Published:Updated:

`என்கூட வந்துருமான்னு’ அழுதார்! - மகளின் காதல் திருமணத்தால் விபரீத முடிவெடுத்த தந்தை

மகள் காதல் திருமணம் செய்ததை அவமானமாக நினைத்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த ஜோடி
காதல் திருமணம் செய்த ஜோடி

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை கோட்டை நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (47), விவசாயி. இவரின் மகள் திவிதாவும் (19), மேல்பாடி காலனி பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் மகன் ஷியாம் (20) என்பவரும் காதலித்துவந்தனர். ஷியாம் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திவிதாவின் பெற்றோர் இவர்களது காதலை கடுமையாக எதிர்த்தனர்.

இளம்பெண் கொடுத்த புகார் மனு
இளம்பெண் கொடுத்த புகார் மனு

கடந்த 2-ம் தேதி பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறிய திவிதா காதலனுடன் பெங்களூரு சென்றார். அங்கு திருமணம் செய்துகொண்டு வேலூர் திரும்பினர். மகள் காணாமல்போனது குறித்து மேல்பாடி காவல் நிலையத்தில் ரவி புகார் அளித்திருந்த நிலையில், காதல் கணவனுடன் திவிதா நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.

கலெக்டர் சண்முக சுந்தரத்தைச் சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் திவிதாவின் பெற்றோரை மேல்பாடி போலீஸார் விசாரணைக்காக நேற்று அழைத்துவந்தனர். மணக்கோலத்தில் திவிதாவும் ஜோடியாக வந்தார். மகளைப் பார்த்ததும், ரவி கண்கலங்கி அழுதுள்ளார்.

கலெக்டர் சண்முக சுந்தரம்
கலெக்டர் சண்முக சுந்தரம்

மன உளைச்சலுடன் வீடு திரும்பிய ரவி இரவு 8 மணியளவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனைக்காக உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வள்ளிமலை பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் அளவுக்குப் பதற்றமான நிலை காணப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Suicide
Suicide

இதுபற்றி, காட்பாடி டி.எஸ்.பி துரைபாண்டியனிடம் பேசினோம். ``காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசினோம். அப்போது, `என்கூட வந்துருமான்னு...’ கூறி திவிதாவின் காலில் விழுந்து தந்தை ரவி கதறி அழுதார். அந்த பெண் நகர்ந்தபோது, கால் ரவியின் முகத்தில் பட்டது. `அப்பாவையே எட்டி உதைக்கிறீயா...’ என்றுகூறி வருத்தப்பட்டுக்கொண்டு காவல்நிலையத்திலிருந்து சென்ற அவர் அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டார். மோதல் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்’’ என்றார்.