குடித்துவிட்டு கொடுமைப்படுத்திய தந்தை - மது வாங்கிக் கொடுத்து எரித்துக் கொன்ற மகள்

குடிபோதையில் தந்தையின் சித்ரவதை தாங்க முடியாமல், மது வாங்கிக் கொடுத்து எரித்துக் கொன்ற மகளை மேற்குவங்க போலீசார் கைதுசெய்துள்ளனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் இளம்பெண் பியாலி. சிறு வயதில் தாய் இறந்துவிட, தந்தை பிஷ்வநாத் மட்டுமே பியாலிக்கு ஒரே ஆதரவு. பிஷ்வநாத் தினமும் குடிப்பது வழக்கம். தினமும் இரவில் குடித்துவிட்டு பியாலியைச் சித்ரவதை செய்துவந்தார். அவரின் இந்தச் சித்ரவதையிலிருந்து என்றைக்கு விடிவு காலம் பிறக்கும் என்று காத்திருந்தார் பியாலி. அந்த விடிவு காலம் பியாலியின் திருமணத்தின் மூலம் வந்தது. ஆனால், பியாலியின் திருமணமும் வெற்றிகரமாக அமையவில்லை.

கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு பியாலி மீண்டும் தனது தந்தையின் வீட்டுக்கே வந்துவிட்டார். வந்த பிறகு மீண்டும் பழைய சித்ரவதையை பியாலி அனுபவிக்க ஆரம்பித்தார். விரக்தி மனநிலைக்குச் சென்ற பியாலி, இதற்கு நிரந்தரத் தீர்வுகாண முடிவு செய்து ஒரு திட்டம் தீட்டினார்.
அதன்படி தனது தந்தையை இரவு உணவுக்காக வெளியில் அழைத்துச் சென்று மதுவும், நல்ல உணவும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பின்னர், அங்கிருந்து ஹூக்லி ஆற்றங்கரையிலிருந்த பென்ச் ஒன்றில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரம் பியாலியின் தந்தை இருக்கையில் அமர்ந்தபடியே உறங்கிவிட்டார். இரவு அதிக நேரமாகிவிட்டதால் அருகில் யாரும் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட பியாலி, தனது தந்தையின் மீது மண்ணெணய் ஊற்றி தீவைத்துவிட்டார். பிஷ்வநாத் உடல் கருகி பலியானார். கொலை செய்துவிட்டு பியாலியும் வீடு திரும்பினார்.
இந்தக் கொலையில் சந்தேகம் அடைந்த பியாலியின் சித்தப்பா கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, பியாலி மண்ணெணய் ஊற்றி தனது தந்தையைக் கொலை செய்வது தெளிவாகப் பதிவாகியிருந்தது.
இதையடுத்து பியாலியைக் கைதுசெய்து விசாரித்தபோது தனது தந்தையால் தனக்கு ஏற்பட்ட சித்ரவதை குறித்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். பியாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 29-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.