Published:Updated:

`உணவில் விஷம்; சோட்டா ராஜனுக்கு ஸ்கெட்ச் போடும் தாவூத் டீம்?’ - திகார் சிறையில் டைட் செக்யூரிட்டி!

சோட்டா ராஜன்
சோட்டா ராஜன்

தாவூத் இப்ராஹிடமிருந்து சோட்டா ராஜன் விலகியதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சோட்டா ராஜனைக் கொல்ல சதி நடப்பதாக வெளியான தகவலையடுத்து, அவருக்குச் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிழலுலகத் தாதாவான சோட்டா ராஜன் இந்திய காவல்துறைக்கு 20 ஆண்டுகளாக சிம்மசொப்பனமாக விளங்கியவர். கொலை, போதைப்பொருள் கடத்தல், மிரட்டல்கள் என சட்ட விரோத வேலைகளைச் செய்துவந்தவர்.

திகார் சிறை
திகார் சிறை

நிழலுலகத் தாதா தாவூத் இப்ராஹிம்- சோட்டா ராஜன் இருவரும் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்தனர். தாவூத் உடன் பழக்கம் ஏற்படவே அவருக்காக இந்தியாவில் பல வேலைகளைச் செய்துள்ளார். சோட்டா ராஜன் மீது பல்வேறு வழக்குகள் பதிவானாலும் எந்த வழக்கிலும் அவர் கைதாகவில்லை. 1988-ம் ஆண்டு சோட்டா ராஜன் துபாய் சென்று செட்டிலாகிவிட்டார். அதன்பின்னர் இந்தியாவில் சோட்டா ராஜனுக்காகப் பலர் வேலை செய்யத் தொடங்கினர். தாவூத் இப்ராஹிடமிருந்து சோட்டா ராஜன் விலகியதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. சோட்டா ராஜன் பலமுறை தாவூத் கும்பலிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

போலி பாஸ்போர்ட் வைத்திருந்த விவகாரத்தில் இந்தோனேசியாவில் பிடிபட்டார் சோட்டா ராஜன். விசாரணையில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது. இதன்பிறகு, மத்திய அரசு முயற்சிசெய்து சோட்டா ராஜனை இந்தியா கொண்டுவந்தது. போலி பாஸ்போர்ட் வைத்திருந்த வழக்கில், ஏழு ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியது டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். அதன்படி தற்போது டெல்லி திகார் சிறையில் சோட்டா ராஜன் அடைக்கப்பட்டுள்ளார்.

திஹார் சிறை
திஹார் சிறை

டெல்லி சிறையில் வைத்து சோட்டா ராஜனைக் கொலை செய்ய தாவூத் டீம் முயற்சி செய்வதாக உளவுத்துறைக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அவருக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் எண் 2-ல் சோட்டா ராஜன் அடைக்கப்பட்டுள்ளார். இது தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதியாகும். சோட்டா ராஜனுக்கு உணவு சமைத்துக்கொடுக்கும் நபர்களை மூன்று முறை மாற்றியுள்ளனர். சமைக்கப்படும் உணவுக்காக அனுப்பப்படும் காய்கறி, அரிசி, எண்ணெய் போன்ற பொருள்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சோட்டா ராஜனைக் சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை. மேலும், அவருக்கு 10 அடிக்கு அருகே யாரையும் சிறை நிர்வாகம் அனுமதிப்பதில்லை' என திகார் சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`அவர்கள் என்னை வாழவிடவில்லை!’ - 3 வீடியோக்களை வெளியிட்டு விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்

தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளியான ஷகீல் தொலைபேசி உரையாடல்களை உளவுத்துறை கேட்டுள்ளது. சோட்டா ராஜனுக்கு உணவில் விஷம் வைத்துக் கொல்லும்படி ஷகீல் யாருடனோ பேசியது தெரியவந்துள்ளது.

சோட்டா ராஜன்
சோட்டா ராஜன்

சோட்டா ராஜனை கொலை செய்ய ஏற்கெனவே தாவூத் இப்ராஹிம் டி-கம்பெனி திட்டமிட்டது. இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதன்காரணமாக தான் அவருக்கு திகாரில் தனியாக சமையல் செய்ய இரண்டு ஆட்கள் நியமித்தது சிறை நிர்வாகம். உணவு தயாரானதும் அதை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னரே அவருக்கு வழங்கி வந்தனர். அதுமட்டுமல்லாமல் அந்த உணவை சமைத்த நபரைச் சாப்பிடச் செய்துள்ளனர். அவர் சாப்பிட்ட 10 நிமிடங்களுக்கு பிறகே சோட்டா ராஜனுக்கு அதை சாப்பிட வழங்குவார்கள். தண்ணீர் முதல் டீ வரை எல்லாமே மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு