, சிக்கிய பிறகே மாணவனின் சுயரூபம் வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரியவந்திருக்கிறது’’ என்றார்.

இந்த விவரங்களையெல்லாம் அம்மாவிடம் விவரித்திருக்கிறார்கள் போலீஸார். பிறகு, மாணவனின் எதிர்காலம் கருதி, இந்த விஷயத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலின் கவனத்துக்கு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா கொண்டு சென்றார். அவரது உத்தரவின் பேரில் மாணவனை எச்சரித்து அனுப்பிய போலீஸார், அடகு வைக்கப்பட்டிருந்த செயினை மீட்டு புகார் அளித்த பெண்ணிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிக் கொடுக்கும் செல்போனில் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர் கவனிக்காமல்விட்டால் அது ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமோர் உதாரணம். பெற்றோர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு