Published:Updated:

மல்யுத்த வீரர் சுஷில் குமார்: `தேடப்படும் நபர்; தகவல் தந்தால் ரூ.1 லட்சம் பரிசு!’ - டெல்லி காவல்துறை

சுஷில் குமார்
சுஷில் குமார்

மல்யுத்த வீரர் சாகர் ராணா கொலை வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான சுஷில் குமாரை பற்றிய தகவல்களைக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த மே 5-ம் தேதி, மல்யுத்த வீரரான சுஷில் குமார் மற்றும் அவரின் கூட்டாளிகள், 23 வயது மல்யுத்த வீரரான சாகர் ராணாவை வீட்டிலிருந்து கடத்தி, டெல்லியிலுள்ள சத்ராஸல் அரங்குக்குக் கொண்டு சென்றனர்.

அங்குள்ள பார்க்கிங் பகுதியில் சாகர் ராணா, சுஷில் குமார் தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சாகர் ராணாவை சுஷில் குமாரும், அவர்களின் நண்பர்களும் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். ஒரே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் இருவருக்கும் இடையில் அவ்வப்போது ஏற்பட்டுவந்த பிரச்னைகளால் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

மல்யுத்த வீரர் சுஷில் குமார்: `தேடப்படும் நபர்; தகவல் தந்தால் ரூ.1 லட்சம் பரிசு!’ - டெல்லி காவல்துறை

மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாகர் ராணா, சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து, சுஷில் குமார் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து சுஷில் குமாரைத் தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவருகிறார். முதலில் ஹரித்துவார் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், பின் அங்கிருந்து ரிஷிகேஷ் சென்றதாகவும், தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருப்பதால், நாட்டைவிட்டு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பித்தனர்.

மேலும் சுஷில் குமாரைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அவரின் கூட்டாளியான அஜய் குமார் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே டெல்லி நீதிமன்றம், சுஷில் குமாருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இதற்கிடையே டெல்லி உயர் நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கோரி, சுஷில் குமார் தரப்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு