Published:Updated:

பிங்க் நிற பேன்ட்; மூக்குத்தி! - பெரும்பாக்கம் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்

பெரும்பாக்கம் எரியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணம்
மரணம்

சென்னை பெரும்பாக்கம் ஏரியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாக பள்ளிக்கரணை போலீஸாருக்கு நேற்று இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அழகு தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நைலான் கயிற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண் சடலமாகக் கிடந்தார். உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரணம்
மரணம்

இதுகுறித்து பேசிய பள்ளிக்கரணை போலீஸார், ``பெரும்பாக்கம் ஏரியில் பெண் சடலம் மிதப்பதாகத் தகவல் வந்தது. இங்கு வந்து பார்த்தபோது பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. நீலம் மற்றும் பிங்க் கலரில் முழுக்கை சட்டையும் பிங்க் கலரில் பேன்ன்டும் அணிந்திருந்தார். மூக்குத்தி அணிந்திருந்த பெண்ணின் உடலில் வேறு அடையாளங்கள் எதுவும் காணப்படவில்லை. கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளனர். பின்னர், அதே கயிற்றால் உடலையும் கட்டி பெரும்பாக்கம் ஏரியில் வீசியுள்ளனர். கொலை நடந்து 2 அல்லது 3 நாள்கள் இருக்கும்.

மாமனார், கொழுந்தன் கொலை; கணவர் மாயம்!- மாமியார் கடத்தலால் சென்னைப் போலீஸை மிரளவைத்த மேனகா

பெரும்பாக்கம் , பள்ளிக்கரணை பகுதிகளில் இளம்பெண்கள் யாராவது மாயமாகியுள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். சுற்று வட்டாரங்களில் உள்ள காவலநிலையத்திலும் மாயமான பெண்கள் குறித்த பட்டியலையும் சேகரித்துள்ளோம். இந்த அடையாளங்களில் காணாமல் போன பெண்கள் யாராவது இருக்கிறார்களா என விசாரித்து வருகிறோம். பெரும்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர்.

மரணம்
மரணம்

ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணுக்கு 30 வயதுக்குள்தான் இருக்கும் என போலீஸார் கூறுகின்றனர். குடும்பப் பிரச்னை காரணமாகவோ, காதல் விவகாரத்திலோ அவர் கொலை செய்பப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மூக்குத்தி மற்றும் அவர் அணிந்திருந்த உடை ஆகியவற்றை வைத்து கொலையுண்ட பெண் ஆந்திராவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். பெரும்பாக்கம் பகுதியில் ஐடி நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் ஐ,டி ஊழியராக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். இதுதொடர்பாகத் தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.