Published:Updated:

`பணம் வாங்கத்தான் சென்றார்; கொன்றுவிட்டனர்!' -திருமணம் நின்றதால் கலங்கும் சமூக சேவகர் குடும்பம்

சமூக சேவகர் கார்த்திகேயன்
சமூக சேவகர் கார்த்திகேயன்

``என் கணவர் கொலைக்கான காரணத்தை கேள்விப்பட்ட மாப்பிள்ளை வீட்டினர் நடக்கவிருந்த மகளின் திருமணத்தை நிறுத்துவதாகக் கூறிவிட்டனர்" என்று கண்ணீர்மல்க சமூகசேவகரின் மனைவி நம்மிடம் தெரிவித்தார்.

சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன், ஆந்திர மாநிலம் மல்லனூர், ஆதவிபுதாகூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். இவரின் கொலைக்குத் தவறான நட்பே காரணம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை கார்த்திகேயனின் மனைவி தேவி மறுத்துள்ளார்.

தேவியிடம் பேசினோம். ``நான், தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தேன். நானும் கார்த்திகேயனும் காதலித்து கடந்த 98-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தேவி, கார்த்திகேயன்
தேவி, கார்த்திகேயன்

எனக்கு உடல்நலம் சரியில்லாததால் வேலையை விட்டுவிட்டேன். தற்போது பம்மலில் உள்ள அம்மா வீட்டில் தங்கி சிசிக்சை பெற்றுவருகிறேன். குழந்தைகளுடன் என் கணவர், அனகாபுத்தூரில் குடியிருந்துவந்தார். எலெக்ட்ரிக் வேலை செய்துவந்தவர், சமூக சேவையிலும் ஈடுபட்டுவந்தார். அனகாபுத்தூரில் கார்த்திகேயனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உதவி என்று யார் கேட்டாலும் அந்த வேலையை உடனடியாக செய்து கொடுப்பார். முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை ஆகியவற்றுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதில் தொடங்கி அதை வாங்கிக் கொடுக்கும்வரை கூடவே இருப்பார்.

இந்தச் சமயத்தில்தான் அனகாபுத்தூர் வீட்டின் அருகில் அருண், அவரின் மனைவி நந்தினி ஆகியோர் குடியிருந்தனர். அருணின் சகோதரர் சிவக்குமாரும் அவரின் மனைவி மாதேஸ்வரியும் ஆந்திராவிலிருந்து சென்னை வந்தனர். அருணை நம்பி சிவக்குமாருக்கு முதலில் 20,000 ரூபாயைக் கடனாகக் கொடுத்தார் என் கணவர். ஆனால், அந்தப் பணத்தை சிவக்குமார் திரும்பத் தரவில்லை. இருப்பினும் சில மாதங்களுக்கு முன் 5,000 ரூபாயைக் கடனாக சிவக்குமார் கேட்டார். சிவக்குமாரின் குடும்ப நிலைமையைக் கருதி அந்தப் பணத்தையும் கார்த்திகேயன் கொடுத்தார்.

சிவக்குமார்
சிவக்குமார்

சிவக்குமார் மூலம் ஆந்திராவைச் சேர்ந்த சிலருக்கு கார்த்திகேயன் கடனாகப் பணம் கொடுத்திருந்தார். ஆனால், அவர்கள் யாரும் பணத்தை திருப்பித்தரவில்லை. நான்கூட போனில் சிவக்குமார் மற்றும் அவரின் உறவினர்களிடம் கடனை திரும்பக் கேட்டேன். ஆனால், அவர்கள் எங்களை ஏமாற்றிவந்தனர். இந்தச் சமயத்தில்தான் 18.12.2019-ல் கார்த்திகேயனுக்கு மாதேஸ்வரி போன் செய்து பணத்தை திரும்பத் தருவதாகக் கூறியுள்ளார். அதை நம்பி கார்த்திகேயன், ஆந்திரா சென்றுள்ளார். அங்கு சென்ற அவரை சிவக்குமாரும் மாதேஸ்வரியும் சேர்ந்து கொலை செய்து தோட்டத்தில் புதைத்துள்ளனர்.

என் கணவர், மாதேஸ்வரிக்கு தொல்லைக் கொடுத்ததாக சிவக்குமார் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மாதேஸ்வரிக்கு கார்த்திகேயன் தொல்லை கொடுத்திருந்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு வீட்டுக்கு வரவழைத்து அநியாயமாக கொலை செய்து சடலத்தைப் புதைத்துள்ளனர். காவல் நிலையத்தில் என் மாமியார் அமராவதி, கொடுத்த புகாருக்குப்பிறகுதான் கார்த்திகேயன் கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்தது.

தேவி
தேவி

என் கணவரின் கொலைக்கு சிவக்குமார் கூறிய காரணத்தால் என் மூத்த மகளின் திருமணம் நின்றுவிட்டது. மாப்பிள்ளை வீட்டினர் எனக்கு போன் செய்து திருமணத்தை நிறுத்துவதாகக் கூறிவிட்டனர். ஏற்கெனவே என் கணவரை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் என் மகளின் திருமணமும் நின்றுபோனதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துவருகிறோம்" என்றார் கண்ணீருடன்.

கார்த்திகேயனின் மகள் நம்மிடம், ``ஆதாரம் இல்லாமல் வெளியான தகவலால் என் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. என் திருமணத்துக்குப் பணம் தேவை என்பதால்தான் கொடுத்த பணத்தை வாங்குவதற்காக ஆந்திராவுக்கு அப்பா சென்றார். ஆனால், அங்கு என் அப்பாவைக் கொலை செய்துவிட்டனர். அப்பாவைக் கொலை செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும்" என்றார் கண்ணீர்மல்க.

அடுத்த கட்டுரைக்கு