Published:Updated:

நிழலுலக ராஜாக்கள்: தாவூத், சபீர் சித்ரா, காமாத்திபுரா - ஒரு விறு விறு அத்தியாயம்! | பகுதி- 9

நிழலுலக ராஜாக்கள்
News
நிழலுலக ராஜாக்கள்

என்ன செய்வது என்று சபீர் யோசித்துக்கொண்டிருந்தபோது கல்யாண கோஷ்டியின் கார் சபீரின் கார் முன்பு வந்து நின்றது.

குப்பைத் தொட்டியின் உதவிகொண்டு தாவூத் நடத்திய கடத்தல் விவகாரம், சுங்க அதிகாரிகளுக்கு தெரியவந்தது. துப்புரவுத் தொழிலாளியை கையும் களவுமாகப் பிடித்தனர். ஆனாலும் கடத்தலை நிறுத்தவில்லை தாவூத். தங்கம் கடத்தும் வழியை மாற்றினர். ஆசனவாயில் தங்கத்தை வைத்து கடத்த ஆரம்பித்தனர்.

கப்பல் மற்றும் விமானம் வழியே தங்கம் வந்து இறங்கிக்கொண்டே இருந்தது. தாவூத்தின் கை ஓங்க ஆரம்பித்தது. மிரட்டிப் பணம் பறித்தல், வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த தாவூத்துடன் கடத்தல் தொழிலில் அனுபவம்மிக்க காலித் பஹல்வான் கூட்டுச் சேர்ந்தார். காலித்தின் வழிகாட்டுதலில் தாவூத் வெற்றிகரமாகச் செயல்பட ஆரம்பித்தார்.

தங்கம்
தங்கம்

தாவூத்தின் அபரிமிதமான வளர்ச்சி பத்தான்களுக்குப் பிடிக்கவில்லை. ’தாவூத்துடன் மோத மாட்டோம்’ என்று மஸ்தானின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்திருந்தபோதும், தாவூத்தின் வளர்ச்சியை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தாவூத் தங்களையும் தொழில் பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்வார் என பத்தான்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தாவூத் பத்தான்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து தனது வேலைகளை செய்தார். எனவே தாவூத்தை எதிர்ப்பதென பத்தான்கள் முடிவு செய்து அதற்கான காரியத்தில் ஈடுபட்டனர்.

தாவூத் மற்றும் அரது சகோதரர் சபீர் ஆகிய இரண்டு பேரையும் தீர்த்துக்கட்ட தக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர். மற்றொருபுறம் தாவூத் பணத்துக்காக என்று துபாய்க்கும் மும்பைக்கும் அலைந்துகொண்டிருந்தார். அண்ணன் சபீரோ அடிக்கடி மும்பையின் விபசார விடுதிக்கு சென்று நேரம் செலவழித்தார். இரவு ஆகிவிட்டால் தனக்குப் பிடித்த பெண்ணை விபச்சார விடுதியிலிருந்து அழைத்துக்கொண்டு நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்று பொழுதைக் கழித்தார். `அப்பு; படத்தில் பிரகாஷ்ராஜ் விபசார விடுதிப் பெண்களை இரவு மட்டும் வாடகைக்கு விடுவது போன்ற நடைமுறை, மும்பை விபசார விடுதிகளில் இருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கறுப்புப் பணம்...
கறுப்புப் பணம்...
மாதிரி படம்

சபீர் பணத்தை வாரி இறைத்தார். சபீரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார். அடிக்கடி இரவு நேரத்தில் வெளியில் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் சபீர். பத்தான் கூட்டத்துக்கு சபீரின் இந்த நடவடிக்கை தெரியவந்தது.

காமாத்திப்புராவிலுள்ள சித்ரா என்ற பெண்ணைத்தான் சபீர் எப்போதும் வெளியில் அழைத்துச் செல்வது வழக்கம். சித்ராவும் அதே விபசார விடுதியில் இருக்கும் நந்தா என்ற பெண்ணும் நல்ல தோழிகள். இதே விபசார விடுதிக்கு பத்தான் கூட்டத்தைச் சேர்ந்த அமீர்ஷதா அடிக்கடி வர ஆரம்பித்தார். மற்றொருபுறம் நந்தா நல்ல ஓர் ஆண் துணைக்காக துடித்துக்கொண்டிருந்தார். குறிப்பாக தன்மீது அன்பு செலுத்தக்கூடிய ஆண் துணையை தேடிக்கொண்டிருந்தார். இதைத் தெரிந்துகொண்ட அமிர்ஷதா நந்தாவிடம் நட்பை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். நந்தாவின் தோழி சித்ராவுக்கு சபீருடன் நல்ல தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொண்டு அதன் மூலம் அமிர்ஷதா காய்நகர்த்த ஆரம்பித்தார். நந்தா மூலம் சித்ராவிடம் சபீரின் நடமாட்டத்தைத் தொடர்ந்து தெரிந்துகொண்டு பத்தான்கள் கண்காணித்துவந்தனர்.

1981-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ம் தேதி. நள்ளிரவு.

சபீர், சித்ராவை அழைத்துக்கொண்டு ஹாஜி அலி ரோட்டில் காரில் சென்றுகொண்டிருந்தார். கல்யாண கோஷ்டியின் கார் ஒன்று அவர்களின் காரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. சபீர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரில் எரிபொருள் குறைவாக இருப்பதாக மீட்டர் காட்டியது. என்ன செய்வது என்று சபீர் யோசித்துக்கொண்டிருந்தபோது, கல்யாண கோஷ்டியின் கார் சபீரின் கார் முன்பு வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சிலர் சபீரின் காரைச் சுற்றி வளைத்தனர். படபடவென துப்பாக்கி வெடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அமிர்ஷதா சபீரைக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார். அவர்கள் நேராக தாவூத் இருக்கும் கட்டடத்துக்குச் சென்றனர். அங்கும் சரமாரியாகச் சுட்டனர். அதே கட்டடத்தில் வசித்துவந்த காலித் பஹல்வான் சுதாரித்துக்கொண்டு, துப்பாக்கியை எடுத்து சரமாரி சுட்டார். அதை எதிர்பார்க்காத அமிர்ஷதா சம்பவ இடத்திலிருந்து தப்பினார்.

சபீர்
சபீர்

தாவூத்துக்கு விஷயம் தெரியவந்தது. தாவூத்தின் மனநிலை பத்தான்களுக்கு உவப்பாக இருக்கவில்லை. எப்படியாவது அமிர்ஷதாவை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற வெறியில் தாவூத் இருந்தார். ஆனால் தாவூத்தின் தந்தை மற்றும் சிலர் பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். சிறிது காலத்துக்கு அந்தப் பிரச்னையை ஆறப் போட்டார் தாவூத். தொழிலில் கவனம் செலுத்தினார். ஆனாலும் தனது அண்ணனைக் கொலை செய்தவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். மறுபுறம் போலீஸார் தீவிர தேடுதலுக்கு பிறகு இக்கொலை தொடர்பாக அமிர்ஷதாவை கைதுசெய்தனர். தாவூத்துக்கு பதில் போலீஸிடம் சிக்குவதைப் பாதுகாப்பாக கருதினார் அமிர்ஷதா. ஆனால் அவரது எண்ணம் பலிக்குமா என்பதும் அவருக்குத் தெரியவில்லை.

தாவூத்
தாவூத்

சிறையிலிருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது அமிர்ஷதாவை கொலை செய்ய தாவூத் திட்டம் வகுத்தார். புதிதாக தாவூத் கோஷ்டியில் படா ராஜன் மற்றும் சோட்டாராஜன் ஆகிய இரண்டு பேர் சேர்ந்திருந்தனர். அவர்கள் மட்டுமல்லாமல் சஹீல் லம்பு மற்றும் சோட்டா சகீல் ஆகிய இரண்டு பேரும்கூட சேர்ந்திருந்தனர். படாராஜன் அடிக்கடி தாவூத்தின் இடத்துக்கு வந்து அவரைச் சந்தித்துப் பேசினான். அப்படிப் பேசும்போது தாவூத் தனது மனதிலுள்ள குமுறலை வெளிப்படுத்தினான். அண்ணனைக் கொலை செய்தவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று தாவூத் தெரிவிக்க, அதை தான் பார்த்துக்கொள்வதாக படாராஜன் கூறி கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினான். வாக்கு கொடுத்ததோடு நிற்காமல் அதற்கான வேலையையும் படாராஜன் செய்ய ஆரம்பித்தான்.

சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டுவந்த டேவிட் பர்தேசி என்பவனை படாராஜன் தேர்வு செய்தான். அவனுக்கு வயது வெறும் 24-தான். டேவிட்டுக்குச் சொந்தமாகக் குடும்பம் எதுவும் கிடையாது. கிடைத்ததைச் சாப்பிட்டு வாழ்ந்துவந்தான். அவன்தான் தன் திட்டத்துக்கு சரியான நபர் என்பதை உணர்ந்த படாராஜன், அவனது திட்டத்தை தாவூத்திடம் தெரிவித்தான். உடனே தாவூத் டேவிட்டை தனது சொந்த ஊருக்கு அனுப்பி அங்குள்ள வனப்பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தார். சில நாள்களுக்கு டேவிட், தாவூத் பணத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தான்.

அமிர்ஷதாவை கொலை செய்வதற்கான நாள் குறிக்கப்பட்டது. 1983-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 6-ம் தேதி அமிர்ஷதா கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். கோர்ட்டுக்குள் டேவிட் துப்பாக்கியுடன் காத்திருந்தான். பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் வைத்து சுட வேண்டும் எனக் காத்திருந்தான். எந்தவித பயமும் இல்லாமல் துணிந்து நின்றான். சரியான வாய்ப்பு கிடைத்தபோது டேவிட் சுட்டான். அமிர்ஷதாவின் தலைக்குள் தோட்டா பாய்ந்தது. அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். டேவிட்டும் தப்பி ஓட முயன்றான். ஆனால் முடியவில்லை. அவனை சப் இன்ஸ்பெக்டர் பகவான் சுற்றி வளைத்தார். தப்ப முயன்றபோது துப்பாக்கியால் சுட்டதில் டேவிட் காயம் அடைந்தான். ஆனால், உயிருக்கு ஆபத்து இல்லை.

அமிர்தஷா கொல்லப்பட்ட சேதி பறந்தது. பத்தான் கூட்டத்தினரிடையே தாவூத் மீது கடும் கோபம் ஏற்பட்டது. ஆனால் படாராஜன்தான் கொலைக்கு திட்டமிட்டான் என்று தெரிந்தவுடன் அவனை கோர்ட்டில் வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது.

அமிர்ஷதா கொலையில் படாராஜன் கைதுசெய்யப்பட்டான். அவனைக் கொலை செய்ய பத்தான் கோஷ்டியினர் சரியான தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

(தொடரும்)

பகுதி 8-க்குச் செல்ல...