Published:Updated:

தெலங்கானாவில் ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்! - தொழிலாளிக்குத் தூக்கு தண்டனை

தெலங்கானா கொலை
தெலங்கானா கொலை

வாராங்கல் பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவந்த ரபிகா, சஞ்சய் குமார் யாதவுக்கு சமையல் செய்து கொடுத்து, அதற்கான பணத்தைப் பெற்றுவந்திருக்கிறார்.

ஒரு கொலையை மறைக்க, 9 பேர் கொலைசெய்யப்பட்ட பரபரப்பான கொலை வழக்கின் விசாரணையை, வாராங்கல் நீதிமன்றம் 36 நாள்களுக்குள் முடித்திருக்கிறது.

தெலங்கானா மாநிலம், வாராங்கல் கோரிகுண்டாவில் கோணிப்பை தொழிற்சாலை ஒன்று இயங்கிவருகிறது. இந்த தொழிற்சாலையில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான மசூத் என்பவரும், அவரது மனைவி நிஷாவும் 20 வருடங்களாகப் பணியாற்றிவந்திருக்கிறார்கள்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர், மசூத் குடும்பத்தினருக்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சஞ்சய் குமார் என்ற 24 வயது இளைஞர் அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில், நிஷாவின் உறவினர் மகள் ரபிகா என்பவர் பிழைப்பு தேடி வாராங்கல்லுக்கு வந்து கூலி வேலை செய்யத் தொடங்கினார். ரபிகாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி, 16 வயதில் ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

கொலை
கொலை

வாராங்கல் பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவந்த ரபிகா, சஞ்சய் குமார் யாதவுக்குச் சமையல் செய்து கொடுத்து, அதற்கான பணத்தைப் பெற்றுவந்திருக்கிறார். இதில் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, மூன்று பிள்ளைகளுடன் ரபிகா, சஞ்சய் குமாரைத் திருமணம் செய்துகொள்ளாமல், அவருடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தத் தொடங்கினார். இந்நிலையில், ரபிகாவின் மகளுடன் சஞ்சய் குமாருக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. இதை கவனித்த ரபிகா, தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, தற்போது தனது மகளுடன் நெருங்கிப் பழகுவது முறையானது அல்ல என்று சஞ்சய் குமாரை எச்சரித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் குமார், தன் காதலுக்கு இடையூறாக இருந்த ரபிகாவைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். ரபிகாவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, கடந்த மார்ச் 7-ம் தேதி மேற்குவங்கத்துக்கு ரயிலில் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, மோரில் தூக்க மாத்திரை கலந்து ரபிகாவுக்குக் கொடுத்திருக்கிறார். அவர் தூங்கிய பிறகு, அதிகாலை 3 மணியளவில் ராஜமகேந்திரவரம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரபிகாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். பின்னர், ரயிலிலிருந்து அவரைக் கீழே தள்ளிவிட்டுவிட்டு, அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி, மீண்டும் வாராங்கல்லுக்கு வந்துவிட்டார் சஞ்சய் குமார்.

தெலங்கானா: 18 முறை போன்; ரூ.45 லட்சம்; 9 வயது சிறுவன் கொலை!- ஸ்கைப் காலில் சிக்கிய மெக்கானிக்

ரபிகாவை அழைத்துச் சென்ற விஷயம் தெரிந்த நிஷா, சஞ்சய் குமாரிடம், ரபீகா எங்கே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு சஞ்சய் குமார், பீகாரிலுள்ள தனது வீட்டுக்கு ரபிகாவை அனுப்பிவைத்திருப்பதாகச் சமாளிக்க, சஞ்சய் குமாரின் பேச்சில் நம்பிக்கை இல்லாத நிஷா, உண்மையைக் கூறாவிட்டால் போலீஸில் புகாரளித்துவிடுவதாக எச்சரித்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தில், ரபிகாவைத் தான் அழைத்து சென்ற விவரம் தெரிந்த மசூத் - நிஷா குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரையும் மொத்தமாகக் கொலை செய்துவிட்டால், தனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என நினைத்து, அவர்கள் அனைவரையும் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார் சஞ்சய் குமார. மசூதின் மூத்த மகனுக்கு மார்ச் 21-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது, தூக்க மாத்திரைகளுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அங்கு தூக்க மாத்திரைகளைக் குளிர்பானத்தில் கலந்து அனைவருக்கும் கொடுத்திருக்கிறார்.

அந்த0 பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 3 வயது குழந்தை உட்பட மசூத் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும், சஞ்சய் குமாரோடு பணியாற்றும் ஓட்டுநர் ஒருவரும், இரண்டு பீகார் இளைஞர்களும் மயக்க மருந்து கலந்த உணவைச் சாப்பிட்டிருக்கிறார்கள்.
போலீஸார்

இரவு 12:30 மணியளவில், அனைவரும் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தநிலையில், தனியாளாக ஒவ்வொரு நபரையும் கோணிப்பையில் வைத்துக் கட்டி, அருகிலுள்ள கிணற்றில் தள்ளிவிட்டு, கொலை செய்திருக்கிறார் சஞ்சய் குமார்.

ஒன்பது பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு, மே மாதம் 25-ம் தேதி வாராங்கல் போலீஸார் சஞ்சய் குமாரைக் கைதுசெய்தனர். மேலும், ரபிகா கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, தாடேப்பள்ளி ரயில்வே போலீஸார், சஞ்சய் குமார் மீது தனியாகக் கொலை வழக்கும் பதிவு செய்தனர்.

ஒரு கொலையை மறைக்க, ஒன்பது பேர் கொலை செய்யப்பட்ட பரபரப்பான கொலை வழக்கின் விசாரணையை வாராங்கல் நீதிமன்றம் 36 நாள்களுக்குள் விசாரித்து முடித்திருக்கிறது. வாராங்கல், கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி, `இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302, 404, 449, 380 மற்றும் 328 ஆகியவற்றின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றத்தை அரசு தரப்பு நிரூபித்திருக்கிறது’ என்று தீர்ப்பளித்தார். குற்றவாளி சஞ்சய் குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது வாராங்கல் நீதிமன்றம்.

அடுத்த கட்டுரைக்கு