குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அகமதாபாத், போட்டட் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்கப்பட்டது. அந்தக் கள்ளச்சாராயத்தை அந்த்ப் பகுதிகளைச் சேர்ந்த பலரும் வாங்கிக் குடித்துள்ளனர். இதையடுத்து, கள்ளச்சாராயத்தை குடித்த சில மணி நேரங்களில் உடல்நலக் குறைவு மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 28 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 50 பேர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் பலரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணம் குறித்து விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
