Published:Updated:

டெல்லி கோர்ட் துப்பாக்கிச்சூடு: ஜெயிலிலில் போட்ட திட்டம்; நண்பனைப் பழிதீர்த்த ரௌடி; என்ன நடந்தது?

டெல்லி கோர்ட்டில் கிரிமினல் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது, சிறையிலிருந்த மற்றொரு கிரிமினல் குற்றவாளிகளுக்கு மொபைல்போனில் உத்தரவுகளை வழங்கிக்கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லியில் கடந்த வாரம் பலத்த பாதுகாப்பையும் மீறி ரோஹினி கோர்ட்டில் நீதிபதி முன்பு ஜிதேந்தர் கோகி என்ற கிரிமினல் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலையில் ஈடுபட்ட இரண்டு பேர் நீதிபதி வெளியில் செல்லப் பயன்படுத்தும் வாசல் வழியாகத் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் சுட்டுக்கொலை செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலைச் சம்பவத்தால் கோர்ட்களின் பாதுகாப்பு குறித்துப் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். ஏற்கெனவே திகார் சிறையில் ரௌடிகளும் அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து செயல்படுவதாக சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. போலீஸாரின் விசாரணையில் ஜிதேந்தரின் பரம எதிரியான சுனில் மான் என்று அழைக்கப்படும் தில்லு சிறையில் இருந்துகொண்டே தனது ஆட்கள் மூலம் இந்தக் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. போலீஸார் நடத்திய விசாரணையில் தில்லுவுக்கும், ஜிதேந்தருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பகை இருந்தது என்கிறார்கள்.

கோர்ட்டுக்கு வெளியில் ஆம்புலன்ஸ்
கோர்ட்டுக்கு வெளியில் ஆம்புலன்ஸ்
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கேங்ஸ்டர் சுட்டுக் கொலை! - வழக்கறிஞர் வேடத்தில் வந்தவர்கள் வெறிச்செயல்

கடைசியாக இரண்டு பேருமே சிறையில் இருந்திருக்கின்றனர். தில்லு, டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர், ஜிதேந்தர் கோர்ட்டுக்கு அழைத்துவரப்படும் செய்தியை முன்கூட்டியே தெரிந்துகொண்டு கோர்ட்டில் வைத்து கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக கொலை நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே சிறையில் சட்டவிரோதமாக தில்லு மொபைல்போனை வாங்கி வைத்துக்கொண்டு வெளியிலுள்ள தனது ஆட்களுக்கு உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்திருக்கிறார். அதோடு அவ்வப்போது என்ன நடக்கிறது என்ற தகவலும் தில்லுவுக்கு வந்திருக்கிறது. அதோடு தில்லு தனது ஆட்களுடன் அடிக்கடி மொபைல்போனில் வீடியோ கால் மூலமும் பேசியிருக்கிறார். அவ்வாறு ஜெக்தீப் என்ற தனது கூட்டாளியுடன் தில்லு வீடியோ காலில் பேசியதை யாரோ ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளனர்.

அந்தப் படம் உண்மையானதுதானா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கோர்ட்டில் கொலை நடந்தபோது கொலையாளிகள் ஜெக்தீப் உட்பட இரண்டு பேரிடமும் தில்லு மொபைல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும், எப்படித் தப்பிச்செல்ல வேண்டும் என்பது குறித்தும் அடிக்கடி தெரிவித்துக்கொண்டே இருந்திருக்கிறார் என்று போலீஸ் விசாரணை தெரிவிக்கிறது. ஜிதேந்தரைக் கொலை செய்த இரண்டு பேருடன் மேலும் இரண்டு பேரும் வந்திருக்கின்றனர். அவர்கள் கோர்ட்டுக்கு வெளியில் காரில் காத்துக்கொண்டிருந்தனர். உமங் யாதவ், வினய் ஆகிய இரண்டு பேரையும் அடுத்த இரண்டு நாளில் போலீஸார் கைதுசெய்துள்ளனர். நான்கு பேருமே ஒரே காரில்தான் வந்துள்ளனர். கொலையாளிகள் தப்பித்து வந்தால் அவர்களை அழைத்துச் செல்லும் நோக்கில் காரைத் தயார்நிலையில் வைத்திருந்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறையில் தில்லுவுக்கு எப்படி மொபைல்போன் கிடைத்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சிறையிலுள்ள அதிகாரிகளுக்கு இதில் தொடர்பிருப்பதாகக் கருதப்படுகிறது. திகார் சிறையிலேயே மொபைல்போன் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும்போது, மண்டோலி கோர்ட்டில் கிடைக்காதா என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ``தில்லு, ஜிதேந்தர் இரண்டு பேரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். இரண்டு பேரும் சேர்ந்தே கல்லூரியில் படித்தனர். கல்லூரித் தேர்தலில் இரண்டு பேரும் வேறு வேறு அணியை ஆதரித்தனர். அதில்தான் இருவருக்கும் இடையேயான பகை ஆரம்பமானது. அதுவே நாளடைவில் அவர்களுக்குள் பெரிய பகையாகி, இருவரும் தனித்தனி கூட்டத்தைக்கொண்டு கிரிமினல் வேலையில் ஈடுபட ஆரம்பித்தனர்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு