Published:Updated:

`போலீஸாரைத் தாக்கும் கலவரக்காரர்கள்; வெளியான வீடியோ’- திக் திக் நிமிடங்களை விவரிக்கும் டெல்லி போலீஸ்

அனுஜ் குமார்
அனுஜ் குமார்

டெல்லி கலவரத்தின்போது வன்முறையாளர்கள் போலீஸாரைத் தாக்கும் வீடியோ காட்சிகளை டெல்லி போலீஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

டெல்லி கலவரத்தின்போது சாந்த் பாக் பகுதியானது கலவரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது வன்முறையாளர்கள் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். வன்முறையாளர்களால் போலீஸார் தாக்கப்படும் காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

அந்த வீடியோவில், ``சாலையின் நடுவே போலீஸ்காரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையின் இரண்டு பகுதிகளையும் ஆக்கிரமித்த கலவரக்காரர்கள் போலீஸாரை தாக்கத் தொடங்கினர். இதையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வெடிக்கச் செய்த போலீஸார் கலவரக்காரர்களை விரட்டினர். ஆனால், மீண்டும் போலீஸாரை சூழ்ந்துகொண்ட கலவரக்காரர்கள் கம்புகள் மற்றும் கற்களைக் கொண்டு போலீஸாரைத் தாக்குகின்றனர். கலவரக்காரர்களிடமிருந்து போலீஸார் தப்பித்து ஓடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.”

இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது அங்கு பணியில் இருந்த டெல்லி காவல்துறை உதவி ஆணையர் அனுஜ் குமார் காயமடைந்துள்ளார். அவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

தலையில் 40 தையல்கள்; கண் முன்னே இறந்த தந்தை!- பிப்ரவரி 24-ம் தேதி இரவை விவரிக்கும் மகன்

இந்தச் சம்பவம் குறித்து பேசியுள்ள அனுஜ் குமார், ``பிப்ரவரி 24-ம் தேதி காலையில் நான், டிசிபி அமித் ஷர்மா ஆகியோர் வாசிராபாத் பகுதிக்குச் சென்றோம். வாசிராபாத் சாலையில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களை அப்புறப்படுத்தும் பணிக்காகச் சென்றிருந்தோம். அவர்களைக் கலைந்து செல்லுமாறு எச்சரித்தோம். அந்தச் சாலையில் மேலும் கூட்டம் கூடத்தொடங்கியதும் நாங்கள் தயார் நிலையில் இருந்தோம். அந்தக்கூட்டத்தில் இருந்த ஆண்களும் பெண்களும் எங்கள் மீது கற்களைக் கொண்டு வீசத் தொடங்கினர்.

சாலையின் இருபக்கங்களிலும் கலவரக்காரர்கள் சூழந்துக்கொண்டனர். நாங்கள் சாலையில் இருந்த டிவைடர் அருகே சிக்கிக்கொண்டோம். போராட்டக்காரர்கள் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டனர். அந்தப் பகுதியில் கட்டட வேலைகள் நடந்துவந்ததால் கற்கள், கம்புகள் என நிறைய இருந்தன. அவற்றைக்கொண்டு கலவரக்காரர்கள் தாக்கத் தொடங்கிவிட்டனர். எங்களைச் சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கினர். நான் பார்க்கும்போது டிசிபி அமித் ஷர்மா சார் டிவைடர் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். இந்தத் தாக்குதலின்போது ரத்தன் லாலும் எங்களுடன்தான் இருந்தார். காயமடைந்த ரத்தன் லாலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது டிசிபி அமித் ஷர்மாவும் அங்கே இருந்தார். அமித் ஷர்மா சாரை மிகுந்த சிரமப்பட்டு கலவரக்காரர்களிடமிருந்து மீட்டோம். ஒரு காரை அழைத்து அவரை தனியார் மருத்துவனைக்குக் கொண்டு சென்றோம்” என்றார்

அடுத்த கட்டுரைக்கு