Published:Updated:

மும்பை: போதைப்பொருள் கடத்தல் வழக்கு! - தாவூத் இப்ராகிம் சகோதரர் இக்பால் மீண்டும் கைது

இக்பால் கேஸ்கர்
இக்பால் கேஸ்கர்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தாவூத் இப்ராகிம் சகோதரர் இக்பால் கேஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார். அவரின் இளைய சகோதரர் இக்பால் கேஸ்கர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பில்டர்கள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டியது தொடர்பாக இக்பால் கைது செய்யப்பட்டு தானேயில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதிதாக போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கிலும் இக்பால் கேஸ்கரை போதைப்பொருள் தடுப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இருந்து கொண்டு வரப்பட்டு, மும்பையில் சப்ளை செய்ய வைக்கப்பட்டு இருந்த 25 கிலோ சரஸ் போதைப்பொருள் சமீபத்தில் மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக போதைப்பொருள் வியாபாரி ஹரிஸ் கான் கைது செய்யப்பட்டார்.

இக்பால் கேஸ்கர்
இக்பால் கேஸ்கர்

அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த போதைப்பொருள் வியாபாரத்தில் இக்பால் கேஸ்கருக்கு தொடர்பு இருப்பதுதெரிய வந்தது. இதில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி பர்வேஸ்கானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணயில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தேரி, பாந்த்ரா, லோகண்ட்வாலா போன்ற பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தி ஹரிஸ் கானை கைது செய்தனர். தற்போது ஹரீஸ் கான் மற்றும் இக்பாலை நேரில் வைத்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகவும், எங்கெல்லாம் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்தும் விசாரிக்கப்பட இருக்கிறது. இக்பாலும் பாகிஸ்தானில் தனது சகோதரன் தாவூத் இப்ராகிமுடன் தான் தங்கி இருந்தார். அவன் மீது பெரிய அளவில் எந்த விதமான குற்றச்சாட்டும் இல்லாமல் இருந்தது. இதனால் இக்பால் மும்பையில் சுதந்திரமாக இருந்தார். ஆனால் பில்டர்களை மிரட்டியதாக 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு