Published:Updated:

இந்தியர்களைக் குறிவைக்கும் சீன செயலிகள்; 2 மாதத்தில் 5 லட்சம் பேரை ஏமாற்றியது அம்பலம்!-உஷார் மக்களே

பணம் பறிக்கும் சீனச் செயலிகள்
பணம் பறிக்கும் சீனச் செயலிகள்

போலி முதலீட்டுச் செயலிகளின் மூலம் கவர்ச்சியான சலுகைகள், அறிவிப்புகளை வெளியிட்டு இந்தியா முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் ரூ.150 கோடி ஏமாற்றிய சீன மோசடி நிறுவனங்களுடன் தொடர்புடைய 11 பேரை டெல்லி சைபர் பிரிவு  போலீஸார் கைது செய்துள்ளனர். 

இந்தியாவில் மொபைல் செயலிகள் மூலம் பண மோசடியில் ஈடுபடும் கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எளிய முறையில் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற பேராசையே இத்தகைய மோசடிக் கும்பல்கள் உருவாக மூல காரணம். ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும் விளம்பரப்படுத்தப்படும் கவர்ச்சியான சலுகைகளைப் பார்த்துவிட்டு அடுத்த நொடியே கண்ணை மூடிக்கொண்டு போலி செயலிகளைப் பதிவிறக்கம் செய்துவிடும் இளைஞர்கள், முதலீடு என்ற பெயரில் பெரும் தொகையைச் செலுத்திவிட்டு ஏமாந்துவிடுகின்றனர்.

இந்த வகையில் தலைநகர் டெல்லியில் சைபர் க்ரைம் போலீஸார் சீனாவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்கள் சில இந்தியாவில் இயங்கிவருவதாக பயனர்களிடம் காட்டிக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டுவந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

இந்தியர்களைக் குறிவைக்கும் சீன செயலிகள்; 2 மாதத்தில் 5 லட்சம் பேரை ஏமாற்றியது அம்பலம்!-உஷார் மக்களே

கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களை ஏமாற்றிப் பணம் பார்க்கும் போலி செயலிகள் ஏராளமாகக் குவிந்துகிடக்கின்றன. அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த பலர் கூகுள் பிளே ஸ்டோரில் 'Power Bank' என்ற Online Earning செயலியைத் தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவந்திருக்கின்றனர். இந்திய நிறுவனத்தால் இயக்கப்பட்டுவரும் செயலி என்ற போலியான அங்கீகாரத்துடன் பயனர்களின் பயன்பாட்டில் இருக்கும் இந்த மொபைல் செயலியில் 100 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பயனர்கள் முதலீடு செய்யலாம். அதன்படி, ஆரம்பத்தில் 100 ரூபாயை முதலீடு செய்பவர்களுக்குக் குறிப்பிட்ட கால அளவில் 150 ரூபாயாகத் திரும்பக் கிடைத்திருக்கிறது. 100-150 ரூபாய் கிடைத்ததும் அடுத்தகட்டமாக 500 ரூபாய் முதலீடு செய்திருக்கின்றனர். அதற்கும் கணிசமான அளவு கூடுதல் தொகை கிடைத்திருக்கிறது. அதனால் செயலியை முழுமையாக நம்பியவர்கள் ரூ.1,000, 2,000 என அதிக அளவு தொகைகளை முதலீடு செய்து வந்துள்ளனர்.

மேலும், செயலியில் குறைந்தபட்ச withdrawal லிமிட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பயனர்களின் முதலீடும், அதற்கான கூடுதல் தொகையும் எடுக்க முடியாமல் அவரவர் கணக்கிலேயே இருந்துள்ளது. இப்படியாகவே 500-க்கு 700, 1,000-க்கு 1,500 எனத் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்துள்ளனர். இந்தநிலையில், குறிப்பிட்ட அளவு தொகையை அவர்கள் முதலீடு செய்ததும், ஒரு கட்டத்தில் செயலியில் அனைவரது கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. அது தொடர்பாகச் செயலியில் வழங்கப்பட்டிருந்த உதவி எண்களை அழைத்தால் அங்கும் பதில் கிடைக்கவில்லை. இந்தச் செயலியின் மூலம் பலரும் குறைந்தபட்சம் 5,000 முதல் 50,000 ரூபாய் வரை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, ஏமாந்தவர்களில் சிலர் மட்டும் மோசடி குறித்து டெல்லி சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்திருக்கின்றனர். 'Power Bank' செயலியின் மூலம் பணத்தை இழந்தவர்களின் புகார்களை சைபர் போலீஸார் விசாரிக்கத் தொடங்கிய நிலையில், மேலும் பல்வேறு போலிச் செயலிகளின் மூலம் பணத்தை இழந்தவர்களும் அடுக்கடுக்காகப் புகார்களை அளித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்திய டெல்லி சைபர் போலீஸார் இத்தகைய போலிச் செயலிகளின் மூலம் பல லட்சம் பேர், கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்திருப்பதைக் கண்டறிந்தனர்.

இந்தியாவைச் சேர்ந்த ஏமாற்றுப் பேர்வழிகளாகத்தான் இருக்கும் என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிய போலீஸாருக்கு இந்தப் பண மோசடிச் சம்பவங்களுக்குப் பின்னால் சீன நிறுவனங்கள் சில இயங்கிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து விசாரித்ததில், இந்தியாவைச் சேர்ந்த சிலர் இங்கிருந்தபடி சீன நிறுவனங்களுக்கு இந்த மோசடிகளில் உதவிவந்தது தெரியவந்தது. டெல்லி சைபர் போலீஸார் இந்த மோசடி தொடர்பாக இரண்டு ஆடிட்டர்கள், இர்ய் திபெத்தியப் பெண் உட்பட 11 பேரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள்
கைதுசெய்யப்பட்ட நபர்கள்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா, "கைதுசெய்யப்பட்டுள்ள நபர்களின் உதவியுடன் பல்வேறு சீனக் கும்பல்கள் இந்தப் பண மோசடியில் ஈடுபட்டுவந்திருக்கின்றன. ஆன்லைன் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் இரண்டு மாதத்தில் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 150 கோடி ரூபாய் ஈட்டியிருக்கின்றனர். தற்போது முதற்கட்டமாக, ரூபாய் 11 கோடியைப் பல்வேறு வங்கிக் கணக்குகளிலிருந்து பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும், 97 கோடி ரூபாயை மோசடியில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஹரியானாவைச் சேர்ந்த ஆடிட்டரிடமிருந்து பறிமுதல் செய்திருக்கிறோம். அந்த ஆடிட்டர் சீன நிறுவனங்களுக்காக 100-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலம் மக்களை ஏமாற்றியிருக்கிறார்.

செலுத்தும் தொகைக்கு இரு மடங்கு லாபம் கிடைக்கும் என்று விளம்பரங்கள் மூலமாக மக்களை நம்பவைத்து, அவர்களின் ஆசைகளைத் தூண்டி ஏமாற்றியுள்ளார். மணிக்கணக்கில், நாள் கணக்கில், மாதக்கணக்கில் எனப் பல வகைகளில் மக்களை முதலீடு செய்யவைத்து ஏமாற்றியிருக்கின்றனர். 'Power Bank', 'EZPlan ' உள்ளிட்ட இன்னும் சில செயலிகளை இந்த மோசடிக்குப் பயன்படுத்தியிருக்கின்றனர். தற்போது வரையிலும் இந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கின்றன. இதில் 'Power Bank' செயலி சமீபமாக டிரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பெங்களூரைச் சேர்ந்த நிறுவனங்கள் என்ற அடையாளத்துடன் இயங்கிவரும் இந்தச் செயலிகள் உண்மையில் சீனாவிலிருந்து இயங்கிக்கொண்டிருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். மேலும் செயலியில், 'Access To Camera', 'Read Contact Details' மற்றும் தேவையற்ற பல விஷயங்களுக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளதால் பயனர்களின் அந்தரங்கத் தகவல்கள் திருடப்பட்டுள்ளனவா என்றும் விசாரித்துவருகிறோம்" என்றார்.

டிஜிட்டல் இந்தியா என்றாலும் இங்கு டிஜிட்டலில் பணத்தை அவ்வளவு எளிதில் சம்பாதித்துவிட முடியாது என்ற உண்மையை உணர்ந்தால் மட்டுமே நம்மால் இது போன்ற மோசடிகளைத் தவிர்க்க முடியும்!

அடுத்த கட்டுரைக்கு