Published:Updated:

``இவ்வளவு குரூர கொலையைப் பார்த்ததில்லை!” - ஐ.பி அதிகாரி பிரேதப் பரிசோதனை அதிர்ச்சி

தாகீர், அங்கித்
தாகீர், அங்கித்

டெல்லியில் வன்முறை வெடித்த தினமான 24-ம் தேதி மாலை தாகீரின் வீட்டின் மேற்கூரையில் நின்று ஏராளமானோர் கற்களை வீசும் வீடியோ வைரலானது.

டெல்லியில் வன்முறை வெறியாட்டம் தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. டெல்லியில் வன்முறை வெடித்த ஞாயிற்றுக்கிழமையில் (பிப்ரவரி 23-ம் தேதி) இருந்து செவ்வாய்க்கிழமை வரை, `வன்முறையாளர்கள் தாக்குகின்றனர்' என்று போலீஸாரிடத்தில் உதவிகேட்டு 11,500 போன் அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், பல அழைப்புகளுக்கு போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க முடியாமலும், செயல்பட முடியாமல் கையறு நிலையிலேயே இருந்துள்ளனர்.

வன்முறை சம்பவத்தின்போது, அங்கித் சர்மா என்ற ஐ.பி அதிகாரியும் கொல்லப்பட்டார். சாந்த் பாக் பகுதியில் கழிவுநீர் சாக்கடையில் இருந்து அவரின் உடல் மீட்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி 59-வது வார்டு உறுப்பினர் தாகீர் ஹூசைன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் வைத்து அங்கித் சர்மா கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

``சாந்த்பாக் பகுதி நிலவரத்தை ஆராயச் சென்ற அங்கித் சர்மாவை, தாகீர் ஹூசைன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கும்பல், அங்கிருந்த ஒரு கட்டடத்துக்குள் இழுத்துச் சென்று சராமரியாக தாக்கியுள்ளது. அங்கித் சர்மாவை மீட்க முயன்றவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆசிட் பாட்டில்களையும் அந்தக் கும்பல் வீசியது'' என்று அங்கித் சர்மாவின் தந்தை ரத்தன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

அங்கித் சர்மா கொலை செய்யப்பட்ட கட்டடம் தாகீர் ஹூசைனுக்குச் சொந்தமானது. அங்கித் சர்மா இறந்த பிறகு கட்டடத்தின் அருகிலிருந்த, சாக்கடைக்குள் அவரின் உடலை வீசியுள்ளனர்.

`CAA விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டோம்!' எடப்பாடி பழனிசாமி யோசனையும் மத்திய அரசின் முட்டுக்கட்டையும்

பிரேதப் பரிசோதனையில், அங்கித் சர்மாவின் உடலில் பல முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும் உடல் முழுவதும் கத்திக்குத்துகள் இருப்பதும் தெரியவந்தததாக என்.டி.டி.வி செய்தியாளர் நீதா ஷர்மாவின் ட்விட் பதிவை ஆதாரமாக காட்டி `ஃப்ரீ பிரஸ் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது. `தங்கள் வாழ்நாளில் இப்படியொரு குரூரமான கொலையை பார்த்ததில்லை ' என்று அங்கித் சர்மாவுக்கு பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல் உள்ளது.

``அங்கித் சர்மா குறிவைத்து கொல்லப்பட்டுள்ளார். அவரின் உடலில் உள்ள காயங்களைப் பார்க்கும்போது வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்டது இல்லை'' என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டெல்லியில் வன்முறை வெடித்த தினமான 24-ம் தேதி மாலை தாகீரின் வீட்டின் மேற்கூரையில் நின்று ஏராளமானோர் கற்களை வீசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவில் தன் கையில் பெரிய கட்டையுடன் வீட்டின் மேற்கூரையில் தாகீர் நின்றுகொண்டிருப்பதுபோல காட்சிகள் பதிவாகியிருந்தன. ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டுகளை தாகீர் மறுத்துள்ளார்.

பாதுகாப்பு கருதி நான் என் வீட்டிலிருந்து குடும்பத்துடன் வெளியேறி விட்டேன்
ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர்

``என் வீட்டுக்குள் ஒரு கும்பல் புகுந்து தாக்க முயன்றது. அவர்களை விரட்டவே கையில் கட்டையுடன் வீட்டின் மேற்கூரையில் நின்றுகொண்டிருந்தேன். அங்கித் சர்மா கொல்லப்பட்டதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னை டார்கெட் வைத்து செயல்படுகிறார்கள். அன்றைய தினம் இரவு 9 மணியளவில் என் வீட்டில் பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னிலையில், போலீஸார் சோதனையிட்டனர். அதற்குப் பிறகு பாதுகாப்புக் கருதி நான் என் வீட்டிலிருந்து குடும்பத்துடன் வெளியேறிவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

ஆனால், அங்கித் சர்மாவின் கொலை வழக்கில் தாகீரின் பெயர் சேர்க்கப்பட்டதையடுத்து, ஆம் ஆத்மி அவரை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. தாகீரின் வீட்டிலிருந்து பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆசிட் பாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரித்துள்ளது. அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் டெல்லி மாநிலச் செயலாளர் கே.எம். திவாரி ஆகியோர் கூட்டாக கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், `ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் ஒருவர் தன் வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு பெட்ரோல் குண்டுகளை வீசுவதைக் கண்டு நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம்.

பிருந்தா காரத்
பிருந்தா காரத்

போலீஸ், சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; விலக்கு அளிக்கக் கூடாது.

வன்முறையில் ஈடுபட்ட உங்கள் கட்சி கவுன்சிலர் மீது தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில், நீங்கள் எடுக்கும் கடுமையான நடவடிக்கை டெல்லி மக்களைச் சென்றடைய வேண்டும். டெல்லியில் அமைதியை ஏற்படுத்துவதிலும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் உங்களுக்கு என்றும் ஒத்துழைப்பு தருவோம். டெல்லி போலீஸ் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால், உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தையும் நாங்கள் அறிவோம்' என்று கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு