Published:Updated:

`ஆறு மாதங்களாகக் கிடந்த சடலம்!'- நடிகர் நாகார்ஜுனாவைச் சுற்றும் பண்ணைவீடு சர்ச்சை

ஆர்கானிக் விவசாயம் செய்ய நினைத்த நாகர்ஜுனா, அதற்காக பண்ணைக்கு சில வேலையாட்களை அனுப்பி, இந்தப் பண்ணை வீட்டை சுத்தம்செய்யக் கூறியுள்ளார்.

Nagarjuna
Nagarjuna

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா, கடந்த ஒரு வருடத்துக்கு முன், தெலங்கானாவில் உள்ள பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில், 40 ஏக்கர் கொண்ட விளைநிலத்துடன்கூடிய பண்ணை வீட்டை வாங்கியுள்ளார். பல ஆண்டுகளாக இது பயன்படுத்தப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சமீபத்தில் இந்த நிலத்தில் ஆர்கானிக் விவசாயம் செய்ய நினைத்த நாகர்ஜுனா, இதற்காகப் பண்ணைக்கு சில வேலையாட்களை அனுப்பி, வீட்டை சுத்தம் செய்யக் கூறியுள்ளார்.

Nagarjuna
Nagarjuna

அதன்படி, நேற்று பண்ணை வீட்டில் சுத்தம் செய்யும்பணியில் ஈடுபட்டிருக்கும்போது, அங்கு ஒருவித துர்நாற்றம் வீசுவதை பண்ணைத் தொழிலாளர்கள் கவனித்துள்ளனர். கூடவே, ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் நுழைந்தபோது, இறந்த உடலின் எலும்புகள் இருந்ததைக் கண்டுள்ளனர். முற்றிலும் சிதைந்த நிலையில் இருந்த சடலம் குறித்து, உடனே அப்பகுதி கிராம வருவாய் அலுவலர் வழியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மோப்ப நாய்களுடன் சோதனை நடத்திய பிறகு, போலீஸார் இதை சந்தேகத்துக்குரிய மரணமாக வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில், சடலம் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், தடயவியல் சோதனையின் ரிப்போர்ட் கிடைத்த பிறகே இதன் முழு விவரமும் தெரியவரும்.

Decomposed body
Decomposed body

``உடலைப் பரிசோதித்த பின்னர், இது ஒரு தற்கொலை என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இறந்தவரை நாங்கள் இதுவரை அடையாளம் காண முடியவில்லை. என்றாலும், இறந்த நபரை அடையாளம் காண தொடர்ந்து முயன்றுவருகிறோம். ஆறு மாதங்களுக்கு முன் காணாமல் போனவர்களின் விவரம் சேகரிப்பட்டுவருகிறது. விசாரணை டீம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்குகுறித்த முழு விவரத்தையும் தெரிவிப்போம்" என அந்தப் பகுதி போலீஸார் தெரிவித்துள்ளனர். 'மன்மதடு'படத்துக்குப் பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் நாகார்ஜுனாவுக்கு, இந்த விவகாரம் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.