Published:Updated:

70 கி.மீ வரை வீசப்பட்ட கணவனின் உடல்; திட்டம் வகுத்த மனைவி! - 8 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய காதலன்

டெல்லியில், 8 வருடங்களுக்கு முன் காணாமல் போனவர் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

டெல்லியைச் சேர்ந்த ஜெய் பகவான் என்பவர், தனது மகன் ரவியைக் காணவில்லை என 2011-ம் ஆண்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நாள்கள்தான் கடந்தன. ஆனால், மகன் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் வேதனையடைந்த ஜெய் பகவான், டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து, இந்த வழக்கை குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின்னர்தான் இந்த வழக்கு விசாரணை வேகமெடுத்தது.

திருமணமான சில மாதங்களில் ரவி காணாமல் போனதும், அவரின் மனைவி சகுந்தலா வேறொரு திருமணம் செய்துகொண்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், காவல்துறையினர் விசாரணையில், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் பெறமுடியவில்லை. சகுந்தலாவின் கணவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் கூறிய தகவல்கள் நம்பும்படியாக இருந்தாலும், போலீஸாரின் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. ரவிக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. இந்த விவகாரம் காவல்துறையினருக்கு சற்று தலைவலியை ஏற்படுத்தியது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

2010-ம் ஆண்டு, ஆல்வார் பகுதிக்குக் கட்டட வேலைக்குச் சென்ற போதுதான் சகுந்தலாவை சந்தித்துள்ளார் ரவி. சகுந்தலாவை பிடித்துப்போக, அவரின் குடும்பத்தினரிடம் பெண் கேட்டுள்ளார். அவர்களின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால், இந்த திருமணம் சகுந்தலாவின் விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயத்தின் பேரில்தான் நடந்தது என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

சகுந்தலா, அதேபகுதியைச் சேர்ந்த கமல் என்பவரைக் காதலித்துவந்துள்ளார். கமலுக்கு நிரந்தரமான வேலை எதுவும் இல்லை என்பதால், இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்தான் ரவி பெண் கேட்டுச் சென்றுள்ளார். சகுந்தலாவைக் கட்டாயப்படுத்தி ரவிக்குத் திருமணம் செய்துகொடுத்தனர். திருமணமான சில நாள்களிலேயே சகுந்தலா தனது கணவர் வீட்டிலிருந்து வெளியேறி, தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

ஒருவாரம் கழித்து, மீண்டும் ரவியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், தனது சகோதரி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ரவியிடம் அவர் கூறியுள்ளார். சகுந்தலாவை, அவரது சகோதரி வீட்டில் ரவி கொண்டுபோய் விட்டுள்ளார். இதன் பின்னர்தான் ரவி மாயமானார். ரவி அங்கிருந்து யாருடன் சென்றார் என காவல்துறையினர் சகுந்தலாவிடம் விசாரித்துள்ளனர். தனக்கு எதுவும் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். டெல்லி காவல்துறையின் தீவிர விசாரணைக்குப் பின்னர் சகுந்தலா, அவரது காதலன் கமல் மற்றும் நண்பர் ஒருவர் மூவரும் ரவியைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

கொலை
கொலை

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “ ரவியின் தந்தை தனது புகாரில், சகுந்தலா மற்றும் அவரது சகோதரர் ராஜு இருவரும் தனது மகனைக் கடத்திவிட்டதாகக் கூறியிருந்தார். அதனடிப்படையில் விசாரனை மேற்கொண்டோம். 2012-ம் ஆண்டு, சகுந்தலா வேறொருவரை மணந்தார். சகுந்தலா, அவரது சகோதரர் ராஜு மற்றும் இரண்டாம் கணவர் கமல் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தச் சோதனையில் மூவரும் சிக்கவில்லை. அதன்பின் அவ்வப்போது விசாரணைகள் நடத்தப்பட்டன. 2017-ம் ஆண்டு மீண்டும் அவர்களை விசாரணைக்கு அழைத்தோம். கமல் மற்றும் ராஜு இருவரும் சம்மதித்தனர். ஆனால் சகுந்தலா வர மறுத்துவிட்டார். கமல் இந்தமுறை சிக்கிக்கொண்டார். ரவி காணாமல் போன விவகாரத்தில் ராஜுவுக்குத் தொடர்பில்லை என்பதை உறுதிசெய்தோம்.

தான் மாட்டிக்கொண்டதைத் தெரிந்துகொண்ட கமல், தலைமறைவாகிவிட்டார். சகுந்தலா குறித்த விவரமும் தெரியவில்லை. கமல் குறித்த விவரங்களைத் தெரிவித்தால் ரூ.50,000 பரிசு கிடைக்கும் என அறிவித்தோம். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 27-ம் தேதி கமல் கைதானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவித்தார்.

சகுந்தலாவின் விருப்பம் இல்லாமல்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கமலை சந்தித்துப் பேசியுள்ளார். ரவியைத் தீர்த்துக்கட்டினால்தான் நாம் இருவரும் சேர்ந்து வாழமுடியும் என இருவரும் எண்ணியுள்ளனர். கமலின் அறிவுறுத்தலின்படி, ரவி இல்லத்துக்கு சகுந்தலா சென்றுள்ளார். அருகில் இருக்கும் தனது சகோதரி வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். ரவியின் வீட்டுக்கு வந்த கமலை தனது உறவினர் என சகுந்தலா அறிமுகப்படுத்தியுள்ளார். மூவரும் காரில் அவரது சகோதரி வீட்டுக்குச் சென்றனர். சகுந்தலாவை இறக்கிவிட்டு, ரவி மற்றும் கமல் காரில் சென்றுள்ளனர்.

கைது
கைது

கமல், தான் வைத்திருந்த கயிற்றால் ரவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். கமலின் கார் ஓட்டுநர் கணேஷ் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து, ரவியின் உடலை ஆல்வார் பகுதியில் கொண்டுசென்று புதைத்தனர். இந்நிலையில், ரவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, மாட்டிக்கொள்வோம் என கமலுக்குப் பயம் வந்துள்ளது.

இதனையடுத்து, ரவியைப் புதைத்த இடத்துக்குச் சென்று உடலை மீண்டும் வெளியில் எடுத்துள்ளனர். ரவியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி, ஆல்வார் ஹரியானா சாலையில் சுமார் 70 கி.மீ தூரத்தில், பல்வேறு பகுதியில் வீசியுள்ளார். மீதி இருந்த உடல் பாகத்தை எரித்துள்ளனர். சகுந்தலா குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இவர்களுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கமல் மற்றும் கணேஷ் இருவரையும் கைதுசெய்துள்ளோம். சகுந்தலா தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆனால், எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. விரைவில் அவரையும் கைது செய்வோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.