Published:Updated:

திருட்டைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; காவலரை 12 முறை குத்திக் கொலைசெய்த திருடன் - அதிர்ச்சி சம்பவம்

கத்தியால் குத்தப்பட்ட கான்ஸ்டபிள்

டெல்லியில் திருடன் ஒருவன் காவலரை 12 முறை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருட்டைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; காவலரை 12 முறை குத்திக் கொலைசெய்த திருடன் - அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் திருடன் ஒருவன் காவலரை 12 முறை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கத்தியால் குத்தப்பட்ட கான்ஸ்டபிள்

ராஜஸ்தானின், சிகார் பகுதியைச் சேர்ந்தவர் ஷம்பு தயாள். இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர் டெல்லியிலுள்ள காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றிவருகிறார். கடந்த 4-ம் தேதி, அந்தப் பகுதியிலுள்ள குடிசைப் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், தன்னுடைய கணவரின் போனை அனிஷ் என்பவர் பறித்துக்கொண்டு, மிரட்டியதாகப் புகாரளித்திருக்கிறார்.

கைது
கைது

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரி, குறிப்பிட்ட நபரைக் கைதுசெய்துவர கான்ஸ்டபிள் ஷம்பு தயாளை அனுப்பியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சென்ற ஷம்பு தயாள், அந்த இடத்தை அடைந்ததும், அந்தப் பெண் அனிஷை அடையாளம் காட்டியிருக்கிறார். போலீஸ் கான்ஸ்டபிள் அனிஷைப் பிடித்து மிரட்டி, பறிக்கப்பட்ட போனைக் கைப்பற்றியிருக்கிறார். மேலும், குற்றம்சாட்டப்பட்டவரை மேற்கு டெல்லியிலுள்ள மாயாபுரி சந்தை வழியே அழைத்துச் சென்றிருக்கிறார்.

அப்போது திருடன் அனிஷ், தன்னுடைய சட்டைக்குள் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து ஷம்பு தயாளை குத்தத் தொடங்கினான். அனிஷ் அங்கு கூடியிருந்த மக்களுக்கு மத்தியிலேயே 12 முறை கத்தியால் குத்தியதில், கான்ஸ்டபிளுக்கு மார்பு மற்றும் வயிற்றில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், அந்தப் பகுதியிலிருந்த மற்றொரு காவலர் அனிஷை மடக்கிப்பிடித்துக் கைதுசெய்தார். அதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஷம்பு தயாள், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கான்ஸ்டபிளின் மறைவுக்குத் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, `அவருடைய குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்’ என இன்று அறிவித்திருக்கிறார்.