Published:Updated:

`உதவிய ஐஎஸ்ஐ, தாவூத் சகோதரர்; பண்டிகைக் காலத்தில் பெரும் தாக்குதல்?!’ - முறியடிக்கப்பட்ட திட்டம்

தாவூத்
தாவூத்

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உதவியுடன் இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தாவூத் இப்ராகிமின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்தச் சதியில் தொடர்புடைய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்திய தாவூத் இப்ராகிம், தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. ஆனால் பாகிஸ்தான், தங்களது நாட்டில் தாவூத் இப்ராகிம் இல்லை என்று கூறிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மத்திய உளவுத்துறையிடமிருந்து டெல்லி போலீஸாருக்குக் கிடைத்த தகவலில், பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற அமைப்பு, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பண்டிகைக் காலத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக பாகிஸ்தானிலிருந்து வெடிமருந்துகளும் ஆயுதங்களும் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

`குடும்பத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள்!’ ராணுவ வீரர்களின் அன்பான பேச்சு; சரணடைந்த தீவிரவாதி

அதன் அடிப்படையில் டெல்லி தீவிரவாத தடுப்புப் படை, விசாரணையைத் தீவிரப்படுத்தியது. அதில், டெல்லி ஓக்லா பகுதியைச் சேர்ந்த ஓர் அமைப்புக்கு இதில் முக்கியப் பங்கு இருப்பது தெரியவந்தது. இந்த அமைப்புக்கு நாடு முழுவதும் கிளைகள் இருந்தன. இது குறித்து விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மும்பை, லக்னோ, ரேபரேலி, பிரதாப்கர் போன்ற முக்கிய நகரங்களில் போலீஸ் தனிப்படை நிறுத்தப்பட்டது. உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புப் படையின் ஒத்துழைப்போடு, நாட்டின் முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தப்பட்டு ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஸ்லீப்பர் செல்களைச் சேர்ந்தவர்கள் சப்ளை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக டெல்லி தீவிரவாத தடுப்புப் படைத் தலைவர் பிரமோத் தெரிவித்தார். மும்பையைச் சேர்ந்த ஜான் மொஹமத் என்ற சமீர் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது ராஜஸ்தான் மாநிலம், கோட்லாவில் கைதுசெய்யப்பட்டார். இவர்தான் தாவூத் இப்ராகிம் கூட்டத்தின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முக்கிய ஆளாகச் செயல்பட்டார் எனக் கூறப்படுகிறது.

கைதான ஜான் மொஹமத், ஒசாமா, அமீர்
கைதான ஜான் மொஹமத், ஒசாமா, அமீர்

டெல்லியில் மற்றவர்களைச் சந்தித்து திட்டத்தைச் செயல்படுத்தச் சென்றபோது பிடிபட்டார். டெல்லியில் மொஹமத் ஒசாமாவும், உத்தரப்பிரதேசத்தில் தாவூத் கூட்டாளியும் ஹவாலா ஆப்பரேட்டருமான மூல்சந்த் ஆகியோரும் ஒரே நேரத்தில் பிடிபட்டனர். இவர்கள் தவிர லக்னோவில் மொகமத் அமீர், ஜீசன் காமர் ஆகியோரும் தொடர் ரெய்டில் பிடிபட்டனர். டெல்லியில் மொஹமத் அபுபக்கர் (23) என்பவர் பிடிபட்டார். கைதுசெய்யப்பட்ட அனைவரிடமும் வெடி மருந்து, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் மொஹமத் ஒசாமா, ஜீசன் ஆகியோருக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ-யும் ராணுவமும் பயிற்சி கொடுத்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபட அனுப்பிவைத்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக டெல்லி போலீஸ் கமிஷனர் அஸ்தானா தெரிவித்திருக்கிறார். நாட்டின் விழாக்காலங்களில், முக்கிய நகரங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் தயாராகிவந்த நிலையில் போலீஸார் விரைந்து செயல்பட்டு அவர்களின் முயற்சியை முறியடித்துள்ளனர்.

அனீஸ் இப்ராகிம்
அனீஸ் இப்ராகிம்

போலீஸார் நடத்திய விசாரணையில் தாவூத் இப்ராகிம் சகோதரர் அனீஸ் இப்ராகிம் இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதி, ஆள் தேர்வு போன்ற அனைத்து வகையான உதவிகளையும் செய்து கொடுத்திருப்பது தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அனீஸ் இப்ராகிம் கூட்டாளி சமீர் என்பவரைத்தான் ஐஎஸ்ஐ இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்வு செய்திருந்தது என்று டெல்லி தீவிரவாத தடுப்புப் படைத் தலைவர் பிரமோத் தெரிவித்தார்.

`சிறையிலுள்ள குற்றவாளிகள், தீவிரவாதிகள் 700 பேரை திமுக விடுதலை செய்வது ஆபத்தானது' - சி.டி.ரவி!

பாகிஸ்தானுக்குச் சென்று பயிற்சி எடுத்து வந்த ஒசாமா, ஜீசன் ஆகியோரிடம் எங்கு தாக்குதல் நடத்த வேண்டும் என்ற இடங்களைத் தேர்வு செய்யும் பொறுப்பையும் அனீஸ் இப்ராகிம் கொடுத்திருந்தார். ஜான் மொஹமத் ஷேக் என்பவர்தான் ஆயுதங்களை பாகிஸ்தானிலிருந்து பெற்று ஸ்லீப்பர் செல்கள் மூலம் மும்பை உட்பட நாடு முழுவதும் சப்ளை செய்ததாகவும் பிரமோத் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் காவல்துறையினர்.

அடுத்த கட்டுரைக்கு